சென்னை அசோக் நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி பழனியப்பன், நடிகர் வடிவேலு மீது சென்னை புறநகர் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்.
தாம்பரம் இரும்புலியூர் பகுதியில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனம் ஏலத்தில் விட்ட நிலத்தை ரூ. 20 லட்சத்துக்கு வாங்கியதாகவும், அதை போலி ஆவணங்கள் தயாரித்து நடிகர் சிங்கமுத்து மூலம் வடிவேலுக்கு விற்கப்பட்டு இருப்பதாகவும் புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் வடிவேலுவும், சிங்கமுத்துவும் போலி ஆவணங்கள் மூலம் ஏமாற்றப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. போலி தஸ்தாவேஜுகளை காட்டி நிலத்தை அவர்களுக்கு விற்கப்பட்டுள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில்,
’’வடிவேலு வாங்கிய சர்ச்சைக்குரிய நிலம் டி.கே.ராமச்சந்திரன் உள்ளிட்ட 5 பேருக்கு உரிமையானது. இவர்கள் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி முதலீட்டு கழகத்திடம் ரூ. 8 லட்சம் கடன் வாங்கினர். அதற்கு பதிலாக இந்த நிலத்தை அடமானம் வைத்தனர். ஆனால் அதற்கு வட்டி செலுத்தவில்லை.
இதையடுத்து நிலத்தை டிக் நிறுவனம் ஏலத்துக்கு கொண்டு வந்தது. ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி பழனியப்பன் அதை ஏலத்தில் வாங்கியுள்ளார்.
இதற்கிடையில் நிலத்தை அடமானம் வைத்தவர்கள் சிங்கமுத்துக்கு நிலத்துக்கான அதிகார பத்திரத்தை எழுதி கொடுத்துள்ளனர்.
2000-ம் ஆண்டில் இதனை எழுதி வாங்கியுள்ளார். பின்னர் 2002-ல் அதனை வடிவேலுக்கு சிங்கமுத்து விற்றுள்ளார். போலி ஆவணங்கள் மூலம் இருவரும் ஏமாந்துள்ளனர்.
வடிவேலு, சிங்கமுத்துவை ஏமாற்றிய 5 பேரும் கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு நிலத்தில் உரிமை இல்லை. பழனியப்பனுக்கு தான் நிலம் சொந்தம்’’ என்று தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக