புதன், 3 ஏப்ரல், 2013

கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் பலரை குடும்பத்துடன் காணவில்லை!

கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் அருகே இலங்கை தமிழர் அகதிகள் முகாம் உள்ளது. இது தமிழகத்திலேயே மிகப்பெரிய திறந்தவெளி முகாம் ஆகும். இங்கு இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த 999 குடும்பங்களைச் சேர்ந்த 3,438 தமிழர்கள் வசித்து வருகின்றனர். இந்த முகாமில் பல தமிழர்கள் குடும்பத்தோடு காணவில்லை என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது. முகாம் பதிவில் உள்ளவர்கள் அனுமதியின்றி வெளியிடங்களுக்கு செல்லக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனால் கும்மிடிப்பூண்டி முகாமில் இருந்து சிலர் உரிய அனுமதி இன்றி கடல் வழியே படகு மூலம் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது.


பன்னாட்டு கடலில், இது போன்ற சட்ட விரோத பயணங்கள் மேற்கொள்வது ஒரு குற்ற செயலாக கருதப்படுகிறது எனவும், முறையான அரசு அனுமதி பெற்று வெளிநாடுகளுக்கு செல்லுமாறு அகதிகள் துறை சார்ந்த அதிகாரிகள் தொடர்ந்து முகாம் தமிழர்களிடம் அறிவுறுத்தி வருகின்றனர்.

முகாம் பதிவு பெற்றவர்கள் இப்படி சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் நடந்து கொள்வதால் அத்தகைய நபர்கள் குறித்தும் அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் கண்டறிவதில் பொலிஸாருக்கு பல வழிகளில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி முகாம் பதிவில் தங்கியிருந்த விஜயானந்தம் என்ற விஜி (வயது35), ஜான்சன் என்ற தயாளன்(40), தர்மசீலன் (37), சித்ரா (39) உள்பட சுமார் 7 குடும்பங்களைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட நபர்கள் குறித்து தற்போது எவ்வித தகவலும் இல்லை. மாயமான அவர்கள் அனைவரும் உரிய அனுமதி இன்றி கடல் வழியே அவுஸ்திரேலியா சென்றிருக்கலாம் என்ற தகவல் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட கியூ பரிவு பொலிஸார் அதிரடியாக தொடர்ந்து ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தகைய சட்ட விரோத செயலுக்கு உடந்தையான சில முகவர்கள் குறித்தும் கியூ பரிவு பொலிஸார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

மேலும், இம்மாதம் அரசு உதவித்தொகை வழங்கப்படும்போது முகாமில் உள்ளவர்கள் யார்? யார்?, அனுமதியின்றி வெளியிடங்ளுக்கு சென்றவர்கள் யார்? யார்? என்பதனை முழுமையாக கண்டறிந்து ஒரு விரிவான பட்டியலை தயார் செய்திடவும் கியூ பிரிவு பொலிஸார் திட்டமிட்டு உள்ளனர்.

இதேபோல் கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் இருந்து உரிய அனுமதி இன்றி கடல் வழியே ஆஸ்திரேலியா செல்வதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள கொக்கிலமேடு என்ற மீனவ கிராமத்தில் ரகசியமாக தங்கி இருந்த 9 பெண்கள் உள்பட 19 தமிழர்களை கியூபிரிவு பொலிஸார் பிடித்து மீண்டும் கும்மிடிப்பூண்டி முகாமிற்கு திருப்பி அனுப்பி வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. thenee,com

கருத்துகள் இல்லை: