அதன் விவரம் வருமாறு:
சிபிஐ இயக்குநருக்கு மத்திய அரசுத் துறையின் செயலர் அந்தஸ்தையோ, அதற்கு நிகரான அதிகாரத்தையோ வழங்க முடியாது. சிபிஐ சுதந்திரமாகச் செயல்படும் அமைப்பு என்பதை அரசு ஏற்கிறது. ஆனால், அந்த அமைப்பு அரசின் அங்கமான காவல் அலுவலகமாகத்தான் இருக்க வேண்டும். எனவே, சிபிஐ இயக்குநருக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கினால் அதேபோன்ற அதிகாரத்தை மற்ற காவல் அமைப்புகளின் தலைவர்கள் கோரவும் வாய்ப்புள்ளது.
சிபிஐ இயக்குநர் பதவிக்கு நியமிக்கப்படும் உயரதிகாரி, மத்திய அரசுத் துறைச் செயலர் பெறும் மாதச் சம்பளத்தைப் பெறுகிறார். அதற்காக அவரிடமே நிர்வாக முடிவுகளை எடுக்கும் முழு அதிகாரத்தை வழங்கிவிட முடியாது. சிபிஐக்கு உயரிய அதிகாரம் வழங்கக் கோருவது தவறான முன்மாதிரிக்கு வழிவகுக்கும்.
அரசாங்கத்தை வழிநடத்துவதும், திட்டங்களைச் செயல்படுத்துவதும் நிர்வாகத் துறையினரின் கடமை. அரசியலமைப்புச் சட்டமும் அதைத்தான் வலியுறுத்துகிறது. குறிப்பிட்ட துறை அமைச்சரிடம் மட்டும் நேரடியாகப் பதில் அளிக்க சிபிஐ இயக்குநர் கடமைப்பட்டவர் என்ற உரிமையை வழங்கினால், குற்றவியல் நடைமுறைச் சட்ட விதிகளின்படி அமல்படுத்தப்படும் பல்வேறு நிர்வாக நடவடிக்கைகளில் அது பாதிப்பை ஏற்படுத்தும்.
நமது அரசியலமைப்புச் சட்டத்தை நாடாளுமன்றம் மட்டுமே கட்டுப்படுத்தவோ, திருத்தவோ இறுதி அதிகாரம் பெற்றுள்ளது. சிபிஐ இயக்குநருக்கு தன்னாட்சி உரிமை கோருவது நாடாளுமன்றத்துக்கு இணையான உரிமையைக் கோருவதற்கு ஒப்பாகும். எனவே, சிபிஐ இயக்குநருக்கு தன்னாட்சி அதிகாரம் கோரும் மனுவை நிராகரிக்க வேண்டும் என்று பிரமாணப் பத்திரத்தில் மத்திய அரசு கூறியுள்ளது.
பின்னணி: நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு விவகாரத்தில் சிபிஐ தயாரித்த விசாரணை நிலவர அறிக்கையின் சில வரிகளை, கடந்த மே மாதம் மத்திய சட்ட அமைச்சராக இருந்த அஸ்வனி குமார் மாற்றியமைத்ததாக சர்ச்சை எழுந்தது.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் பிரசாந்த் பூஷண் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, உண்மை நிலையைத் தெளிவுபடுத்த சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, மீண்டும் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த சிபிஐ, விசாரணை அறிக்கையின் சில பகுதிகளை அஸ்வனி குமார் திருத்தியதை உறுதிப்படுத்தியது. இச் செயல்பாடுக்கு அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம் "சிபிஐ சுதந்திரமான அமைப்பு என்று கூறுகிறது. ஆனால், வழக்குக்குத் தொடர்பு இல்லாத மத்திய சட்ட அமைச்சரிடம் அறிக்கையை ஏன் சிபிஐ காண்பித்தது?' என்று கேள்வி எழுப்பியது.
இதையடுத்து, "புலனாய்வு அமைப்பு என்ற முறையில் சிபிஐ சுதந்திரமாக செயல்பட்டாலும் சட்ட ஆலோசனை, வழக்குரைஞர் நியமனங்கள் போன்ற விவகாரங்களில் சட்டத் துறையை சிபிஐ நாட வேண்டியுள்ளது. இந் நிலை மாற வேண்டுமானால் சிபிஐக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும்' என்று உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது. அதைத் தொடர்ந்து சிபிஐ மனு குறித்து பதில் அளிக்கும்படி உச்சநீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் அனுப்பியிருந்த நோட்டீஸýக்கு தற்போது மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக