வியாழன், 14 நவம்பர், 2013

ஏற்காட்டில் விஜயகாந்த் ஏன் ஒதுங்கி நிற்கிறார் ? வாக்கு வங்கி கரைந்த வண்டவாளம் ?

சென்னை: ஏற்காடு இடைத் தேர்தலில் திமுக, அதிமுக போட்டியிடுகிறது. மற்ற கட்சிகள் ஒதுங்கியுள்ளன. கடந்த காலங்களில் எந்தத் தேர்தலிலும் விடாமல் போட்டியிடும் தேமுதிக, இந்த முறை பெருத்த அமைதி காத்து வருகிறது. இதற்கான காரணம் புரியாமல் தவிப்புக்குள்ளாகியுள்ளனர் அக்கட்சியினர். வழக்கமாக இடைத் தேர்தல் வந்தால் தேமுதிக தனது வேலைகளை ஆரம்பித்து வேட்பாளரையும் இறுதி செய்து அறிவித்து விடும். ஆனால் இந்த முறை இதுவரை எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடாமல் பெருத்த அமைதி காத்து வருகிறார் விஜயகாந்த். அதேசமயம், சேலம் மாவட்ட தேமுதிக நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தியுள்ளார். போட்டியிடலாமா அல்லது ஒதுங்கியிருக்கலாமா என்று அவர் கேட்டதாக கூறப்படுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்காடு தொகுதியில் தேமுதிகவுக்கு 12,000 ஓட்டுக்கள் வரை கிடைத்தது. எனவே இந்த முறை போட்டியிட்டால் வெற்றி பெறலாம் (?) என்ற நம்பிக்கையில் அக்கட்சியினர் உள்ளனர். வேட்பாளரை அறிவித்தவுடன் பிரசாரத்தைத் தொடங்கவும் அவர்கள் தயார்தான். ஆனால் தலைவர் எதுவும் பேசாமல் இருப்பது அவர்களை சோர்வடைய வைத்துள்ளதாம். 16ம் தேதிதான் மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். நாளை அரசு விடுமுறை மனு தாக்கல் செய்ய முடியாது. எனவே இன்றும், 16ம் தேதியும் மட்டுமே அவகாசம் உள்ளது. இருப்பினும் முன்கூட்டியே வேட்பாளரை அறிவித்தால் ஆளுங்கட்சியினர் ஏதாவது குழப்பம் ஏற்படுத்தலாம் என்பதால் கடைசி நேரத்தில் கூட விஜயகாந்த் வேட்பாளரை அறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் அவரது கட்சியினர் உள்ளனர்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: