சனி, 16 நவம்பர், 2013

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிக்கு எதிரான பெண் வக்கீல் செக்ஸ் புகார் போலீஸ் விசாரணை தொடங்கியது

புதுடெல்லி, நீதிபதி மீதான பெண் வக்கீலின் செக்ஸ் புகாரில் புதிய திருப்பமாக, சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதிக்கு எதிராக போலீஸ் விசாரணை தொடங்கி உள்ளது. பெண் வக்கீல் செக்ஸ் புகார் ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிக்கு எதிராக, இளம் பெண் ஒருவர் கூறிய செக்ஸ் புகார் நாடு தழுவிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தகவல் வெளியானதும், சுப்ரீம் கோர்ட்டு தானே முன்வந்து, அந்த புகார் குறித்து விசாரிப்பதற்காக 3 நீதிபதிகள் கொண்ட குழு ஒன்றை அமைத்தது. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.சதாசிவம் அமைத்துள்ள இந்த விசாரணை குழுவில் நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, எச்.எல்.தத்து, ரஞ்சன் பி.தேசாய் ஆகிய மூன்று பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழு உடனடியாக தனது பணியை தொடங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. போலீசில் பரபரப்பு புகார்
செக்ஸ் புகார் கூறிய பெண் வக்கீல், திங்கட்கிழமை (18–ந் தேதி) 3 நீதிபதிகள் குழு முன்பாக ஆஜராகி வாக்குமூலம் கொடுக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.


இந்த நிலையில், 3 நீதிபதிகள் குழுவின் விசாரணை குறித்து சந்தேகம் தெரிவித்து, டெல்லி பல்கலைக்கழகத்தின் சட்டக்கல்வி துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் எஸ்.என்.சிங், டெல்லி திலக் மார்க் போலீஸ் நிலையத்தில் பரபரப்பான புகார் கொடுத்து இருக்கிறார்.
வீண் தாமதம் ஏன்?
அந்த புகாரில், ‘‘நான்கு சுவர்களுக்குள் நடைபெறும் விசாரணை என்பதால், மூன்று நீதிபதிகள் குழுவின் விசாரணை நியாயமாக நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. விசாரணையின்போது, செக்ஸ் புகார் கூறப்பட்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தவறு செய்தது நிரூபிக்கப்பட்டாலும் கூட, மேல் விசாரணைக்காக போலீசாரிடம்தான் அந்த வழக்கை அனுப்பி வைக்க வேண்டும். எனவே, இந்த விவகாரத்தில் விசாரணை என்ற பெயரில் வீணாக ஏன் தாமதிக்க வேண்டும்?’’ என்றும் கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.
விசாரணை தொடங்கியது
பேராசிரியரின் இந்த புகாரைத் தொடர்ந்து, இந்த வழக்கில் பூர்வாங்க விசாரணையை போலீசார் தொடங்கி இருப்பதாக, டெல்லி துணை போலீஸ் கமிஷனர் எஸ்.பி.எஸ்.தியாகி நிருபர்களிடம் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பெண் வக்கீலை தொடர்பு கொள்ள முயன்று வருவதாக கூறிய அவர், அதன்பின் இந்த வழக்கில் சட்டப்படி விசாரணை தொடரும் என்றும் அவர் கூறினார்.
இந்த வழக்கில் இதுவரை போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை. புகாரில் உரிய முகாந்திரம் உள்ளதா? என்பது குறித்து ஆரம்ப கட்ட விசாரணை மட்டுமே தொடங்கி உள்ளது. பாதிக்கப்பட்ட பெண் வக்கீலை தொடர்பு கொண்டதும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் மற்றொரு சமூக ஆர்வலரும், இளம் சட்டக்கல்லூரி மாணவி ஒருவரின் தாயாருமான நூதன் தாகூர் என்பவர், உத்தர பிரதேச மாநிலம் லக்னோ போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கிறார்.
அதில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிக்கு எதிரான செக்ஸ் புகாரின் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி இருக்கிறார்.
மேலும் ஒரு மாணவி செக்ஸ் புகார்
இதற்கிடையில், பெண் வக்கீல் செக்ஸ் புகார் கூறிய சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிக்கு எதிராக, மேலும் ஒரு சட்டக்கல்லூரி மாணவியும் செக்ஸ் புகார் கூறி இருக்கிறார். பெண் வக்கீல் கூறிய புகார், சமூக வலைத்தளத்தில் கடந்த 6–ந் தேதி இடம் பெற்று இருந்தது. தற்போது வெளியாகி இருக்கும் புதிய புகார், 11–ந் தேதி அன்று வலைத்தளத்தில் அந்த மாணவியின் பெயருடன் வெளியானது. ஆனால், அந்த பதிவு தற்போது நீக்கப்பட்டுவிட்டது.
2–வது புகார் கூறியுள்ள மாணவியும், கொல்கத்தாவில் உள்ள அதே சட்டக்கல்லூரியில் படித்தவர்தான். கடந்த ஆண்டில் மட்டும் மூன்று முறை செக்ஸ் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் தான் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததும், அந்த நீதிபதி இனி வேறு யாரிடமும் இதுபோல் நடந்து கொள்ள மாட்டேன் என்று கூறியதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.dailythanthi.com

கருத்துகள் இல்லை: