இங்கிலாந்து கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் தோல்வி மேல் தோல்வி பெற்று இந்திய அணி சாதனை படைத்து வரும் வேளையில் இந்தியாவின் கிரிக்கெட் ரசிகர்கள் அதாவது படித்த நடுத்தர வர்க்க கனவான்கள் இலண்டனில் நடந்த இளைஞர்களின் கலகத்தைக் கூட கண்டு கொள்ளாமல் இருந்த நேரம். இந்திய அணி தோல்வியால் டி.ஆர்.பி ரேட்டிங் சரிந்து தொலைக்காட்சிகளின் விளம்பரங்களும் குறைந்து போன நிலை. கிரிக்கெட் பால் போனால் என்ன இருக்கவே இருக்கிறது லோக் பால் எனும் பந்து. வந்தார் அண்ணா ஹாசாரே. அவர் அடிக்காத சிக்சரை அடித்ததாக நம்ப வைக்க ஊடகங்களும் அணிவகுத்தன. சின்னத்திரையில் கோக் குடித்தும், லேஸ் கடித்தும் காட்சிகளை மலிவான உணர்ச்சிகளாக உசுப்பேற்றிக் கொள்ளும் மேன்மக்களும் ஆட்டத்திற்கு தயாரானார்கள். இதோ ஆரம்பித்து விட்டது ஜோக்பால் வெர்ஷன் 2.0
அரசு கொண்டு வர இருக்கும் லோக்பாலுக்கு பல் இல்லை என்று அவர்கள் உருவாக்கியிருக்கும் ஜன லோக்பாலை வலியுறுத்தி அண்ணா அணியினர் காலவறையற்ற உண்ணாவிரதத்தை அறிவித்தார்கள். வழக்கமாக இந்தியாவில் குறிப்பாக பெருநகரங்களில் போராட்டம், ஆர்ப்பாட்டம் என்றால் ஆயிரத்தெட்டு நிபந்தனைகள் சமீபத்திய ஆண்டுகளாக அமல்படுத்தப்பட்டு வருகின்றது. தாராளமயமாக்கம் சூடுபிடித்த இந்த ஆண்டுகளில் மக்களின் அரசியல் நடவடிக்கைகளை இல்லாமல் செய்ய வேண்டுமென்றே இந்த நிபந்தனைகளை அரசும், நீதிமன்றங்களும் போட்டி போட்டுக்கொண்டு செயல்படுத்தி வந்தன.
சென்னையில் கூட பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆர்ப்பாட்டம் நடத்திய இடங்களில் எல்லாம் இப்போது நடத்தக் முடியாது. சுவர் எழுத்து எழுத தடை, சுவரொட்டி ஒட்ட தடை, முக்கிய சாலைகளில் கூட்டம் நடத்த, ஊர்வலம் நடத்தத் தடை என்பதெல்லாம் அரசியல் கட்சிகளில் இருக்கும் அனைவரும் அறிந்த விசயம். இந்தகைய அடக்குமுறைகளை ஒழுங்கு என்ற பெயரில் கொண்டு வந்த போதும், அப்படி கொண்டு வரவேண்டுமென்று குத்தாட்டம் போட்ட மேட்டுக்குடி வர்க்கம்தான் இப்போது அண்ணா போராட்டத்திற்கு தடை என்றதும் சீறி எழுகிறது.
டிராபிக் ராமசாமி முதல் இப்போது அண்ணாவின் போராட்டத்தில் மெழுகுவர்த்தியை ஏந்தும் முன்னாள் ஐ.ஏ.எஸ் பெரிசுகள் வரை இந்தகைய ‘ஒழுங்கைக்’ கொண்டு வரவேண்டுமென்று நீதிமன்றங்களில் வழக்கும் தொடுத்திருக்கிறார்கள். இந்து பத்திரிகையில் வாசகர் கடிதம் எழுதியும் பொங்கியிருக்கிறார்கள். அத்தகைய பெரிசு அம்பிகள்தான் இப்போது மீண்டும் எமர்ஜென்சி வந்து விட்டது என்று துள்ளுகிறார்கள்.
சமச்சீர் கல்விக்காக எமது தோழர்கள் தமிழகமெங்கும் போராட்டம் நடத்திய போது பல இடங்களில் போலிஸ் தடியடி, சிறை, வழக்குகளை சந்தித்துதான் நடத்தியிருக்கிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் சிறையில் சில, பல நாட்கள் இருந்திருக்கிறார்கள். அதில் பதினைந்து வயது மாணவனும் உண்டு. இது இந்தியாவெங்கும் அன்றாடம் நடக்கும் நிகழ்வு. எந்தப் போராட்டமும் இத்தகைய அடக்குமுறைகளை சந்தித்தே நடைபெறுகிறது. அப்போதெல்லாம் ஜனநாயகம் காக்கப்படுவதாக ராகம் பாடும் அம்பிகள் இப்போது மட்டும் அதுவும் செல்லமாக அண்ணா போராட்டம் சீண்டப்படும் போது துள்ளுவது காணச்சகிக்க வில்லையே?
அண்ணாவின் வீரகாவியமாக சித்தரிக்கப்படும் அந்த காலவறையற்ற உண்ணாவிரதம் நடத்துவதற்கு டெல்லி காவல்துறை விதித்த 22 நிபந்தனைகளில் வெறும் ஆறு மட்டும் அண்ணா அணியால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. 5000 பேர்களுக்கு மேல் கூடக்கூடாது, மூன்று நாட்களுக்கு மேல் போராட்டம் நடத்தக்கூடாது என்ற அந்த நிபந்தனைகளை டெல்லி போலீசு புதிதாக ஒன்றும் உருவாக்கவில்லை. இவையெல்லாம் தில்லி உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஏற்கனவே உருவாக்கியிருக்கும் வழிகாட்டுதல்கள்தான். அதன் படிதான் நிபந்தனைகளை விதித்திருப்பதாக டெல்லி போலீசு சத்தியமடிக்காத குறையாக தெரிவித்திருக்கிறது.
இத்தகைய நிபந்தனைகள் மட்டுமல்ல இன்னும் பல்வேறு நிபந்தனைகளெல்லாம் இந்தியாவெங்கும் அன்றாடம் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. காஷ்மீர், வடகிழக்கு போன்ற போராட்ட மாநிலங்களில் இது இன்னும் காட்டு தர்பாராக இருக்கும். எனில் இத்தகைய நீதிமன்ற, அரசு நிபந்தனைகள், மக்களின் போராடும் உரிமையை ரத்து செய்கிறது, இவற்றை இந்தியாவெங்கும் ரத்து செய்ய வேண்டும் என்று அண்ணா அம்பிகள் அணி கோரவில்லை. சொல்லப்போனால் அத்தகைய நிபந்தனைகள் இன்னும் அதிகம் வேண்டுமென்பதுதான் அண்ணாவின் பின் இருக்கும் மேட்டுக்குடி வர்க்கத்தின் நிலை.
அண்ணாவிற்காக சென்னையில் சீன் போடும் அருணா சாய்ராம், அனிதா ராம், சுவர்ணமால்யா போன்ற கருநாடக, பரதநாட்டிய தாரகைகளிடம் அண்ணா சாலையில் தொழிலார்களின் ஊர்வலங்களை தடை செய்யலாமா என்று கேட்டுப் பாருங்கள்; கண்டிப்பாக தடை செய்ய வேண்டும் என்று ஒரே ஸ்வரத்தில் பாடுவார்கள், ஆடுவார்கள்! ஆனால் அவர்களது கோரிக்கைதான் ஏற்கனவே அமலில் இருக்கிறது என்பதால் இது ஒன்றும் பிரச்சினை அல்ல.
ஐரோம் ஷர்மிளா காலவறையற்ற உண்ணாவிரதம் இருக்கும் போது போலீசு வலுக்கட்டாயமாக அவரை தூக்கிச் சென்று மருத்துவ மனையில் வைத்து உணவையும், மருந்தையும் வலுக்கட்டாயமாக புகட்டிவிடும். இது பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால் அண்ணாவின் போராட்டத்திற்கு மட்டும் போலிசு பவ்யமாக நிபந்தனைகளை விதிக்கிறது. தாள் பணிந்து பேசுகிறது. அதை அண்ணா ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொன்ன போது பவ்யமாக கைது செய்கிறது. மாஜிஸ்ரேட் கூட அண்ணாவின் இடத்திற்கு வந்து பவ்யமாக விசாரிக்கிறார். பின்னர் நீதிமன்றக் காவல் என்றதும் சிறையில் உண்ணாவிரதத்தை நடத்துகிறார். இரவே விடுதலை என்றதும் சிறையை விட்டு அகல மறுக்கிறார்.
இதுவே மற்றவர்களென்றால் இப்படி எதுவும் நடக்க வாய்ப்பே இல்லை. போராட்டங்களுக்காக நீதிமன்றக் காவலில் வைக்கப்படும் எவரும் அன்றிரவே விடுதலை செய்யப்பட்டதாக சரித்திரம் இல்லை. அப்படி விடுதலை செய்யப்பட்டாலும் யாரும் சிறையிலேயே தங்குவேன் என்று அடம்பிடிக்க முடியாது. குண்டு கட்டாக இழுத்து வந்து வெளியே தூக்கி எறிவார்கள். ஆக அண்ணா ஹசாரேவுக்காக போலீசு, நீதிமன்றம், சிறை எல்லாம் அடிபணிந்து சேவகம் செய்கிறது. இந்த இலட்சணத்தில் இது இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என்று அண்ணா அறிவித்திருப்பதை என்ன சொல்ல? முருகா, முருகா என்று வயிற்றிலும் வாயிலும் அடித்து அழவேண்டியதுதான்.
அரசு கொண்டு வர இருக்கும் லோக்பால் மசோதா தற்போது பாராளுமன்ற நிலைக்குழு முன் இருக்கிறது. இத்தகைய முறைகளில் பாராளுமன்றம்தான் இதை நிறைவேற்ற வேண்டும், மாறாக பாராளுமன்றத்திற்கு வெளியே சிலர் டெண்டு அடித்து போராட்டம் நடத்தி கொண்டு வருவது பாராளுமன்ற ஜனநாயகத்தை மறுப்பதாகும் என்று பிரதமர் மன்மோகன் உட்பட பல காங் அரசு ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.
பாராளுமன்றத்திற்கு தெரியாமல் காட் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டது, அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் கைநாட்டு இட்டது முதலான இட்டதுகளில் இருந்தே பாராளுமன்றத்திற்கு இறையாண்மையோ, புனிதமோ, உரிமையோ ஒரு எழவும் கிடையாது என்பது ஊரறிந்த விசயம். ஆனால் இதையெல்லாம் அண்ண அணி கூறவில்லை. நாங்கள்தான் பல ஆண்டுகளாக கூறி வருகிறோம். ஆக பாராளுமன்றத்தின் பல் எப்போதோ பிடுங்கப்பட்டு விட்டது என்பதும், இந்திய அரசும் இப்போது அமெரிக்காவின் அடிமையாகி விட்ட நிலையில் அது குறித்தெல்லாம் அண்ணா ஹசாரே அணி கவலைப்படவில்லை. அவர்கள் கவலை எல்லாம் அந்த லோக்பாலை தூக்கிவிட்டு இவர்களது ஜன லோக்பாலை கொண்டு வரவேண்டும் என்பதுதான்.
அமைப்பு முறை என்ற முறையில் இந்திய அரசு அமல்படுத்தி வரும் தனியார் மயம்தான் ஊழலின் ஊற்று மூலம் என்பதை மறுத்து அந்த தாராளமயக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு ஊழலை மட்டும் ஒழிக்க வேண்டுமென்று பொத்தாம் பொதுவான முழக்கத்தோடு அண்ணா அணி நடத்துவது ஒரு பச்சையான நாடகமே.
மேலும் அண்ணா ஹசாரே அணி உருவாக்கியிருக்கும் ஜன் லோக்பாலை காங்கிரசு மட்டுமல்ல, பா.ஜ.க, கம்யூனிஸ்டுகள் உட்பட எந்தக் கட்சியும் இதுவரை ஆதரிக்கவில்லை. எனில் எல்லா கட்சிகளையும் எதிர்த்து அண்ணா அணி போராடியிருக்க வேண்டும். அப்படி போராடமல் இருப்பதற்கு என்ன காரணம்? “நீ போராடுற மாதிரி ஆடு, நான் ஆதரிக்கிற மாறி நடிக்கிறேன்” என்று எதிர்க்கட்சிகளும் இந்த நாடகத்தை தெரிந்தே நடத்துகின்றன. அண்ணாவின் ஜன் லோக்பாலை பா.ஜ.க கட்சி ஏற்காத நிலையில் அதன் உறுப்பினர் வருண் காந்தி அதை தனிநபர் மசோதாவாக பாரளுமன்றத்தில் எழுப்புவேன் என்று கூறியிருக்கிறார். இது நாடகம் என்பதற்கு இது ஒன்றே போதும்.
அடுத்து சமீபத்திய பெரும் ஊழலான 2 ஜியை எடுத்துக் கொள்வோம். குற்றவாளி ராசா எடுத்து வைத்த வாதப்படியும், உண்மைகளின் படியும் பிரதமர் மன்மோகன் சிங்கையே இப்போது கைது செய்திருக்க வேண்டும். அவரையும், ப.சிதம்பரம் உள்ளிட்ட அமைச்சர்களையும், முன்னர் ஆட்சியில் இருந்த பா.ஜ.கவின் அமைச்சர்களையும் கைது செய்ய வலுவான முகாந்திரம் உள்ள நிலையில் இப்படி எந்தக் கோரிக்கையையும் எழுப்பாமல் பொத்தாம் பொதுவாக ஊழல் எதிர்ப்பு என்று பேசுவது யாரை ஏமாற்ற?
காமன்வெல்த் ஊழல், 2ஜி ஊழல் என்று ஊழலின் குறிப்பான விசயங்களைப் பற்றி எதுவும் பேசாமல், அவற்றிலிருந்து மக்களின் கவனத்தை கலைக்கவே அண்ணாவின் காமடி நாடகம் பயன்படுகிறது. அது தெரிந்தே காங் அரசும் அண்ணாவை எதிர்ப்பது போல எதிர்த்து அணைப்பது போல அணைத்து இந்த ஆட்டத்தை தொடர்கிறது.
ஆனால் இந்த ஆட்டத்தில் தனது தராதரத்தை மறந்து அண்ணா கோஷ்டி அதிகம் ஹீரோயிசம் போட நினைப்பதுதான் காங்கிரசு அரசின் பிரச்சினை. இந்த ஆட்டத்தின் மூல நோக்கத்தில் இருவருக்கும் உடன்பாடு இருந்தாலும் உடனடி நற்பெயர் யாருக்கு என்பதில்தான் தற்போதைய காமடி சண்டை எழுந்திருக்கிறது.
ஊடகங்கள் அனைத்தும் ஒற்றுமையாக இந்த நாடகத்தை மாபெரும் வீரக்காவியமாக சித்தரிக்கின்றன. இந்தியா முழுவதும் 20 நகரங்களில் மக்கள் எழுச்சி என்றெல்லாம் தொடர்ந்து உசுப்பேற்றுகிறார்கள். எங்கும் காமராவின் எல்லைகளைத் தாண்டி கூட்டம் இல்லை. இருக்கும் கூட்டமும் அரசியல் என்றால் என்ன என்று அ-னா, ஆவன்னா கூட தெரியாத கனவான்கள் கூட்டம். அதிலும் டெல்லி திகார் சிறைக்கு கார்களில் வரும் மேன்மக்கள் ஒரு கி.மீட்டர் தொலைவில் காரை நிறுத்தி விட்டு நடந்து வந்து சிறை முன்பு கூடுகிறார்களாம். இத்தகைய மாபெரும் தியாகங்களை வைத்துத்தான் இதை இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என்று தொடர்ந்து ஓதி நம்மை துன்புறுத்துகிறார்கள்.
42 வருடங்களுக்கு முன்னர் சி.என் அண்ணாதுரை காலமான பிறகு தமிழகம் தற்போது இரண்டாவது அண்ணாவை கண்டெடுத்திருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா குதூகலிக்கிறது. சில நூறு சேட்டுபையன்கள் தோற்றத்தில் இருக்கும் அம்பிகளின் கூச்சலை வைத்து திராவிட இயக்கத்தை கொச்சைப்படுத்துவது அதன் நோக்கம். அதனால்தான் எந்த இந்தி மொழியை எதிர்த்து தமிழகம் போராடியதோ அந்த இந்தி மொழி பேசும் ஒரு தலைவரை தமிழகம் ஏற்றிருப்பதாகவும் அந்த நாளிதழ் விசமத்தனமாக பொய்யுரைக்கிறது.
அண்ணா ஹசாரேவின் காந்திய வேடங்களை பலர் தோலுரித்திருக்கிறார்கள். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கேட்டது, இந்து ஸ்வராஜ் ட்ரஸ்ட் நிதியில் கையாடல் செய்தது, அதை நீதிபதி பி.பி.சாவந்த் உறுதி செய்தது, அண்ணா ஹசாரேவின் கிராமமான ராலேகாவ் சித்தியில் நாட்டாமையாக ஆட்டம் போட்டது, குடித்தவரை தூணில் கட்டி அடிப்பது, அசைவ உணவை கிராமத்தில் தடை செய்தது, கேபிள் டி.வியை முடக்கியிருப்பது வரை பல வண்டவாளங்கள் அண்ணா ஒரு நிலபிரபுத்துவ நாட்டாமை என்பதை தெரிவிக்கின்றன.
ஊடகங்களின் கவரேஜ்ஜுக்கு பொருத்தமாக தனது உண்ணா விரதத்தின் தேதியையெல்லாம் தள்ளிவைக்கும் இந்த விளம்பர மோகியின் பலவீனத்தை புரிந்து கொண்டு ஊடகங்களும் அவரை மாபெரும் போராளியாக சித்தரிக்கின்றன. குறைந்தபட்சம் நமது தங்கபாலு அளவுக்கு கூட அறிவில்லாத இந்த காமடியனை ஊடகங்கள் ஜாக்கி வைத்து தூக்க தூக்க அவரும் தன்னை ஒரு 70 எம்.எம் ஹீரோவாக கருதிக் கொள்ள நாட்டு மக்கள் இந்த நாடகத்தை பார்த்து தொலைக்க வேண்டிய துர்பாக்கிய நிலை.
புரட்சிகரமான முழக்கங்களின் மூலம் மக்களை திரட்டி அவர்களது அரசியலை காயடிப்பதை குறிக்கோளாக வைத்து இயங்கும் ஏகாதிபத்தியங்களின் ஆசி பெற்ற தன்னார்வக் குழுக்கள் அண்ணாவின் நாடகத்தை பயன்படுத்திக் கொள்கின்றன. இவர்கள்தான் ‘இந்தியா’வெங்கும் மேன்மக்களை திரட்டி ஏதோ இந்தியாவே போராடுவது போன்ற சித்திரத்தை உருவாக்குகிறார்கள். ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க போன்ற இந்துத்வ இயக்கங்களும் அண்ணாவின் மூலம் கல்லா கட்டலாம் என்று மனப்பால் குடிக்கின்றன. ராம்தேவ், டபுள் ஸ்ரீ ரவி சங்கர் போன்ற கார்ப்பரேட் சாமியார்களும் தங்களது சாம்ராஜ்ஜியத்தின் நலன் கருதி இந்த நாடகத்தில் முக்கிய பாத்திரமாற்ற விழைகிறார்கள். இந்த வகையில் ஏராளமான உள்குத்துகள் நடந்தாலும் அது நமது கவனத்திற்கு வராது.
ராசா, கல்மாடி இருக்கும் திகார் சிறையில் அண்ணா அடைக்கப்பட்டதையே ஒரு மாபெரும் அநீதியாக ஊடகங்கள் சித்தரிக்கின்றன. திருடர்களுடன் சிலுவையில் அறையப்பட்ட இயேசு நாதர் கூட இத்தகைய குற்றச்சாட்டை முன்வைத்ததில்லை. கைது என்றால் சிறையில்தான் அடைப்பார்கள். சிறை என்றால் குற்றவாளிகள், மற்றும் குற்றம் சுமத்தப் பட்டோர்தான் இருப்பார்கள். சிறையிலும் கூட தீண்டாமையுடன் கூடிய 5 நட்சத்திர தரத்தை எதிர்பார்க்கும் இவர்கள்தான் ஊழலை எதிர்க்க போகிறார்கள் என்றால் எருமை மாடு கூட வெட்கப்படும்.
பேரறிவாளன் 9வால்ட் பேட்டரியை வாங்கிக் கொடுத்தார் என்று சொல்லி அதுவும் ஒரு பொய்க்குற்றச்சாட்டு என்றாலும் அதற்கே தூக்குத் தண்டனை என்று தீர்ப்பளித்த நாட்டில்தான் நோகாமல் மீடியா டார்லிங்காக இருக்கும் அண்ணாவிற்காக அரசு செய்யும் காமடிகளை மாபெரும் அடக்குமுறை என்று சித்தரிக்கிறார்கள். அந்த வகையில் அண்ணாவுக்கு கிடைக்கும் மலிவான கவரேஜ் அனைத்தும் இந்த நாட்டின் மக்கள் உரிமைகளை காவு கேட்பதற்கு பயன்படுகிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
2ஜி ஊழலில் அரசியல்வாதிகள், அதிகாரிகள், முதலாளிகள், அரசு அனைவரும் குற்றவாளிகளாக தெரியவரும் நேரத்தில் அதை மறைப்பதற்கே அண்ணாவின் நாடகம் திட்டமிட்டு நடத்தப்படுகிறது. அந்த வகையில் அண்ணாவின் உண்ணவிரத நாடகம் அரசின் மறைமுக ஆதரவோடு இன்னும் கொஞ்ச நாட்கள் நடைபெறும். கார்ப்பரேட் ஊடகங்களும் அதை வைத்து வரும் நாட்களில் ஊதிப்பெருக்கும். ஓய்வு நேர அரசியலுக்கு வாகாக இருக்கும் இந்த மெழுகுவர்த்தி பேஷன் ஷோவில் கலந்து கொள்வதால் எந்தப் பிரச்சினையும் வராது என்பதை உறுதி செய்து கொண்டு வரும் படித்த நடுத்தர வர்க்கம் மேலும் பாசிசமயமாவதற்குத்தான் இந்த நாடகம் உதவி செய்யும்.
அந்த வகையில் அண்ணாவின் வீரகாவிய காமடி நாடகம் ஆளும் வர்க்கத்திற்கு தற்செயலாக கிடைத்த பொக்கிஷம். இந்த பொக்கிஷத்தை பாதுகாக்க அண்ணா ஹசாரேவே மறந்தாலும் ஆளும் வர்க்கம் மறக்காது. ஊழலின் ஊற்று மூலமான இந்த அரசு அமைப்பு முறையை மாற்ற வேண்டும் என்று சிந்திப்பவர்கள் இந்த காமடி நாடகத்திற்கு அழ முடியாது. மீறி அழுபவர்களை யாரும் காப்பாற்றவும் இயலாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக