செயற்குழுவில் காரசாரம்; ரணிலுக்கு கூடுதல் ஆதரவு
ஆர்ப்பாட்டத்தில் குளவிகளால் அல்லோலகல்லோலம்
ஐக்கிய தேசியக் கட்சித் தலைமைப் பொறுப்பிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை வெளியேற்ற எடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.
ரணில் விக்கிரமசிங்கவை கட்சித் தலைமையிலிருந்து நீக்கிவிட்டு, அதன் பிரதித் தலைவரான கரு ஜயசூரியவை தலைவராக நியமிக்க வேண்டுமென சஜித் பிரேமதாச தலைமையிலான பிரிவினர் முயற்சித்து வருகின்றனர்.இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு நேற்று பிற்பகல் 2 மணியளவில் கூடி ஆராய்ந்தது.
செயற்குழு தீர்மானம் எடுப்பதற்கு முன்னதாக சஜித் குழுவினர் நேற்று சத்தியாக்கிரகம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். என்றாலும், கட்சித் தலைமையகம் முன்னால் ஆர்ப்பாட்டமோ சத்தியாக்கிரகமோ நடத்தக் கூடாதென கங்கொடவில் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.
இதனையடுத்து, தங்களது சத்தியாக்கிரகப் போராட்டத்தை சஜித் பிரேமதாச அணியினர் கொழும்பு, விஹார மகாதேவி பூங்கா அருகில் நடத்தினர்.
என்றாலும், ஐ.தே.க. செயற்குழு எவ்வித தடைகளுமின்றி நேற்று நடந்தது. செய்தி அச்சுக்கு போகும் வரை செயற்குழு தீர்மானங்கள் எதுவும் வெளியிடப் படவில்லை. சஜித் அணியினரின் ஆர்ப்பாட்டத்தில் எதிர்பார்த்த அளவு ஆதரவாளர்கள் கலந்து கொள்ளவில்லை.
இந்த ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்த போது யாரோ குழவிகளை கலைத்து விட்டதால் சஜித் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அல்லோலகல்லோலம் ஏற்பட்டது.
அவர்கள், பேய்விரட்டும் தொனியில் வீதியில் ஆடிப்பாடி “ரணில் அரக்கனே பதவியைவிட்டு ஓடிவிடு” எனக் கோஷமிட்டவாறுவந்து, எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தின் முன்னால் தரையில் அமர்ந்து வலதுகையை உயர்த்தி “கரு ஜயசூரியவுக்கு கட்சியின் தலைமைத்துவத்தைக் கொடுத்துவிட்டு ரணில் விக்ரமசிங்க சென்றுவிடவேண்டும்” என்று பிரதிக்ஞை செய்துகொண்டார்கள்.
நேற்று பிற்பகல் இரண்டரை மணியளவில் விகாரமகாதேவி பூங்காவிலுள்ள புத்தபெருமானின் சிலைக்கு முன்னால் சஜித் பிரேமதாச, தயாசிறி ஜயசேகர, ரோசி சேனாநாயக்க, ரஞ்சித் மத்துமபண்டார, தலதா அத்துகோரல, சுஜீவ சேரசிங்க, புத்திக பத்திரண உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பல பாராளுமன்ற உறுப்பினர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் குழுமியிருந்தனர்.
பின்னர், அவர்கள் ஒவ்வொருவராக ஒரு வாகனத்தின் மீது ஏறிநின்று அங்கு குழுமியிருந்த மக்கள் மத்தியில் ரணில் விக்ரமசிங்க கட்சியின் தலைமைப் பதவியைத் துறக்கவேண்டும். அவர் அவ்விதம் ஒரு தீர்மானத்தை எடுத்தால்தான் கட்சி வலுவடைவதுடன் அரசாங்கத்துக்கு எதிர்வரும் தேர்தல்களில் ஒரு சவாலாக உருவெடுக்க முடியுமென்றும் கோஷமிட்டார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரதான உரைகளை சஜித் பிரேமதாச, ரஞ்சித் மத்துமபண்டார, தயாசிறி ஜெயசேகர ஆகியோர் நிகழ்த்தினர். அங்குரையாற்றிய சஜித் பிரேமதாச, பதினேழு வருடங்களாக படுதோல்வியை எதிர்நோக்கியிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியை கட்டியெழுப்புவது ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமல்ல என்றும், அவருக்கு கட்சியின் தலைமை பதவியில் வீற்றிருக்கும் சுயநலநோக்கம் மாத்திரமே இருக்கிறது என்றும் கண்டனம் தெரிவித்தார். ரணிலுக்கு உண்மை நிலையை எடுத்துரைக்கும் எண்ணத்துடன் தாங்கள் சத்தியாக்கிரகம் போன்ற சாத்வீகப் போராட்டங்களை நடத்துவதாக சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார். ரணில் எதிர்பார்ப்பதைப் போன்று நான் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு ஓடிவிடமாட்டேன் என்று அறிவித்த சஜித் பிரேமதாச உயிருள்ளவரை கட்சியின் நம்பிக்கைக்குரிய சேவகனாக இருப்பேன் என்று சொன்னார்.
நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய தயாசிறி ஜயசேகர தமதுரையில், ரணிலுக்கோ, சஜித்துக்கோ ஆதரவாக தாங்கள் இங்கு வரவில்லையென்றும், இந்நாட்டு மக்களின் நல்வாழ்வைக் கருத்தில்கொண்டே இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதாகத் தெரிவித்தார். சர்வாதிகாரப் போக்கில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு என்றென்றும் பதவியில் வீற்றிருக்க முடியாது என்றும், அவர்களின் பதவிக்காலம் கூடிய விரைவில் முடிவடையும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தவிருந்ததாகவும், நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளித்தே அந்த ஆர்ப்பாட்டத்தை அங்கு சடுதியில் இடமாற்றம் செய்ததாகவும் சென்னார்.
அதையடுத்து அங்கு குழுமியிருந்த சுமார் 2 ஆயிரம் பேர் சம்பிரதாயங்களுக்கு ஏற்ப ‘ரணில் அரக்கனே, உடனடியாக தலைமைத்துவத்தைத் துறந்து ஓடிவிடு’ என்று கோஷமிட்டவாறு ரணில் விக்ரம சிங்கவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு பாதயாத்திரையில் வந்தனர். அதற்கு பின்னர் எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு முன்னால் தரையில் அமர்ந்திருந்த அனைவரும் வலது கையை உயர்த்தி கரு ஜயசூரியவுக்கு உடனடியாக கட்சியின் தலைமைத்துவத்தைக் கொடுத்து ரணில் விக்ரமசிங்க பதவி துறக்கவேண்டும் என்று பிரதிக்ஞையொன்றை எடுத்தார்கள்.
இதே வேளையில், கட்சியின் தலைமை யகமான ‘ஸ்ரீகொத்தாவில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
நிரூஸி விமலவீர, லக்ஷ்மி பரசுராமன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக