மர்மமனிதர்களின் பின் புலம் என்ன…??? யார் இவர்களை திட்டமிட்டு கிழக்கு… மலையக… பிரதேசங்களில் ஊடுருவ விட்டு இயக்குகிறார்கள்…??? யாரிந்த மர்ம மனிதன்…??? சாகரன்
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மலையகப் பகுதியல் முதலில் பயப்பிராந்தியை ஏற்படுத்திய மர்ம கிரீஸ் மனிதன் இன்று நாடு பூராகவும் வியாபித்து இருக்கின்றது. ஒரு காலத்தில் பயங்கரவாதிகள் அது ஒழிந்த பின்பு டெங்கு கபய்சல் என்று இலங்கையில் பரபரப்பை ஊட்டிய செய்திகளுக்கு அப்பால் இன்று பெரும்பாலும் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிவேயே இந்த மர்ம மனிதர்கள் பயப்பிராந்து உலாவித் திரிகின்றது.ஆரம்பத்தில் மலையகத்தில் இந்த மர்ம மனித விவகாரம் உருவெடுத்தது. இலங்கையின் தேசியவருமானத்தில் பெரும் பங்கை வகிக்கின்ற ஆனால் கடைநிலை வாழ்க்கைத் தரத்தை உடைய மக்களுக்கு ஏற்பட்ட இந்த விவகாரத்தை அரசு சீரிய முறையில் அணுகி அன்று முற்று புள்ளி வைத்திருந்தால் இன்றைய நிலமைகள் ஏற்பட்டிருக்க வாய்புக்கள் மிகக் குறைவாக இருந்திருக்கும். இதில் அரசைத் தவிர ஏனைய அரசியல் கட்சிகளும் தமது அரசியல் இலாபங்களுக்காக இவ்விடயத்தைக் கையாண்ட கையாளுகின்ற முறமையும் இன்னொரு காரணமாக அமைகின்றது. பத்திரிகை போன்ற ஊடகத் துறைகளும் உண்மை நிலையை கண்டறிந்து செய்திகளை வெளியிட்டு மக்களை விழிப்படையச் செய்வதற்கு பதிலாக தங்கள் பத்திரிகை வியாபாரத்திற்காக ‘பரபரப்பு’ செய்திகள் வெளியிடுவதில் மர்ம மனிதன் செய்தியை பயன்படுத்திக் கொண்டனர். இவைகளே ‘மர்ம மனிதன்’ விடயம் இன்று பூதாகார நிலையை அடைந்ததற்கு காரணங்கள் ஆகின்றன.
இதில் சிறப்பாக தமிழ் ஊடகங்கள் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக உண்மையான செய்திகளை வெளியிடுவதிலும் பார்க்க தமது விருப்பு வெறுப்புச் செய்திகளை வெளியிட்டு தமது சமூகப்பொறுப்புகளை தட்டிக்கழித்து வருவதின் தொடர்சியை இந்த மர்ம மனிதன் செய்திகளிலும் காணக் கூடியதாக இருக்கின்றது. என்றும் போல தமிழ் ஊடகங்களைவிட சிங்கள ஊடகங்கள் ஒப்பீட்டளவில் சமூகப் பொறுப்புடன் மர்ம மனிதன் விடயத்தை கையாண்டதை கையாளுவதை அறிய முடிகின்றது.இலங்கை மக்களுக்கும் குறிப்பாக தமிழ் பேசும் மக்களுக்கும் பிரச் சனைகள் இருக்கின்றது. இது இராமன் ஆண்டால் என்ன, இராவணன் ஆண்டால் என்ன; எல்லாளம் ஆண்டால் என்ற துட்ட கைமுனு ஆண்டால் என்ன இருந்து கொண்டுதான் வருகின்றது. மக்களுக்கான உண்மையான பிரச்சனைகளை முறைப்படி முன்னிறுத்தி மக்களை அணிதிரட்டி போராட வைப்பதற்கு உரிய சூழலை ஏற்படுத்துவதற்கு பதிலாக பேரினவாதத்தையும், குறும் தேசியவாதத்ததையும் ஊதிப் பெரிதாக்கி வளர்த்தெடுத்து அதில் அரசியல் லாபம் காணும் தலைவர்கள் மக்கள் தலைவர்களாக மக்கள் முன்நிறுத்தி தமது பிழைப்பை நடாத்தும் இழி நிலையை அனேக (தமிழ்) ஊடகங்கள் செய்து வருகின்றன.
இன்றைய சம உரிமைகள் மறுக்கப்பட்ட பலவீனமான நிலமைக்கு தமிழ் பேசும் மக்கள் வந்ததற்கு தமிழ் ஊடகங்களின் இந்த செயற்பாடும் ஒரு காரணம். ஊடகங்களின் இந்த பொறுப்பற்ற தன்மைகளின் ஒரு அங்கமாகவே இன்று, இருப்பதை விட பல ஆயிரம் மடங்காக பூதாகாரம் எடுத்திருக்கும் ‘மர்ம மனிதன்’ விவகாரம் தமிழ் பிரதேசம் எங்கும் பரவியிருக்கின்றது.
‘மர்ம மனிதன்’ விவகாரம் பெரும்பாலும் தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களில் வியாபித்து இருப்பது, இலங்கை அரசின் மீது நம்பிக்கையற்று இருக்கும் பெரும்பான்மையான தமிழ் பேசும் மக்களுக்கு மேலும் அரசுமீது வெறுப்பை கொள்வதற்கு வலு சேர்ப்பதாகவே அமையும். இதனை அரசு கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும். மாறாக இராணுவ பேச்சாளர்களைக் கொண்டு மிரட்டும் பாணியிலானா அறிக்கைகள் மக்கள் மத்தியல் அரசுக்கு நற்பெயரை ஏற்படுத்தி தர மாட்டாது. அதே வேளை ‘மர்ம மனிதன்’ ஐ மக்களே தண்டிக்கும் நிலமைகள் அனுமதிக்க முடியாதவையும் கூட. இது சில அப்பாவிகளின் உயிரை காவுகொள்ள பழிவாங்கும் நோக்கில் சில ர் தமது தனிப்பட்ட கோபதாபங்களுக்காக பயன்படுத்த வழி செய்து விடும்.
ஒரு நாட்டின் மக்கள் அரசு இந்நிலையில் செய்ய வேண்டியதெல்லாம் பொறுப்புக்களை தட்டிக் கழிக்காமல் பிரதேசங்கள் தோறும் உண்மை நிலையை வெளிப்படுத்தும் மக்கள் விழிப்பு கருத்தரங்குகள் நடாத்த வேண்டும். இதனைத் தொடர்ந்து மக்கள் பாதுகாப்பு தொண்டர் குழுக்கள், சிவில் நிர்வாக அமைப்புக்களின் கட்டுப்பாட்டில் செயற்படுமாறு அமைத்தல் வேண்டும். இதற்கு அரசியல் கட்சிகள் யாவரும் அரசியல் வேறுபாடுகளை மறந்து இணைந்து, இயந்து செயற்படும் நிலைப்பாட்டை எடுத்து ஒத்துழைக்க வேண்டும். மக்கள் மத்தியில் உண்மைநிலை விளக்கி மக்கள் மத்தியில் விழப்புணர்வை ஏற்படுத்த பொது நிறுவனங்கள், தொண்டர் நிறுவனங்கள், மக்கள் மத்தியில் உள்ள கல்விமான்கள், பெரியோர்கள் தமது மட்டத்தில் தம்மால் ஆன பங்களிப்புகளை முன்வந்து செய்தல் வேண்டும்.
இதனை விடுத்து உண்மைகளுக்கு புறம்பான செய்திகளை மென்ற வண்ணம் சமூகப் பொறுப்புக்களை தட்டிக் கழித்து மூன்றாம் தர பிரஜைகள் போல் செயற்படுவது தங்கள் கோடிக்குள் ‘மர்ம மனிதன்’ வந்து ‘ஐயோ’ என்று கூக்கிரலிடும் போது அயலவர் உதவிக்கு ஓடிவரமுடியாத நிலமைகளையே ஏற்படுத்தும். இதன் வடிவத்தை ஈழவிடுதலைப் போராட்டத்தில் இளநீர் புடுங்கியவனை மின்சாரக்கம்பத்தில் கட்டி மண்டையில் போட்டபோது ‘அது பொடியள் செய்தா சரியாகத்தான் இருக்கும்’ என்று ஆய்வுகள் அற்ற கொலைக்கான குருட்டு அங்கீகாரம் இறுதியில் எல்லோரையும் அழித்து தானும் அழிந்த முள்ளிவாய்கால் நிலமைகளை மே 2009 இல் கண்டோம்.
30 வருட கால ஆயுதம் தாங்கிய செயற்பாட்டின் எச்ச சொச்சங்கள் கருவிகள் வடிவிலும், சிந்தனை வடிவிலும் தமிழ் பேசும் மக்கள், சிங்களம் பேசும் மக்கள் மத்தியில் இன்னமும் தாராளமாக இருக்கின்றன. சமூகத்திலிருக்கும் சமூக விரோதிகள் தமது கைங்கரியங்களை ‘மர்ம மனிதன்’, ‘வெள்ளை வான்’, ‘ புதையல் தேடுதல்’, ‘மணல் கொள்ளை’ போன்ற பற்பல செயற்பாடுகளை செய்வதற்கு இவற்றை பயன்படுத்தி வருகின்னர். இவர்கள்தான் இன்றைய மர்ம மனித போர்வைக்குள் ஒளித்திருப்பவர்கள். இக் கருவிகளும், சிந்தனைகளும் மக்கள் மத்தியில் இருக்கும் வரை இன்று இருக்கும் ‘மர்ம மனிதன்’ நாளை போய் அப்பாவி மக்களை மிரட்ட இன்னொரு ‘இருண்ட மனிதன்’ புறப்பட்டு வருவதற்கு வாய்புக்கள் இருந்து கொண்டே இருக்கும்.
எனவே ‘மர்ம மனிதன்’ முற்றாக இல்லாது போக வேண்டின் இலங்கையில் யாவரும் சமத்துவமாக வாழும் ஒரு பொறிமுறை ஏற்படுத்தப்பட வேண்டும் இதனை மகிந்த சகோதரையா செய்வாரா?. இதனை பேரினவாத சக்திகளும், குறும் தமிழ் தேசியவாதிகளும் ஏற்றுக் கொள்வார்களா?. இந்த சமாதான, சக வாழ்வு நிலையை மேற்குலகம் சந்தோஷத்துடன் நடைமுறைப்படுத்த அனுமதிக்குமா? அல்லது இன்றும் போல் இன்னொரு சனல் 26 ஐ உசுப்பு விட்டு சரிந்து வரும் தனது பொருளாதார நிமிர்த்த இன்னொரு வழங்கள் மிக்க நாட்டை நோக்கி படையெடுத்து போரை தொடருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
(சாகரன்)www.soodram.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக