செவ்வாய், 1 ஜனவரி, 2013

உங்கள் பணம் உங்கள் கையில் இன்று முதல்

புதுடில்லி: மத்திய அரசு வழங்கும் மானியத்திற்கான ரொக்கம், பொதுமக்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும், "உங்கள் பணம் உங்கள் கையில்' திட்டம், இன்று முதல் துவக்கப்படுகிறது. முதற்கட்டமாக, 20 மாவட்டங்களில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. மொத்தமுள்ள, 26 மானிய திட்டங்களில், ஏழு திட்டங்களுக்கான மானிய ரொக்கம் மட்டும், "ஆதார்' அடையாள அட்டை பெற்றுள்ளவர்களின் வங்கி கணக்குகளில், இன்று முதல், வரவு வைக்கப்படுகிறது.உணவு பொருட்கள், அத்தியாவசிய பொருட்களுக்கு மத்திய அரசு வழங்கும் மானியம் மற்றும் உதவி தொகை போன்றவற்றிற்கான பணம், பயனாளிகளின் கைகளில் நேரடியாக கிடைப்பதற்கு முன், மூன்றாம் நபர் வசம் செல்வதால், உண்மையான பயன்கள், பயனாளிகளுக்கு கிடைக்காத நிலை உள்ளது.உதாரணமாக, ரேஷன் கடைகளில், மானிய விலையில், ஒரு கிலோ கோதுமை, மூன்று ரூபாய்க்கு வழங்கப்படுகிறது என, வைத்து கொள்வோம். கொள்ளை லாபம்:வெளி மார்க்கெட்டில், ஒரு கிலோ கோதுமை, குறைந்தபட்சம், 15 ரூபாய் வரை இருக்கிறது என்ற நிலையில், பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும், ஒரு கிலோ கோதுமையில், 12 ரூபாய் மானியம் இருக்கிறது.பொது வினியோக முறையில் விற்கப்படும் கோதுமை கள்ள மார்க்கெட்டில் விற்கப்படுவதால், உண்மையான மானியம், பொதுமக்களை சென்றடையாமல், மோசடி பேர்வழிகளுக்கு கிடைத்து, அவர்களுக்கு கொள்ளை லாபம் கிடைத்து விடுகிறது.


இதை தடுக்கும் நோக்கத்தில், "உங்கள் பணம் உங்கள் கையில்' என்ற, மத்திய அரசு திட்டத்தின் படி, மத்திய அரசு வழங்கும் மானியம், ரொக்கமாக, பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்; இதற்காக, "ஆதார்' அடையாள அட்டை பயன்படுத்தப்படும் என, மத்திய அரசு அறிவித்தது.

"மானியத்தை ரொக்கமாக, பயனாளிகளுக்கு கொடுப்பது லஞ்சம் போன்றது' என, எதிர் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இன்று முதல் அந்த திட்டம் அறிமுகமாகிறது.
டில்லியில் நேற்று, பத்திரிகையாளர்களிடம், நிதியமைச்சர், சிதம்பரம் கூறியதாவது:இந்த திட்டத்தை மிகுந்த கவனத்துடன் நாங்கள் மேற்கொள்கிறோம். முதற்கட்டமாக, ஜனவரி, 1ம் தேதி, 20 மாவட்டங்களிலும்; பிப்ரவரி, 1ம் தேதி, 11 மாவட்டங்களிலும்; மார்ச், 1ம் தேதி, 12 மாவட்டங்களிலும் அறிமுகமாகும். "ஆதார்' அடையாள அட்டை மூலம் தான், மானிய பலன்கள், பயனாளிகளுக்கு வழங்கப்படும்.

ஏழு திட்டங்கள் தேர்வுமொத்தம், 26 திட்டங்களின் மானியம் மற்றும் உதவித்தொகை ரொக்கமாக வழங்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இதில், முதற்கட்டமாக, ஏழு திட்டங்களின் பணம் தான், ரொக்கமாக வழங்கப்படுகிறது. அதில், சமையல் காஸ், மண்ணெண்ணெய், டீசல், உணவு பொருட்கள், உரம் போன்றவை, முதற்கட்டத்தில் இடம்பெறவில்லை.

மாறாக, எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., பிரிவினருக்கான, 10ம் வகுப்புக்கு முந்தைய மற்றும் பிந்தைய கல்வி உதவித் தொகை, இந்திரா காந்தி மத்ருத்வ சகாயதா யோஜனா, தனலட்சுமி திட்டம், படித்து வேலையில்லாத, எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கான உதவி தொகை போன்றவை மட்டுமே, பயனாளிகளின், "ஆதார்' அடையாள அட்டை மூலம் வரவு வைக்கப்படும்.எல்லா மாவட்டங்களிலும்வரும், 2013ம் ஆண்டின் இறுதிக்குள், நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இந்த திட்டம் அறிமுகமாகும்.

"ஆதார்' அடையாள அட்டை இல்லாத வர்களுக்கு, அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். எனினும், எதிர்காலத்தில், "ஆதார்' இருந்தால் தான், உதவித் தொகைகள் கிடைக்கும் என்ற நிலை ஏற்படுத்தப்படும்.இந்த திட்டத்தை இன்னும் மூன்று மாதங்களில் அறிமுகப்படுத்த உள்ள, 43 மாவட்டங்களிலும், "ஆதார்' அடையாள அட்டை அதிக அளவில் வழங்கப்பட்டுள்ளது.

துவக்கத்தில் சில பிரச்னைகள் இருக்கலாம்; பின், அவை சரி செய்யப்படும். சமையல் காஸ் மானிய தொகை எப்போது வரவு வைக்கப்படும் என்பது எனக்கு தெரியாது.இவ்வாறு, சிதம்பரம் கூறினார்.2 லட்சம் பயனாளிகள்மத்திய தகவல், ஒலிபரப்பு துறை இணையமைச்சர், மனிஷ் திவாரி கூறுகையில், ""முதற்கட்டமாக, 2 லட்சம் பயனாளிகள், பயன் பெறுவர்,'' என்றார்.

பிரதமராகும் தகுதி இருக்கிறதா?நிதியமைச்சர் சிதம்பரம் பதில்"பிரதமராகும் தகுதி உங்களுக்கு இருப்பதாக, கருணாநிதி கூறியுள்ளாரே' என, மத்திய நிதியமைச்சர், சிதம்பரத்திடம், டில்லியில் நேற்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ""என் தகுதி எனக்கு தெரியும்,'' என, அவர் பதிலளித்தார்.

சென்னையில், நான்கு நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், "பிரதமராக சிதம்பரத்திற்கு தகுதி உள்ளது' என, நடிகர் கமல்ஹாசன் கூறினார். அதை, தி.மு.க., தலைவர், கருணாநிதியும் ஆமோதித்தார்.இந்த விவகாரம் குறித்து, டில்லியில் நேற்று, சிதம்பரத்திடம் நிருபர்கள் கேட்டபோது, அவர் கூறியதாவது:

நீங்கள் கேட்கும் இந்த கேள்வியை, சீரியசாக நான் எடுத்து கொள்ளலாமா என்பது எனக்கு தெரியவில்லை; ஆனால், நான் உங்களுக்கு சீரியசான பதிலை சொல்வேன். என் தகுதி எனக்கு தெரியும். என் தகுதிக்கு என்ன கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதை ஏற்று வாழ்கிறேன், செயல்படுகிறேன்.நீங்கள் என்னிடம் இருந்து, சிரிப்பை வரவழைக்கும் தகவல் பெற விரும்பினால், இதை சொல்கிறேன், கேட்டு கொள்ளுங்கள். உங்களில் சிலர் என்னை, "முட்டாள்' என, நினைக்கிறீர்கள்; ஆனால், நீங்கள் நினைக்கும் அளவிற்கு நான் முட்டாளில்லை.இவ்வாறு, சிதம்பரம் கூறினார்.dinamalar.com/

கருத்துகள் இல்லை: