வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

வேலூர் ஜெயில் முன்பு முற்றுகை போராட்டம்!


ராஜீவ் கொலைக் கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தூக்கு தண்டனை கைதிகளாக வேலூர் ஜெயிலில் உள்ளனர். இவர்களின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார். இதனால் எந்த நேரத்திலும் இவர்கள் தூக்கிலிடப்படலாம் என்ற பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ராஜீவ் கொலைக் கைதிகளை நேற்று முன்தினம் வைகோ சந்தித்து பேசினார். நேற்று சீமானும் சந்தித்தார். அப்போது அவர் உலகில் 135 நாடுகள் மரணதண்டனையை கைவிட்டுள்ளன.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிலும் மரண தண்டனையை கைவிட வேண்டும் என்றார். இதேபோல் மரண தண்டணையை ரத்து செய்யக்கோரி மக்கள் இயக்கம் சார்பில் 1000 பேர் சைக்கிளில் பேரணியாக சென்னையிலிருந்து வேலூர் வந்தனர். அப்போது அவர்கள் வேலூர் ஜெயில் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரப்பான நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் தூக்கு தண்டனை கைதி பேரறிவாளனை பார்க்க அவரது உறவினர்களான அத்தை, தம்பி ஆகியோர் வேலூர் ஜெயிலுக்கு வந்தனர். அப்போது அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

எங்களது சொந்த ஊர் ஜோலார்பேட்டை தற்போது பொள்ளாச்சியில் வசித்து வருகிறோம். நாங்கள் மாதம் ஒரு முறை வந்து பேரறிவாளனை சந்தித்து விட்டு செல்வோம். முதலில் எங்களுக்கு எந்த வித நம்பிக்கையும் இல்லாமல் இருந்தேம். தற்போது பல கட்சிகளை சேர்ந்தவர்கள் மரண தண்டனையை எதிர்ப்பதால் ரத்து செய்யப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. மரண தண்டனை மறுபரிசீலனை செய்யப்படும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை: