கவுண்டமணி... ஆல் இன் ஆல் அழகுராஜா. தமிழ் காமெடி
கரகாட்டக்காரர்...

சுப்பிரமணிதான்
பெயர். பலரும் நினைப்பதுபோல், கவுண்டமணி என்பது சாதி சார்ந்த பெயர் அல்ல.
நாடகங்களில் மணி பின்னி எடுத்துக்கொண்டு இருந்த நாட்கள் அவை. நாடகங்களில்
அவர் ஏற்ற பாத்திரங்களிலும் சரி; மேடைக்குப் பின் சக நடிகர்களிடம்
பேசிக்கொண்டு இருக்கும்போதும் சரி; யார் என்ன பேசினாலும் நச் நச் என்று
கவுன்டர் கொடுப்பதால், செல்லமாக 'கவுன்டர்’ மணி ஆனார்.
காலப்போக்கில் அதுவே கவுண்டமணி ஆகிவிட்டது. அடிப்படையில் சாதியத்துக்கு எதிரானவர் நம்ம கவுண்டர்.

சினிமாவில்
சிவாஜிக்கு அடுத்து காலம் தவறாமைக்கு முன் உதாரணம் கவுண்டர். 7 மணிக்கு
ஷூட்டிங் என்றால், 6.30-க்கு ஸ்பாட்டில் இருப்பார்.

சென்னை,
தேனாம்பேட்டை '92சி’ நம்பர் வீட்டுக்கு சினிமாவில் தனி வரலாறு உண்டு.
பாக்யராஜ், ராமராஜன், செந்தில், ஜனகராஜ் என்று பலர் தங்கி இருந்த இடம் அது.
தேனாம்பேட்டை செட் என்று அழைக்கப்படும் அந்தக் கோஷ்டியில் எல்லோருக்கும்
அண்ணன்... கவுண்டமணி.

''டேய்... செந்தில்...'', ''அண்ணே...'' - காலத்தை வென்ற இந்த காமெடி ஜோடி சினிமாவில்
மட்டும் அல்ல; நிஜத்தில் அழைத்துக்கொள்வதும் இப்படித்தான். ஆனால்,
பேச்சுவார்த்தை ரொம்ப மரியாதையாக இருக்கும்.

சினிமாவைப்
பார்த்து, 'நகைச்சுவை நடிகர்தானே... இவருக்கு எல்லாம் என்ன தெரியும்?’
என்று கவுண்டரை மதிப்பிட்ட பலர் அவரை நேரில் பார்த்து அரண்டுபோய்
இருக்கிறார்கள். அரசியலில் தொடங்கி தத்துவங்கள் வரை பல விஷயங்களில்
தீவிரமான பார்வை உண்டு. முக்கியமாக உலக சினிமாவில். 'இதுவரைக்கும் யாரும்
பண்ணாத கதை சார் இது’ என்று யாராவது அவர் முன் ஆரம்பித்தால், பார்ட்டி
அதோடு காலி என்று அர்த்தம்.

நல்ல
விஷயம் என்று மனதில் பட்டுவிட்டால், முன் அறிமுகம் - வயது வித்தியாசம்
எல்லாம் பார்க்காமல், அவரே கூப்பிட்டுப் பாராட்டு வார். அதேசமயம், ஒரு
விஷயம் பிடிக்கவில்லை என்றால், நேருக்கு நேராகச் சொல்லிவிடுவார்.

நட்புக்குப்
பெரிய மரியாதை கொடுப்பார். ஆனால், மனதில் பட்டதைப் பேசுபவர் என்பதால்,
நண்பர்கள் குறைவு. சினிமாவில் கவுண்டருக்கு நெருக்கமான நண்பர்கள்
பட்டியலில் இன்னமும் இருப்பவர்கள் சத்யராஜும் மணிவண்ணனும்.

கடந்த
அக்டோபர் 8-ம் தேதி ராமராஜனுக்குப் பிறந்த நாள். காலையில் போனை எடுத்தால்
முதல் வாழ்த்து கவுண்டமணியிடம் இருந்து. நீண்ட இடை வெளிக்குப் பின்
பேசியவர் 'நீ திரும்பி நல்லா வருவப்பா’ என்று வாழ்த்தி இருக்கிறார்.
''மார்க்கெட் போச்சுன்னா சினிமால எல்லாம் போச்சுனு சொல்வாங்க. கவுண்டர்
அண்ணன் அபூர்வம்'' என்று பார்ப்பவர் களிடம் எல்லாம் நெகிழ்கிறார்
ராமராஜன்.

தமிழ்,
இனம் என்றெல்லாம் போலியாகப் பேசிக்கொண்டு காலம் தள்ளுபவர்களை ஓட்டி
எடுத்துவிடுவார். ''என்னமோ தமிழையே இவனுவோதான் கண்டுபிடிச்ச மாதிரியும் நாம
எல்லாம் வாடகைக்கு அதை எடுத்து ஓட்டுற மாதிரியும்... நான்சென்ஸ்''
என்பார். பிரபாகரன் மீது மரியாதை உண்டு. ஈழப் போரின் இறுதி நாட்களில்
உருக்குலைந்துபோய் இருந்திருக்கிறார்.

சுய
விளம்பரம், மீடியா புகழ்... இதை எல்லாம் கொஞ்சமும் சட்டை செய்ய மாட்டார்.
''நாம எல்லாம் போய் நாலு பேருக்குக் கருத்து சொல்ல என்ன தகுதிப்பா
இருக்கு?'' என்பார். பத்திரிகையாளர்கள் பார்க்கச் சென்றால், எல்லாவற்றையும்
பேசிவிட்டு, ''இந்தப் பேட்டி, கீட்டி எல்லாம் வேணாம்; நாம நண்பர்களா
இருப்போம்'' என்று நாசூக்காக அனுப்பிவிடுவார்.

''நான்
காசுக்காக நடிச்சேன்; நீங்க சந்தோஷத்துக்காகப் பார்த்தீங்க. நமக்கு உள்ள
உறவு அவ்வளவுதான்; தியேட்டரோடு முடிஞ்சுபோச்சு. சும்மா தலைவன் - ரசிகன்னு
எல்லாம் சொல்லி ஏமாத்திக்காதீங்க. குடும் பத்தைக் கவனிங்க. அதுதான்
முக்கியம்!'' - தன்னைப் பார்க்க வெறியோடு வரும் ரசிகர்களுக்கு கவுண்டர்
சொல்லும் ஒரே அறிவுரை இதுதான்!
vikatan.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக