வெள்ளி, 4 ஜனவரி, 2013

பாமகவில் இருந்து 2000 பேர் திமுகவில் இணைந்தனர்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
சென்னை: வேலூர் மேற்கு மாவட்ட பாமக செயலாளர் சாமுவேல் செல்லபாண்டியன் தலைமையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் இன்று திமுகவில் சேர்ந்தனர். பின்னர் அவர்கள் உறுதி மொழி ஏற்றனர். இந்நிகழ்ச்சிக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார். இதில் கருணாநிதி பேசியதாவது: உறுதிமொழி ஏற்று கட்சியில் இணைந்து இருக்கிறீர்கள். சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கு நல்வாழ்வுக்கு வழி வகுக்கும் வகையில் உறுதிமொழி ஏற்றுள்ள நீங்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். ஒரு அமைப்பில் இருந்து இங்கு வந்துள்ள நீங்கள் அந்த அமைப்பு பற்றி குறை கூற தேவையில்லை. குறை, குற்றம் இருந்ததால்தான் திமுகவுக்கு வந்து இருக்கிறீர்கள்.


எனவே அது பற்றி பேச அவசியம் இல்லை. அந்த தலைமை ஒரு காலத்தில் எனக்கு மிக நெருங்கிய நட்பு கொண்ட தலைமையாக இருந்தது. அந்த தலைமை பற்றி நான் அவதூறாக விமர்சனம் செய்ததாக காட்ட முடியாது. ஆனால், என்னை வீணாக வம்புக்கு இழுத்து, தரக்குறைவாக தாக்கி பேசி, நீங்கள் இங்கே வர வழிசெய்து கொடுத்த உங்கள் முன்னாள் தலைமைக்கு என் நன்றி. தமிழ்நாட்டில் 5 முறை ஆட்சி புரிந்த இந்த இயக்கம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, ஒடுக்கப்பட்ட ஏழை மக்களுக்கு பணி செய்வதை கடமையாக கொண்டது. இந்த இனத்தை நம் இனத்தை சேர்ந்த காந்தி என்ற பெண்ணை என் மூத்த மகன் அழகிரிக்கு மணம் செய்து வைத்த போது எத்தனையோ பேர் மூக்கில் விரல் வைத்தனர். அதில் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

இப்படி ஒரு சமுதாய கலப்பு ஏற்பட வேண்டும். அவர் எந்த சாதி, இவர் எந்த சாதி என்று பிரித்து பேசினால் நாடு வாழாது. நம் நலிவு தீராது. எனவேதான் சாதி மறுப்பு திருமணங்கள் நடக்கின்றன. இந்த சமுதாயத்தின் எழுச்சிக்காக என் ஆயுள் உள்ள வரை பாடுபடுவேன். அதற்கு பிறகு என்ற கேள்விக்கு பதில்  இங்கே அமர்ந்திருக்கிற ஸ்டாலின் என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது. இவ்வாறு கருணாநிதி பேசினார். வேலூர் மாவட்ட திமுக செயலாளர் ஆர்.காந்தி வரவேற்றார். சுப.வீரபாண்டியன், பேராயர் சாமுவேல் ஆகியோர் பேசினர். திமுக துணை பொது செயலாளர் வி.பி.துரைசாமி, அமைப்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், கல்யாணசுந்தரம், தலைமை நிலைய செயலாளர்கள் உசேன், துறைமுகம் காஜா, சதாசிவம், முன்னாள் எம்பி முகமது சகி, சுந்தரமூர்த்தி, ஆறுமுகம், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். tamilmurasu.or

கருத்துகள் இல்லை: