திங்கள், 11 நவம்பர், 2013

பிரான்சில் பயங்கரம் : இசை அரங்கில் குண்டு வெடிப்பு

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகையின் போது அரங்கில் குண்டு வெடித்ததில் ஒருவர் பலியானார். 12 பேர் படுகாயம் அடைந்தனர்.பிரான்ஸ் தலைநகர் பாரிசின் தென்மேற்கு பகுதியில் விளையாட்டு அரண்மனை என்ற மிகப் பெரிய அரங்கம் உள்ளது. இங்கு ஏராளமான கலை, அரசியல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இன்று ஞாயிற்று கிழமை என்பதால் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரங்கின் உள்ளே இசை கலைஞர்கள் ஒத்திகையில் ஈடுபட்டிருந்தனர். தொழில்நுட்ப கலைஞர்கள் வண்ண விளக்குகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.


பாரிஸ் நகரில் 1759ம் ஆண்டு நடைபெற்ற புரட்சி பற்றிய வரலாற்று இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்ததாக போலீசார் தெரிவித்தனர். நேற்று மாலை 6 மணி அளவில் அரங்கின் உள்ளே திடீரென குண்டு வெடித்தது. இதில் அரங்கமே அதிர்ந்தது. சுவர்கள் நிலநடுக்கம் ஏற்பட்டது போல் அதிர்ந்து விரிசல் விட்டன. இதில் ஒருவர் பலியானார். 12 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 5 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு மீட்பு படையினர் விரைந்து மீட்புப் பணி மேற்கொண்டனர்.

குண்டுவெடிப்பை தொடர்ந்து இன்று நடைபெற இருந்த இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தீவிரவாதிகளின் கைவரிசையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பாரிசில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
tamilmurasu.org

கருத்துகள் இல்லை: