செவ்வாய், 2 ஏப்ரல், 2013

சேது சமுத்திர திட்டம்: தமிழக அரசின் முடிவு என்ன?

புதுடில்லி:"சேது சமுத்திர திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக, தமிழக அரசின் நிலை என்ன என்பதை இரண்டு வாரத்திற்குள் தெரிவிக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
இந்தியா - இலங்கை இடையே, பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடாவை இணைக்கும் வகையில், சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை, 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நிறைவேற்ற, மத்திய அரசு திட்டமிட்டது. இதற்கான பணிகளுக்காக, 2005ல் துவங்கி, 2012 ஜூன், 30ம் தேதி வரை, 830 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டது.இந்த கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற, ராமர் சேது பாலத்தை இடிக்க தீர்மானிக்கப்பட்டது. இந்த ராமர் பாலம் என்பது, ராமாயண காலத்தில், இலங்கையை ஆண்ட அரசன் ராவணனை வீழ்த்தி, சீதையை மீட்க, கடவுள் ராமரின் வானர சேனைகளால் போடப்பட்டது என, நம்பப்படுகிறது. அதனால், இந்துக்கள் புனிதமானதாக கருதும், ராமர் சேது பாலத்தை இடிக்கக் கூடாது என, பா.ஜ., உட்பட, சில கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன.  வழக்கமாக பல பல்டிகளை அடிக்கும் ஜெயலலிதா அவர்கள் இத்திட்டத்தை நிறைவேற்றுவோம் என 2004 ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அறிவித்தார்...பிறகு ராமர்பாலம் என கூறி இத்திட்டத்தை எதிர்த்து பல்டி அடித்தார்..
இதுதொடர்பாக, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி உட்பட, சிலர் சுப்ரீம் கோர்ட்டில், மனுத்தாக்கல் செய்தனர்.இந்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற, 2007 ஆகஸ்ட், 31ல் தடை விதித்தது. அத்துடன், சேது சமுத்திர திட்டத்தை, ராமர் சேது பாலம் அல்லாது, மாற்று வழியில் நிறைவேற்ற வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து, ஆய்வு செய்து அறிக்கை தரும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.


அறிக்கை நிராகரிப்பு:

இதையடுத்து, ஆர்.கே.பச்சவ்ரி தலைமையில், கமிட்டி ஒன்றை பிரதமர் மன்மோகன் சிங் நியமித்தார். இந்த கமிட்டி, சேது சமுத்திர திட்டம், பொருளாதார ரீதியாகவும், சுற்றுச் சூழல் ரீதியாகவும் பலன் தரக்கூடியதல்ல என, தெரிவித்தது.இந்த அறிக்கையை நிராகரித்த மத்திய அரசு, "சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதில், உறுதியாக உள்ளோம்' என, சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது.இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில், நேற்று நீதிபதிகள், டாட்டூ மற்றும் கேகர் தலைமையிலான, "பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான சுப்பிரமணியசாமி, ""பச்சவ்ரி கமிட்டி அறிக்கையை, மத்திய அரசு நிராகரித்து விட்டது. அதனால், சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றலாமா, வேண்டாமா என்பதை, சுப்ரீம் கோர்ட்தான் முடிவு செய்ய,'' என்றார்.


"பதில் வேண்டும்':


இதன்பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
சேது சமுத்திர திட்டத்தை தொடர வேண்டும் என்பதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது. அதனால், இந்தப் பிரச்னையில், தமிழக அரசின் நிலை என்ன என்பது, இரண்டு வாரத்திற்குள் தெரிவிக்கப்பட வேண்டும்.தமிழக அரசு தாக்கல் பதில் மனுவின் நகல், அதை தாக்கல் செய்வதற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன், மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் வழக்கில் தொடர்புடையவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். dinamalar.com

கருத்துகள் இல்லை: