புதன், 2 ஜனவரி, 2013

அம்பானியின் சேவையில் வீரப்ப மொய்லி

மைய அமைச்சரவை சமீபத்தில் மாற்றியமைக்கப்பட்டபொழுது, பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த ஜெய்பால் ரெட்டி அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, உப்பு சப்பில்லாத அறிவியல் – தொழில்நுட்பத் துறையின் அமைச்சராக அமர்த்தப்பட்டார். ஜெய்பால் ரெட்டி இப்படிப் பந்தாடப்பட்டதற்கு ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி கொடுத்த நெருக்குதல்தான் காரணம் எனப் பல்வேறு தரப்பிலிருந்தும் குற்றம் சுமத்தப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டில் எந்தளவிற்கு உண்மையுண்டு எனப் புருவத்தை நெறித்தவர்களின் ஐயத்தைத் தீர்த்து வைத்தார், பெட்ரோலியத் துறையின் புதிய அமைச்சர் வீரப்ப மொய்லி. நாட்டின் எரிசக்தி பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு சில முடிவுகளை விரைவாக எடுக்க வேண்டியிருக்கிறது” எனக் கூறியதன் மூலமும்; கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப் படுகையில் எரிவாயு வயல்களைக் குத்தகைக்கு எடுத்திருக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் கணக்குகளை மைய அரசின் தலைமைக் கணக்காயர் தணிக்கை செய்வதைத் தள்ளிப் போட்டதன் மூலமும் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதைப் போட்டுடைத்தார், அவர். vinavu.com

கிருஷ்ணா-கோதாவரிப் படுகையிலுள்ள இயற்கை எரிவாயு வயல்களைக் குத்தகைக்கு எடுத்திருக்கும் ரிலையன்ஸ் நிறுவனம், அவ்வயல்களிலிருந்து எடுக்கப்படும் எரிவாயுவை யூனிட் ஒன்றுக்கு ரூ.226/- என்ற விலையில் அரசு நிறுவனங்களுக்கு விற்று வருகிறது. இவ்விலையை ரூ.756/- ஆக அதிகரிக்க வேண்டுமெனக் கோரி வருகிறது, அந்நிறுவனம். ஜெய்பால் ரெட்டி இவ்விலைஉயர்வுக்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டதோடு, ரிலையன்ஸ் நிறுவனம் குத்தகை ஒப்பந்தத்தில் கூறப்பட்ட அளவிற்கு எரிவாயுவை உற்பத்தி செயாமல் குறைந்த அளவிற்கே உற்பத்தி செய்து வருவதால், அந்நிறுவனம் 2011-12 ஆம் நிதியாண்டில் 100 கோடி அமெரிக்க டாலர்களை அரசிற்கு அபராதமாகச் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும், இந்த உற்பத்திக் குறைவு காரணமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் மீது 2012-13 ஆம் நிதியாண்டில் 172 கோடி அமெரிக்க டாலர்களும், 2013-14 ஆம் நிதியாண்டில் 210 கோடி அமெரிக்க டாலர்களும் அபராதம் விதிக்க வேண்டும் எனப் பரிந்துரையும் செய்திருக்கிறார். ஜெய்பால் ரெட்டி பெட்ரோலியத் துறையிலிருந்து தூக்கியெறியப்பட்டதன் பின்னணி இதுதான் என்பது இப்பொழுது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.
முதல் போட்டவனுக்கு இலாபம் கிடைக்காமல் ஜெய்பால் ரெட்டி தடுத்துவிட்டார்; அதனால் பிரதமர் மன்மோகன் சிங் அவரை பெட்ரோலியத் துறையிலிருந்து தூக்கியடித்து விட்டார் என்பது இந்தப் பிரச்சினையின் ஒரு சிறு பகுதிதான். இன்று பெட்ரோலியத் துறை அமைச்சகமே அம்பானியின் பாக்கெட்டில் இருப்பதாகக் கூறுகிறார்கள் இத்துறையைச் சேர்ந்த முன்னாள் அதிகாரிகள். கோதாவரிப் படுகையில் கொட்டிக் கிடக்கும் கச்சா எண்ணெ மற்றும் இயற்கை எரிவாயு வளத்தை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகக் கொள்ளையடித்துக் கொழுப்பதற்கு முந்தைய பா.ஜ.க. கூட்டணி அரசும், இன்றைய காங்கிரசு கூட்டணி அரசும் எல்லாவிதத்திலும் துணையாக நின்றன; நின்று வருகின்றன. சட்டபூர்வமான முறையிலும் சட்டவிரோதமான முறையிலும் நடந்துவரும் இக்கார்ப்பரேட் கொள்ளை முன் அலைக்கற்றை ஊழலெல்லாம் சுண்டைக்காய்தான்.
கிருஷ்ணா-கோதாவரிப் படுகையில் கச்சா எண்ணெயும் இயற்கை எரிவாயுவும் இருப்பது கண்டறியப்பட்டவுடன், அப்படுகையின் பெரும்பகுதி – ஏறத்தாழ 339 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட வயல்கள் உற்பத்திப் பகிர்வு என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில், முந்தைய பா.ஜ.க. கூட்டணி அரசால் ரிலையன்ஸ் குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டன. இப்படுகையில் கிடைக்கும் இயற்கை எரிவாயுவைத் தோண்டியெடுக்க எவ்வளவு மூலதனம் போடப்படுகிறதோ, அம்மூலதனத்தை ரிலையன்ஸ் முழுமையாகத் திரும்ப எடுக்கும் வரை, அரசிற்குக் குறைந்தபட்ச ராயல்டி” தொகை கொடுத்தால் போதும் என்பதுதான் உற்பத்தி பகிர்வு ஏல ஒப்பந்தத்தின் அடிப்படையான அம்சம். இந்த மூலதனம் அதிகரிக்க அதிகரிக்க, அரசிற்குக் குறைந்தபட்ச ராயல்டி கொடுக்கும் காலமும் அதிகரித்துக் கொண்டே போகும். உமி கொண்டுவந்தவன் அவல் தின்னும் கதைதான் இது. இந்த ஒப்பந்த விதிதான் இந்தப் பகற்கொள்ளையின் ஆணி வேராக அமைந்துள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம் இப்படுகையில் துரப்பணப் பணியைத் தொடங்கியபொழுது, தினந்தோறும் 4 கோடி கனமீட்டர் இயற்கை எரிவாயுவைத் தோண்டியெடுக்க 239 கோடி அமெரிக்க டாலர் மூலதனச் செலவு பிடிக்கும் எனக் கணக்குக் காட்டியது. பின்னர், இம்மூலதனச் செலவை 519 கோடி அமெரிக்க டாலராக அதிகரித்து, தினந்தோறும் 8 கோடி கனமீட்டர் இயற்கை எரிவாயுவைத் துரப்பணம் செய்யப் போவதாகக் கணக்குக் காட்டியது. இறுதியாக, இம்மூலதனச் செலவை 880 கோடி அமெரிக்க டாலராக அதிகரித்தது, ரிலையன்ஸ்.
மணிசங்கர் அயர் பெட்ரோலியத் துறையின் அமைச்சராக இருந்தபொழுது, அவர் ரிலையன்ஸ் தனது மூலதனச் செலவை அதிகரித்துக் கொள்வதை அங்கீகரிக்க மறுத்திருக்கிறார். இந்நிலையில் மணிசங்கர் அயர் இத்துறையிலிருந்து திடீரென மாற்றப்பட்டு, அம்பானி குடும்பத்தாரால் மாமா என அன்புடன் அழைக்கப்படும் முரளி தியோரா பெட்ரோலியத் துறையின் அமைச்சராக்கப்பட்டார். எரிவாயு உற்பத்தியை இரண்டு மடங்கு அதிகரிப்பதற்கு, மூலதனச் செலவை நான்கு மடங்காக அதிகரிப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல எனப் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக் காட்டியதையும் மீறி, பெட்ரோலியத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட முரளி தியோராவும், ஹைட்ரோ கார்பன் துறையின் தலைமை இயக்குநராக இருந்த சிபலும் ரிலையன்ஸ் தனது மூலதனச் செலவை அதிகரித்துக் கொள்வதற்கு ஒப்புதல் அளித்தனர்.
ரிலையன்ஸ் நிறுவனம் இப்படுகையைக் குத்தகைக்கு எடுத்தபொழுது, ஒரு யூனிட் இயற்கை எரிவாயு 124/- ரூபா என்ற அடிப்படையில் பதினேழு ஆண்டுகளுக்குத் தேசிய அனல் மின் கழகத்திற்குத் தருவதாக பெட்ரோலிய அமைச்சகத்திடம் ஒப்பந்தம் செய்து கொண்டது. ஆனால், உற்பத்தி தொடங்கிய ஓரிரு ஆண்டுகளுக்குள்ளாகவே ஒரு யூனிட் இயற்கை எரிவாயுவின் விலையை 226 ரூபாயாக உயர்த்த வேண்டுமென பெட்ரோலிய அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்தது. உள்நாட்டில் உற்பத்தி செயப்படும் இயற்கை எரிவாயுவை சர்வதேசச் சந்தை விலை அடிப்படையில் ரிலையன்ஸ் விற்க முயலுவது எந்த விதத்திலும் நியாயமற்றது என முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையும் பொருட்படுத்தாமல், பிரணாப் முகர்ஜி தலைமையில் செயல்பட்டுவந்த அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சரவைக் குழு விலை உயர்வு என்ற பகற்கொள்ளைக்கு அனுமதி அளித்தது.
தேசிய அனல் மின் கழகம் இவ்விலை உயர்வை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், அக்கழகத்திற்குச் சாதகமாகத் தீர்ப்பு அளிக்கப்பட்டது. எனினும், தேசிய அனல் மின் கழகத்திற்கு மட்டுமின்றி, தனது தம்பி அனில் அம்பானிக்கும் 226 ரூபா என்ற விலையின் அடிப்படையில் இயற்கை எரிவாயுவை விற்கத் தன்னை அனுமதிக்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார், முகேஷ் அம்பானி. இந்த வழக்கின்பொழுது ஒரு யூனிட் இயற்கை எரிவாயுவின் உற்பத்திச் செலவு 2 அமெரிக்க டாலர்கள்தான் (ஏறத்தாழ நூறு ரூபா) என வாக்குமூலம் அளித்தது, ரிலையன்ஸ் நிறுவனம். இதேசமயத்தில், இந்திய அரசு நிறுவனமான எண்ணெய் – எரிவாயுக் கழகம் ஒரு யூனிட் இயற்கை எரிவாயுவை ரூ.100/-க்கும் குறைவாகவே சந்தையில் விற்பனை செய்து வந்தது. ஆனாலும், அப்பொழுது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையில் இவ்வழக்கை விசாரித்து வந்த அமர்வு மன்றம் ரிலையன்ஸூக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது.
இந்த விலை உயர்வினால் ரிலையன்ஸுக்கு 30,000 கோடி ரூபா வரை அதிரடி இலாபம் கிடைத்தது; தேசிய அனல் மின் கழகம் 24,000 கோடி ரூபா நட்டத்தில் தள்ளப்பட்டது.
இத்தீர்ப்பு வெளிவந்த அடுத்த ஐந்தாவது நாள் கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமை நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்; ஓய்வு பெற்ற அடுத்த நிமிடமே, கேபினட் அமைச்சருக்குரிய தகுதி கொண்ட தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். இது காக்கை உட்காரப் பனம் பழம் விழுந்த கதையல்ல.
மைய அரசு ரிலையன்ஸ் நிறுவனம் கோரியபடி ஒரு யூனிட் இயற்கை எரிவாயுவின் விலையை ரூ.226/- என உயர்த்திய சமயத்திலேயே, இனி 2014-ஆம் ஆண்டு முடிய எரிவாயுவின் விலையை இதற்கு மேல் உயர்த்தக் கூடாது என நிபந்தனை விதித்து, ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தது. ஆனாலும், ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த ஓராண்டாகவே இயற்கை எரிவாயுவின் விலையை ரூ.756/- ஆக உயர்த்த வேண்டுமெனச் சண்டித்தனம் செய்து வருகிறது.
ரிலையன்ஸ் கோரி வரும் விலை உயர்வு ஒப்பந்த விதிகளுக்கு முரணானது என்பது ஒருபுறமிருக்க, இந்த விலை உயர்வை ஒப்புக்கொண்டால், ரிலையன்ஸிடமிருந்து எரிவாயுவைப் பெற்று இயங்கிவரும் மின் மற்றும் இரசாயன உர நிறுவனங்கள் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் 53,000 கோடி ரூபா வரை நட்டத்தைச் சந்திக்க நேரிடும். குறிப்பாக, மின்சாரத்திற்கும் இரசாயன உரத்திற்கும் மைய, மாநில அரசுகள் தந்துவரும் மானியம் அடுத்த ஆண்டுக்குள் 48,000 கோடி ரூபா வரை அதிகரிக்கும். விலை உயர்வினால் அரசுக்கு ஏற்படும் இந்த நட்டம், இழப்பு ரிலையன்ஸுக்குக் கிடைக்கும் இலாபம் என்பதைக் கூறத் தேவையில்லை.
இந்தக் காரணங்களை முன்வைத்து ஜெபால் ரெட்டி விலை உயர்வை அனுமதிக்கத் தேவையில்லை எனக் கூறி வந்தபொழுது, மைய அரசின் நிதித் துறையோ, நட்டம், “கூடுதல் செலவு பற்றிக் கவலைப்பட வேண்டியது நாங்கள்தான்; பெட்ரோலியத் துறை இதில் மூக்கை நுழைக்கத் தேவையில்லை” என ரிலையன்ஸுக்குச் சாதகமாக வாதாடியிருக்கிறது. பிரதம மந்திரி அலுவலகமோ இந்தப் பிரச்சினையில் ரிலையன்ஸுக்குச் சாதகமாக முடிவெடுக்க முடியாதென்றால், இதனைச் சட்டத் துறையிடமும், அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவிடமும் விட்டுவிடுங்கள் என நயவஞ்சகமான ஆலோசனையை முன்வைத்தது.
ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தப்படி கோதாவரிப் படுகை வயல்களில் நாளொன்றுக்கு 8கோடி கன மீட்டர் அளவிற்கு இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய வேண்டும். ஆனால், பெட்ரோலிய அமைச்சகம் விலை உயர்வுக்கு அங்கீகாரம் அளிக்காததால், ரிலையன்ஸ் நடப்பாண்டில் எரிவாயுவை உற்பத்தியை நாளொன்றுக்கு 2.7 கோடி கன மீட்டராகக் குறைத்ததோடு, அடுத்த ஆண்டில் தனது எரிவாயு உற்பத்தி நாளொன்றுக்கு 1.8 கோடி கன மீட்டராகக் குறைந்துவிடும் என்றும் அறிவித்தது. இதனால், கோதாவரி எரிவாயுவை நம்பியிருக்கும் மின் மற்றும் இரசாயன உர உற்பத்தி நிறுவனங்கள் ஒன்று தங்கள் உற்பத்தியை நிறுத்த வேண்டும்; அல்லது, வெளிநாடுகளிலிருந்து எரிவாயுவை அதிக விலை கொடுத்து – யூனிட் ஒன்றுக்கு ரூ.650/- கொடுத்து இறக்குமதி செது கொள்ள வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டன.
ரிலையன்ஸ் எரிவாயு உற்பத்தியை முடக்கியதால், 2012-13 ஆம் ஆண்டில் 12,000 மெகாவாட் மின் உற்பத்தியும், அடுத்த ஆண்டில் 13,500 மெகாவாட் மின் உற்பத்தியும் பாதிக்கப்படுமென்றும்; எரிவாயு இறக்குமதிச் செலவு, மின் மற்றும் இரசாயன உர உற்பத்தி பாதிப்பு மற்றும் கூடுதல் மானியச் செலவு ஆகியவற்றால் அரசிற்கு ஏற்படவுள்ள மொத்த இழப்பு ஏறத்தாழ 1,10,000 கோடி ரூபாயாக இருக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ரிலையன்ஸின் அடாவடித்தனமான இந்த உற்பத்தி முடக்கம், ஒருபுறம் கையை முறுக்கி காரியம் சாதிக்கும் தந்திரம் என்றால், மறுபுறம், அதிக விலை கிடைக்கும் வரை எரிவாயுவை உற்பத்தி செயாமல் முடக்கி வைப்பது, அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்கி வைப்பது போன்ற கிரிமினல் குற்ற நடவடிக்கையாகும்.
கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராகப் போராடும் மீனவ கிராம மக்களை நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்களாகக் குற்றஞ்சுமத்துவதோடு, அவர்கள் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டு உள்ளிட்டுப் பல்வேறு கிரிமினல் வழக்குகளைத் தொடுத்துள்ள அரசு, 13,500 மெகாவாட் மின் உற்பத்தி முடங்குவதற்குக் காரணமான ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு எதிராகச் சுண்டுவிரலைக்கூட அசைக்கவில்லை. மாறாக, ஜெபால் ரெட்டியை பெட்ரோலியத் துறையிலிருந்து தூக்கியடித்து, ரிலையன்ஸ் நிறுவன முதலாளி முகேஷ் அம்பானியின் மனதைக் குளிர வைத்திருக்கிறது.
ஆறு சிலிண்டர்களுக்கு மேல் மானிய விலையில் சமையல் எரிவாயுவை வழங்கினால் பெட்ரோலிய நிறுவனங்களுக்குப் பெருத்த நட்டமேற்படும் எனப் பீதி கிளப்பி வரும் மைய அரசு, கோதாவரிப் படுகையில் கிடைக்கும் எரிவாயுவின் விலையை உயர்த்திக் கொள்ள ரிலையன்ஸுக்கு அனுமதி அளித்து, அதன் மூலம் அந்நிறுவனம் அடுத்த இரு ஆண்டுகளில் 43,000 கோடி ரூபாயைக் கொள்ளையடித்துக் கொள்வதற்கு ஏற்பாடு செய்து வருகிறது.
மைய அரசின் தணிக்கைத் துறை கிருஷ்ணா-கோதாவரிப் படுகை வயல்கள் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு உற்பத்தி பகிர்வு என்ற முறையில் ஒதுக்கப்பட்டதிலும்; அவ்வயல்களிலிருந்து கச்சா எண்ணெயையும் எரிவாயுவையும் உற்பத்தி செய்ய போடப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மூலதனச் செலவிலும்; இயற்கை எரிவாயுவிற்கு விலை நிர்ணயம் செய்ததிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதைக் கண்டுபிடித்து, மைய அரசிற்கு அறிக்கை அளித்திருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே மைய அரசிடம் அளிக்கப்பட்டுள்ள அத்தணிக்கை அறிக்கையில், ரிலையன்ஸ் நிறுவனம், பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த முரளி தியோரா, ஹைட்ரோ கார்பன் துறையின் இயக்குநராக இருந்த சிபல் ஆகிய மூவரும் கூட்டுக் களவாணிகளாகச் செயல்பட்டு வந்திருப்பது தக்க ஆதாரங்களோடு அம்பலமாகியிருக்கிறது. எனினும், மைய அரசு அவ்வறிக்கையை வெளியேவிடாமல் அதிகாரத் தாழ்வாரங்களிலேயே அமுக்கிப் போட்டுவிட்டது.
அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற தனியார் நிறுவனங்களுள் சில, தங்களின் பங்குகளை 22,000 கோடி ரூபாக்கு விற்று இலாபமடைந்ததைப் போலவே, முகேஷ் அம்பானியும் கிருஷ்ணா-கோதாவரிப் படுகை ஒதுக்கீட்டில் 30 சதவீதப் பங்குகளை பிரிட்டிஷ் பெட்ரோலியம் என்ற பன்னாட்டு நிறுவனத்திற்கு 37,908 கோடி ரூபாக்கு விற்றுக் கொழுத்த இலாபத்தைச் சுருட்டியிருக்கிறார். இக்கார்ப்பரேட் பகற்கொள்ளை பற்றிய செய்திகள் பத்திரிகைகள் வழியாகக் கசிந்து வெளிவந்த பிறகும்கூட, பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், சு.சாமி உள்ளிட்ட ஊழல் எதிர்ப்பு கனவான்களும் இதனைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. முகேஷ் அம்பானியின் (பண) பலம் இவர்களின் வாயை அடைத்துவிட்டது போலும்!
அம்பானி சகோதரர்களின் அன்பு மாமாவான முரளி தியோராவைத் தூக்கிவிட்டு, ஜெபால் ரெட்டியை பெட்ரோலியத் துறையின் அமைச்சராக்கியதன் மூலம், அத்துறையில் எல்லாம் சட்டபூர்வமான வழியில் நடப்பதாகக் காட்டும் ஒரு நாடகத்தை அரங்கேற்றியது, மன்மோகன் சிங் கும்பல். முதலாளித்துவப் பத்திரிகைகளாலும், ஊழல் எதிர்ப்பு கனவான்களாலும், போலி கம்யூனிஸ்டுகளாலும் விதந்தோதப்படும் ஜெபால் ரெட்டியின் நேர்மை என்பது கார்ப்பரேட் பகற்கொள்ளையைச் சட்டபூர்வமான வழியில் மட்டுமே அனுமதிக்க முடியும் என்பது தவிர வேறெதுவுமில்லை. டீசலுக்கும் சமையல் எரிவாயு உருளைக்கும் வழங்கப்படும் மானியத்தை ரத்து செய வேண்டும் எனக் கூறி வந்த தனியார்மயத்தின் தாசானு தாசன்தான் ஜெபால் ரெட்டி.
பெட்ரோலிய அமைச்சகத்தில் மட்டுமல்ல, அரசின் அனைத்துத் துறைகளிலும் கார்ப்பரேட் நிறுவனங்களை நத்திப் பிழைக்கும் கும்பல்தான் இன்று அமைச்சர்களாக, அதிகாரிகளாக வலம் வருகின்றனர். திட்ட கமிசனின் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா, நிதியமைச்சர் ப.சிதம்பரம், வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல், கனரகத் தொழில் அமைச்சர் பிரஃபுல் படேல், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பல்லம் ராஜூ, மின்சாரத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா – இவர்கள் அனைவருமே கார்ப்பரேட் நிறுவனங்களின் கைக்கூலிகள்தான். இவ்வளவு ஏன், பிரதம மந்திரியாக உட்காரவைக்கப்பட்டுள்ள மன்மோகன் சிங்கே உலக வங்கியின், அமெரிக்காவின் ஏஜென்ட்தானே! நாட்டின் வளங்களை இந்தியத் தரகு முதலாளிகளும் ஏகாதிபத்திய நிறுவனங்களும் கூட்டாகச் சேர்ந்து கொள்ளையடிப்பதற்குத் திறந்துவிடுவதுதான் இக்கும்பல் செதுவரும் ஒரே திருப்பணி!

கருத்துகள் இல்லை: