ஞாயிறு, 10 நவம்பர், 2013

சி.பி.ஐ., சட்டப்பூர்வமானது அல்ல' என்ற ஐகோர்ட் உத்தரவுக்கு தடை

புதுடில்லி: 'சி.பி.ஐ., அமைப்பு, சட்டப்பூர்வமாக அமைந்தது அல்ல' என, கவுகாத்தி ஐகோர்ட் பிறப்பித்த, சர்ச்சைக்குரிய உத்தரவுக்கு, சுப்ரீம் கோர்ட், தடை விதித்துள்ளது. இது
குறித்து, பதில் அளிக்கும்படி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும், சி.பி.ஐ.,க்கும், நோட்டீஸ் அனுப்பியுள்ளது.அசாம் மாநிலத்தைச் சேர்ந்த, நவேந்திர குமார் என்பவர், தாக்கல் செய்த மனுவை விசாரித்த, கவுகாத்தி ஐகோர்ட், சமீபத்தில், ஒரு அதிரடியான உத்தரவை பிறப்பித்தது. அந்த உத்தரவு: இதுநாள் வரை ஒரு குண்டர் படையை வைத்து மிரட்டிக் கொண்டிருந்தனர் என்பதான் புலப் பட்டுவிட்டதே?
உத்தரவு செல்லாது: சி.பி.ஐ., சட்டப்படி அமைக்கப்பட்டது அல்ல. 1963ல், மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவின்படி தான், சி.பி.ஐ., அமைக்கப்பட்டது. உள்துறை அமைச்சகம் பிறப்பித்த, அந்த உத்தரவு செல்லாது.எனவே, சட்டப்பூர்வமாக அமைக்கப்படாத, சி.பி.ஐ., அமைப்புக்கு, யாரையும் கைது செய்யவோ, குற்ற வழக்குகளை விசாரிக்கவோ, அதிகாரம் இல்லை. சி.பி.ஐ., என்பது, போலீஸ் துறை அல்ல.இவ்வாறு, கவுகாத்தி ஐகோர்ட், உத்தரவு பிறப்பித்தது.இந்த உத்தரவு, நீதித் துறை மற்றும் அரசியல் வட்டாரத்தில், பரபரப்பையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது. சி.பி.ஐ., அமைப்பு, முக்கியத்துவம் வாய்ந்த, பல்வேறு வழக்குகளை விசாரித்துள்ளது. மேலும் பல வழக்குகளை, விசாரித்து வருகிறது.இந்நிலையில், கவுகாத்தி ஐகோர்ட்டின் உத்தரவால், சி.பி.ஐ.,யால், ஏற்கனவே நடத்தப்பட்ட விசாரணைகள், செல்லாமல் போகும் என்றும், தற்போது நடந்து வரும் விசாரணைகள் முடங்கும் என்றும், கூறப்பட்டது.கவுகாத்தி ஐகோர்ட் உத்தரவை சுட்டிக் காட்டி, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் விசாரணையை நிறுத்தும்படி, தி.மு.க.,வைச் சேர்ந்த, மத்திய தொலை தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜா, டில்லி சி.பி.ஐ., கோர்ட்டில், மனு தாக்கல் செய்தார். ஆனால், அந்த மனு, நிராகரிக்கப்பட்டது.

நீதித்துறைக்கு பாதிப்பு :

இந்த பரபரப்பான சூழ்நிலையில், கவுகாத்தி ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மத்திய அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில், நேற்று, மேல் முறையீடு செய்யப்பட்டது.

அந்த மனுவில் கூறப்பட்டதாவது:கவுகாத்தி ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவால், தற்போது, பல்வேறு கோர்ட்டுகளில் நடக்கும், 9,000 வழக்குகளின் விசாரணைகள் பாதிக்கப்படும். இது தவிர, சி.பி.ஐ.,யால், தற்போது விசாரிக்கப்பட்டு வரும், 1,000க்கும் மேற்பட்ட விசாரணைகளும் முடங்கும்.ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்காவிட்டால், நீதித் துறைக்கு கடும் பாதிப்பு ஏற்படுவதோடு, விசாரணையும், பல மடங்கு அதிகரிக்கும். பல்வேறு வழக்குகளில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டவர்கள், ஐகோர்ட் உத்தரவை சுட்டிக் காட்டி, தங்கள் மீதான, விசாரணைகளை கைவிடும்படி, கோர்ட்டுகளில், மனு தாக்கல் செய்துள்ளனர்.சி.பி.ஐ., முறைப்படி அமைக்கப்பட்டது தான். அந்த அமைப்பு, தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்த, 6,000 பேர், பல்வேறு வழக்குகளை விசாரித்து வருகின்றனர். இவை, அனைத்தும், முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, கவுகாத்தி ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிப்பதோடு, இந்த மனுவை, அவசர மனுவாகக் கருதி, விசாரிக்க வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

'கேவியட்' மனு தாக்கல்



இதற்கிடையே, கவுகாத்தி ஐகோர்ட்டில், ஏற்கனவே, மனு தாக்கல் செய்திருந்த, நவேந்திர குமார், சுப்ரீம் கோர்ட்டில், இது தொடர்பாக, 'கேவியட்' மனு தாக்கல் செய்திருந்தார்.அதில், 'என்னை விசாரிக்காமல், மத்திய அரசின் மேல்முறையீட்டு மனு மீது, எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது' என, அவர் கூறியிருந்தார்.இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் தலைமைநீதிபதி, பி.சதாசிவம், நீதிபதி, ரஞ்சனா தேசாய் ஆகியோர் அடங்கிய, 'பெஞ்ச்' முன், மத்திய அரசின் மனு, நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:ஐகோர்ட்டின் உத்தரவு, சி.பி.ஐ., விசாரித்து வரும், மற்ற வழக்குளை பாதிக்கும் என்ற, கவலை எங்களுக்கும் உள்ளது. இதனால், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள, மனுவை முழுமையாக ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளோம்.அதுவரை, 'சி.பி.ஐ., அமைப்பு, சட்டப்பூர்வமாக அமைந்தது இல்லை' என்ற, கவுகாத்தி ஐகோர்ட்டின் உத்தரவுக்கு, தடை விதிக்கப்படுகிறது. இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம், சி.பி.ஐ., ஆகியவை, பதில் அளிக்க வேண்டும். இந்த வழக்கின் விசாரணை, அடுத்த மாதம், 6ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.இவ்வாறு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.இதையடுத்து, கடந்த இரண்டு நாட்களாக நிலவி வந்த சர்ச்சைக்கு, தற்காலிக தீர்வு ஏற்பட்டுள்ளது.

கவுகாத்தி ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்காவிட்டால், நீதித் துறையில் கடும் பாதிப்பு ஏற்படும். முக்கியத்துவம் வாய்ந்த, பல்வேறு வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவர்கள், தங்கள் மீதான விசாரணையை ரத்து செய்யும் படி முறையிடுவர். தற்போது, சி.பி.ஐ.,யால் விசாரிக்கப்படும் வழக்குகள் முடங்கும்.
dinamalar.com

கருத்துகள் இல்லை: