Viruvirupu
இந்த விவகாரம் தொடர்பாக வருமானவரித் துறை விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த ரூ. 28,000 கோடியும் பங்குச் சந்தை புரோக்கருடையதாக இருக்க முடியாது. இவர் மூலமாக தமிழகத்தைச் சேர்ந்த பெரும் புள்ளிகள் யாராவது அமெரிக்கப் பத்திரங்களில் முதலீடு செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.
அந்த விசாரணையில், முதலாவது நபர் சிக்கியுள்ளார். இவர், தாராபுரத்தை சேர்ந்த கொப்பரை வியாபாரி.
இவரது இடங்களில் நடத்தப்பட்ட ரெயிடில், பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதை வருமானவரித் துறை அதிகாரிகள் உறுதி செய்தனர். மொத்தம் ரூ.28,000 கோடி பண விவகாரத்தில், தாராபுரம் கொப்பரை வியாபாரி மட்டும் 2,500 கோடிக்கு பண பரிவர்த்தனை செய்திருக்கலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
சென்னையில் உள்ள தனியார் வங்கி மூலம் சமீபத்தில் எக்கச்சக்க அளவில் இந்திய பணம் அமெரிக்க டாலருக்கு மாற்றப்பட்டு பரிவர்த்தனை செய்யப்பட்டதை அடுத்தே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதை ஒரு தனி நபர் மட்டுமே செய்ததால் வங்கி நிர்வாகத்திற்கு சந்தேகம் ஏற்பட்டு, இதுபற்றி நிதித்துறை அமைச்சகத்தின் புலனாய்வு பிரிவுக்கும் தகவல் கொடுத்தனர்.
அதையடுத்து, அமெரிக்காவுக்கு பணத்தை பரிமாற்றம் செய்த நபரின் பின்னணி குறித்து விசாரணை நடத்த வருமானவரித் துறைக்கு புலனாய்வு பிரிவு மூலம் பரிந்துரை செய்யப்பட்டது. வருமானவரித் துறையினர் நடத்திய விசாரணையில் நாடு முழுவதும் மொத்தம் 27,500 கோடிக்கு பரிவர்த்தனை நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஒரு நபர் மட்டுமில்லாமல் பலருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.
இது தொடர்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த வகையிலேயே திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த கொப்பரை தேங்காய் வியாபாரி ராமலிங்கம் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து வருமானவரித்துறை புலனாய்வு பிரிவினர் தாராபுரத்தில் உள்ள ராமலிங்கத்தின் அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். அவரது அலுவலகத்தில் இருந்து அமெரிக்காவுக்கு நடந்த பணப்பரிவர்த்தனை தொடர்பாக வங்கி ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.
கோவை வருமானவரித்துறை அதிகாரிகள், “தாராபுரத்தில் நடத்தப்பட்ட சோதனையில் அமெரிக்காவில் முதலீடு செய்திருப்பது தொடர்பாக 5 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு ஆவணமும் ஒரு பில்லியன் டாலர் மதிப்பு கொண்டது. இதன் மூலம் எவ்வளவு பரிமாற்றம் நடந்தது, முழு பின்னணி குறித்து விசாரணை நடந்து வருகிறது” என்று கூறினர்.
அமெரிக்க சட்டத் திட்டங்கள்படி எந்த நாட்டை சேர்ந்தவரும் முதலீடு செய்ய முடியும். ஆனால், இந்தியாவை பொறுத்தளவில், வெளிநாட்டில் முதலீடு செய்வதற்கு சில விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த விஷயத்தில் நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்கு அதிகமாக அங்கு முதலீடு செய்வதற்கு பரிவர்த்தனை நடந்திருக்கிறது.
தற்போது, தாராபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தாராபுரத்தில் கொப்பரை வியாபாரி மட்டும் 2,500 கோடிக்கு பண பரிவர்த்தனை செய்திருக்கலாம் எனவும் அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
கொப்பரையில் எண்ணை எடுக்கலாம் என்று தெரியும். இவ்வளவு கோடிகள் எடுக்கலாம் என்று இப்போதுதான் தெரிகிறது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக