செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

அதிமுகவினர் ஆயுதங்களுடன் பயங்கர மோதல்....விழுப்புரம்

விழுப்புரம் அருகே அதிமுகவினர் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர். இதில் 9 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பேரங்கியூர் கிராமத்தை சேர்ந்தவர் ராம ஏகாம்பரம். அதிமுக ஒன்றிய செயலாளர். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் சுசி.செல்வம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராஜகோபால் ஆகியோர் இடையே பேனரில் பெயர் போடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
கடந்த மாதம் விழுப்புரம் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் மோகன் வரவேற்பு நிகழ்ச்சியில் இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.
நேற்று இரவு பேரங்கியூர் கிராமத்தில் நடந்த பாட்டுகச்சேரியின் போது, மீண்டும் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.

இதில் இருதரப்பினரும் அரிவாள், இரும்பு பைப்பால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் பன்னீர்செல்வம் (50), குணசேகரன் (37), பாலு (40), ஆறுமுகம், கந்தன், கண்ணன், சுதாகர், ராமு, ரமேஷ் ஆகிய 9 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பேரங்கியூர் கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி சிவனேசன், திருவெண்ணை நல்லூர் இன்ஸ்பெக்டர் மகாதேவன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிமுகவினர் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை: