லக்ஷ்மன் கதிர்காமர் பெரும்பாலும் அவரது சிங்கள ஆர்வலர்கள் மற்றும் தமிழ் எதிர்ப்பாளர்கள் ஆகிய இருபகுதியினராலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளார் திஸ்ஸ ஜயதிலக
சமீப காலங்களில், விசேடமாக யுத்தத்துக்கு பின்னான காலப்பகுதியில் காதைத்துளைக்கும் கர்ணகடூரத் தன்மையான பொது விவாதங்களில், பெரும்பாலான ஸ்ரீலங்கா வாசிகளால் பேசப்பட்டு வருபவைகளை நானறிவேன், ஆயினும் அவர்களோடு சம்பந்தப்படுவதை நான் தவிர்த்து வந்துள்ளேன்.
அதற்காக தங்கள் கருத்துக்களின் கண்ணோட்டத்தில் அசௌகரியத்தை உணராத மேலும் தங்கள் சொந்த மற்றும் உண்மையில் கவனமாகக் கருதப்படும் மாற்றுக் கருத்துக்களைத் தேடும் சக பிரஜைகளோடு அமைதியான கலந்துரையாடல்களையும் நாடினேன்.
காலஞ்சென்ற லக்ஷ்மன் கதிர்காமர் அத்தகைய ஸ்ரீலங்காப் பிரஜைகளில் ஒருவராக இருந்துள்ளார். அவருடன் நான்; அவருடைய சொந்தக் கருத்துக்களோடு பிணைய வேண்டிய தேவையற்ற, எனது திட்டங்களையும் மற்றும் எண்ணங்களையும் கூட வெகு சுலபமாகப் பரிமாறிக் கொள்ளக்கூடியதாக இருந்தது. எந்த நேரத்திலும் அத்தகைய கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கு தன்னைத் திறந்து வைத்திருந்த உணர்வுசார் நுண்ணறிவும் தன்னடக்கமும் கொண்ட உண்மையான கல்வியறிவுள்ள மனிதராகத் திகழ்ந்தார் அவர். காலஞ்சென்ற வெளியுறவு அமைச்சரோடு நான் வழக்கமாகப் பரிவர்த்தனை செய்து கொள்வதைப்போல கருத்துக்களைப் பரிமாற இப்போது எனக்கு சில நெருங்கிய நண்பர்கள் உள்ளனர். நாங்கள் கலந்துரையாடும் மற்ற விடயங்களுக்கிடையே, லக்ஷ்மன் கதிர்காமர் இன்று இன்னமும் எங்களோடு இருந்திருந்தால் ஸ்ரீலங்காவை இப்போது காணும் துரதிருஷ்டகரமான சங்கட நிலையிலிருந்து விடுவிக்க என்ன செய்திருப்பார் என்று விவாதிக்க நேர்ந்தது. இந்த குறிப்பிட்ட கருப்பொருளைப் பற்றி விரிவாகப் பிரதிபலிப்பது, ஆகஸ்ட் 12ல் வரும் அந்த மனிதரின் ஆறாவது நினைவு தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தப் பயன்படுமென நான் நினைக்கிறேன்.
லக்ஷ்மன் கதிர்காமர் கொண்டிருந்த மிகப் பெரிய சொத்து குறுகிய தேசியவாதத்திலிருந்து அவர் பெற்றிருந்த சுதந்திரமேயாகும். அதன்படி அவர் இன மற்றும் மத சார்புநிலைகளுக்கு அப்பாற்பட்டிருந்தார். இந்த உலகத்தைப் பொறுத்தவரை அவர் ஒரு ஸ்ரீலங்காப் பிரஜை மாத்திரமே. எங்கள் எல்லோருக்கும் உள்ள சொந்த அடையாளத்தைப்போல அவரது பிறப்பால் அவர் கொண்டிருந்த தமிழ் கத்தோலிக்கன் என்கிற தீவிர அடையாளங்களை அவர் காவித் திரிந்ததும் இல்லை. அதற்குக் கட்டுப்பட்டதுமில்லை. அவர் ஒரு நல்ல பொறுப்புள்ள கத்தோலிக்கர் (இங்கு குறிப்பாக நான் நினைவுகூருவது 1990ல் வேதாகமத்தின் சமூகத் தொடர்பின் பொதுக்கருத்தாக அவர் ஆற்றிய வணக்கத்தக்குரிய செலஸ்ரீன் பெர்ணாண்டோ ஞாபகார்த்தப் பேருரையை).
மேலும் மற்றைய சமயங்களிலுள்ள நல்ல கருத்துள்ள தத்துவங்களையும் கூட உறுதியாகப் பின்பற்றுபவராகவுமிருந்தார். இந்த பரந்த மனப்பாங்கும், பெருந்தன்மையான உணர்வுகளும்தான், கதிர்காமரை 1994 லிருந்து அவர் குரூரமாக கொலை செய்யப்பட்ட 2005வரை மிகவும் திறமையான ஸ்ரீலங்கா இராஜதந்திரியாக கடமையாற்ற வைத்தது.
திருமதி.சிறிமாவோ பண்டாரநாயக்காவைத் தவிர (குடியரசு அரசியலமைப்புக்கு முன்னர் 1972 மற்றும் 1978 களில், நமது நாட்டின் பிரதமராக இருப்பவர்தான் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சர்களாகவும் இருந்துவந்தனர்) வேறு எந்த ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சரும் அத்தகைய மதிப்பிட முடியாத உயரிய சேவையினை நமது நாட்டுக்கு வழங்கியதுமில்லை. அவரது வல்லமைமிக்க நுண்ணறிவு, நேர்மை, கருணை, கவர்ச்சி, நகைச்சுவையுணர்வு என்பன பற்றி இங்கு வருகை தந்திருந்த பிரித்தானிய அமைச்சர் லியாம் பொக்ஸ் கூட 2011ல் தனது லக்ஷ்மன் கதிர்காமர் நினைவப் பேரூரையை ஆற்றும்பொழுது, உலகின் நமது பகுதியுடனும் மற்றும் மேற்குடனும் ஒரு பரஸ்பர நம்பிக்கையும் மற்றும் புரிந்தணர்வையும் நிறுவுவதற்கு கதிர்காமரால் இயலக்கூடியதாக இருந்ததைப்பற்றி மிகவும் புகழ்ந்து பேசினார்.
அவர் ஒருபோதும் தனது முயற்சியின் ஆழத்துக்கு அப்பால் சென்றதுமில்லை. அவருக்குப் பின்பு அவரது இடத்தைப் பெற்றவர்களோ, மற்றும் உலகின் எந்தப்பகுதியில் உள்ளவர்களோ அவர் பெற்றிருந்ததைப் போன்ற நல்ல பயனுள்ள விளைவுகளைப் பெற்றதுமில்லை. அவரது நம்பகத்தன்மையை அல்லது அவரது திறமையை எவரும் சந்தேகித்ததில்லை.
அவர் தைரியமும் நேர்மையும் மற்றும் கீழ்த்தரமான விவாத விடயங்களில் மதிப்பு தேடுபவராகவோ அல்லது சமீப காலங்களில் அனுபவக்குறைவான அவரது சக ஸ்ரீலங்காவாசிகள் தங்கள் முயற்சியின் இறுதியில் நாடகீயமான பரிதாபகரமான நிலையை எட்டியதைப்போலில்லாமல் எதற்கும் அஞ்சாமல் உறுதியுடன் பேசக்கூடிய வல்லமை கொண்டவராகவிருந்தார். அவர் தன்னுடன் உரையாடுபவருடன் வலுவான கருத்துவேறுபாடு கொண்டிருந்தாலும்கூட தன்னுடைய மனஅமைதியையோ அல்லது நகைச்சுவையையோ ஒருபோதும் கைவிட்டதில்லை. 16 மார்ச், 2005 நடந்த பி.பி.சியின் ‘கடும் பேச்சு’ நிகழ்ச்சி நேர்காணலில் இந்த இரண்டு பண்புகளையும் காணக்கூடிய அற்புதக்காட்சி இடம் பெற்றிருந்தது.
அவரை நேர்காணல் செய்தவர், தமிழர் புனர்வாழ்வு நிறுவனத்தைச் சேர்ந்த சந்துரு பரராஜசிங்கம் என்பவர் ஸ்ரீலங்கா அரசாங்கத்தைக் கண்டனம் செய்து “எங்களுக்கு (ஸ்ரீலங்காவிலுள்ள தமிழர்களுக்கு) போதியளவு உதவிகள் வழங்கப்படவில்லை” என்று தெரிவித்திருப்பதைக் குறிப்பிட்டு “அந்த ஒலி உங்களுக்கு ஒரு பிரச்சாரம் போலத் தோன்றுகிறதா?” என்கிற ஒரு கேள்வியையும் தொடுத்திருந்தார்.
கதிர்காமரின் பதில் நிச்சயமாக அது ஒரு பிரச்சாரம்தான் என்பதாகவிருந்தது. நேர்காணல் செய்த பெண்மணி அந்த விடயத்துக்கு சற்று அழுத்தத்தை தேடும் விதமாக ஒரு அதிகாரப+ர்வமான ஆதாரமாக நினைத்து, சாதாரண ஒருவரல்ல 2004 டிசம்பர் மாதம் ஸ்ரீலங்காவில் ஆழிப்பேரலை நிகழ்ந்தது முதல் ஸ்ரீலங்காவில் நடைபெறும் முன்னேற்றங்களை அவதானித்து வரும் சர்வதேச அகதிகள் நிறுவனத்தைச் சேர்ந்த ஜோயல் கிரானி என்பவர்கூட இதே கருத்தைக் கூறியுள்ளாரே என அமைச்சரிடம் சுட்டிக்காட்ட முயன்றார்.
கதிர்காமரின் பதில் துரிதமானதாகவும் கூர்மையானதாகவுமிருந்தது. முதலில் அந்தக் கனவான் யார் என்பது தனக்குத் தெரியாது எனக்குறிப்பிட்டதும் அவர் ஒரு மேலைத் தேசத்தவர் என அவருக்கு கூறப்பட்டதும் அமைச்சர் திருப்பியடிக்கும் விதமாக” மன்னிக்கவும் அவர் ஒரு மேலைத் தேசத்தவர் என்கிற காரணம் என்னை சிறிதளவுகூடக் கவரவில்லை” என்று பதிலளித்தார்.
கண்ணியமானதும் பிரபலமானதுமான கதிர்காமரின் இனிமையான குரலில் வெளியான பதிலில் எதுவித நாடகத்தன்மையோ நடிப்புத் திறனோ இருக்கவில்லை. இன்று மறைமுகமாகத் தெரிவிக்கப்படும் பல கண்டனங்களை கையாள்வதில் அந்த மென்மையிலும் திறமையிலும் நாங்கள் குறைவடைந்திருப்பது வெளிப்படை. இன்று பேச்சாளர்கள் உள்நாட்டுப் பார்வையாளர்களுக்கு வேண்டியே நாடகம் போட முனைகிறார்கள்,மற்றும் தூதர்களின் செய்திகளை காதில்போட்டுக் கொள்ளாமலே துரத்தியடிப்பதுடன் சட்டப்படி அவற்றை நிராகரிப்பதுடன் அந்த நிராகரிப்புகள் நியாயமானவை என்றும் அழைப்பு விடுக்கிறார்கள்..
சிலர் குறிப்பிடும் பகுதியாகிய சிங்களவர் – தமிழர் மோதல்கள் அல்லது தேசிய மோதல்களைப் பற்றிய கதிர்காமரின் பதில்களில் சார்ந்திருப்பவற்றைப்பற்றிய மிகப்பெரிய அறியாமை நிலவுகிறது. தமிழ் புலிகளுக்கு எதிராக அவர் கடைப்பிடித்த அறிவு முதிர்ச்சியான கொள்கையிலான எதிர்ப்பு பெரும்பாலும் அவரது சிங்கள ஆர்வலர்கள் மற்றும் தமிழ் எதிர்ப்பாளர்கள் ஆகிய இருபகுதியினராலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. விவேகமற்றவர்களாயும் மற்றும் இனப்பாகுபாடுள்ளவர்களாயும் உள்ள தமிழர்கள் அவரை ஒரு காட்டிக் கொடுப்பவராகப் பார்த்த அதேவேளை பெரும்பாலும் எளிமையான சிங்ளவர்கள் அவரை எண்ணிக்கையின் பெரும்பான்மை அடிப்படையில் ஆட்சி நடத்தும் ஒரு குழுவின் ஆதரவாளர் என்றே கருதினார்கள். இரண்டுமே முற்றிலும் தவறான கருத்து.
எங்கள் காலகட்டத்தில் ஸ்ரீலங்காவில் அமைதிக்கு வேண்டி அவர் தொடர்ச்சியாக நடத்திய தைரியமான பிரச்சாரங்களில் மனித சுதந்திரங்களை சமாதானத்தை உருவாக்கும் செயற்பாடுகளுக்குள் அடக்கி வைக்கத் தேவையில்லை என அவர் நம்பினார். அதேவேளை புலிகளின் பயங்கரவாத உத்திகளை இடைவிடாது விமர்சித்து வந்தாலும், நீண்டகாலமாக இழுபட்டுவரும் சிக்கலான இனப்பிரச்சினைக்கு ஸ்ரீலங்காத் தமிழ் பிரஜைகள் ஐக்கியமான ஸ்ரீலங்காவுக்குள் கண்ணியத்தோடு வாழுவதற்கு ஏற்றதான ஒரு அரசியல் தீர்வினை ஏற்படுத்துவதற்காக அவர் அயராது உறுதியோடு உழைத்தும் வந்தார். மங்கள சமரவீர சரியாகக் குறிப்பிட்டுள்ளதைப்போல, கதிர்காமர் அடிக்கடி வெளிப்படுத்திய அவரது நம்பிக்கையானது சமாதானத்துக்கான யுத்தம் ஸ்ரீலங்கா மக்களின் குறிப்பாக ஸ்ரீலங்காத் தமிழ் மக்களின் மனங்களுக்குள்ளும் எணணங்களுக்குள்ளும் நிச்சயம் போராடி வெல்லப்பட வேண்டும் என்பதாகும்.
இந்த முடிவினை நோக்கி, மிகவும் உணர்ச்சிபூர்வமான ஸ்ரீலங்கா மக்களின் இதயங்களுக்கு நெருக்கமாக வரக்கூடிய திட்டங்களில் கதிர்காமர் முனைப்பையும் தனிப்பட்ட ஆர்வத்தையும் காட்டி வந்தார். அப்படியான ஒரு திட்டத்துக்கு உதாரணமாக, யாழ்ப்பாண பொது நூலகத்தை மீள் நிர்மாணிக்கும் பணியில் அவர் தன்னை ஈடுபடுத்தியிருந்தார். நூலகத்தக்கு வேண்டிய நூல்களையும் இதர பொருட்களையும் நன்கொடையாகப் பெறுவதற்கு வேண்டி அவர் வெளியுறவு அமைச்சராக இருந்த நாட்களில் அயராது பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார்.
காலஞ்சென்ற லக்ஷ்மன் கதிர்காமர் சிறந்து விளங்கிய முக்கிய பகுதிகளில் ஒன்று அமைதியான இராஜதந்திரச் செயல் திறம், அப்படியான மிகச் சரியான எண்ணத்தை பயன்படுத்தும் பண்பானது அவர் இல்லாத நிலையில் தெளிவாகத் தெரியக்கூடிய ஒரு குறைபாடாக உள்ளது. அவர் இன்று நம்மோடு இருந்திருந்தால், ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகத்தின் நிபுணர்குழுவினால் எம்மீது சுமத்தப்பட்டுள்ள கண்ணியக் குறைவுகளையோ அல்லது மிகப்பெரியளவில் பாதிப்புகளை உண்டாக்கியிருக்கும் சனல் - 4 காணொளிகளையோ சமாளிக்க முடியாமல் தடுமாறியிருக்க மாட்டோம் என்று நான் துணிந்து கூறுவேன். அவற்றின் சில அம்சங்களில் குற்றங்குறைகள் இருந்தாலும். அத்தகைய அறிக்கைகளும் காணொளிகளும் பகிரங்கக் களத்தில் உள்ளதுடன், வேண்டப்படாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட தூய புனைதல் என வீரமாக நிராகரிக்க முடியாதளவுக்கு சில உண்மைகளும் அதில் அடங்கியுள்ளன என்கிற காரணமும் எஞ்சியிருக்கிறது.
மேற்குலகம் தமிழ் புலிகளை பயங்கரவாதிகள் இயக்கங்களின் பட்டியலில் இடம்பெறச் செய்வதற்காக கதிர்காமர் வெற்றிகரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டதைப்போல இந்தக் கடுமையான குற்றச்சாட்டுகள் மூலம் ஸ்ரீலங்காவுக்கு ஏற்பட்டிருக்கும் தார்மீகப் பழியிலிருந்து அதனைக் காப்பாற்ற வெளியுறவுக் கொள்கைப் பரிமாணங்களை வெற்றிகரமாகக் கையாண்டிருப்பார். நேரத்துக்கு ஏற்றபடி திறமையுடனும் அறிவுடனும் மேற்கொள்ளப்படும் இராஜதந்திர செயற்பாடு நிச்சயமாக அழிவை ஏற்படுத்தும் எதிர்மறையான பிரசாரத்தை ஸ்ரீலங்கா தவிர்த்துக்கொள்வதை சாத்தியமாக்கியிருக்கும்.
லக்ஷ்மன் கதிர்காமரும் மற்றும் அமைச்சில் மிகவும் தன்னிறைவுடனும் கருணையுடனும் அவர் வழிநடத்திய செயல்திறன்மிக்க மூத்த இராஜதந்திரிகளும் நமது நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் கொடூரமான சேதாரத்தை கையாள்வதற்கு ஏற்ற திறமை, முதிர்ச்சி, நிபுணத்துவம் ஆகியவற்றை நிச்சயம் வழங்கியிருப்பார்கள். முதன் முதலாக கதிர்காமர், இன்றிருப்பதைப் போலில்லாமல் இந்த இடம் தேடும் தன்னார்வக்காரர்களுக்கு அரசுகள் இடையிலான தொடர்புகள் சம்பந்தப்பட்ட விடயத்தில் பங்குகொள்வதற்கான எந்தப் பாத்திரமும் கிடையாது என்பதை நன்றாக வெளிக்காட்டியிருப்பார்.
அரசாங்கத்தில் உள்ள அல்லது அரசியல் மூலம் நியமிக்கப்பட்ட ஒவ்வொருவரும் தற்சமயம் நமது வெளியுறவுக் கொள்கையின் செயற்பாட்டை அதற்கு வெளியே இயக்குகிறார்கள் அல்லது அதன் நம்பகத்தன்மையை கேள்விக்கு இலக்காக்குகிறார்கள் போலத் தெரிகிறது. தங்கள் இராப்போசனத்துக்காக வேண்டி இராகமில்லாமல் தொடர்ந்து பாட்டுப்பாடி வரும் இந்த சந்தர்ப்பவாதிகளால் ஓரங்கட்டப்பட்டுவரும் வெளியுறவு அமைச்சகத்துக்கும் அதன் செயற்திறன் வாய்ந்த இராஜதந்திரிகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். மேலும் லக்ஷ்மன் கதிர்காமர் அவரது இடத்துக்குத் தெரிவானவர்கள் தற்போது செய்து வருவதாகத் தோன்றுவதைக் காட்டிலும் நிலமையின் தன்மையை மிகவும் சரியாகக் கணித்திருப்பார். உலகமானது நாம் காண்பதைக் காட்டிலும் இன்று மிகவும் சிக்கல் நிறைந்த இடமாக உள்ளது. இன்றைய நண்பர்கள் வெகு சுலபமாக நாளைய எதிரிகளாக அல்லது கடந்து செல்லும் காட்சிக்கு ஒரு நடுநிலை அவதானிப்பாளர்களாக மாறிவிடுவார்கள். அரசியல் பேரங்கள் எந்த நேரத்திலும் பகைமையாக மாறித் தோன்றக்கூடிய சாத்தியங்கள் உள்ளன. சமீபத்திய மாதங்களில் நாம் கண்டுள்ள விடயங்களே இதற்குச் சாட்சி.
சர்வதேச உறவுகளுக்கான நடைமுறை ஒரு தார்மீக விளையாட்டு அல்ல என்பது நமக்கு மட்டுமே நன்கு தெரியும். சுயலாபங்கள் அரசாங்கங்களுக்கு இடையே உள்ள உறவுகளைக் கட்டுப்படுத்தக்கூடியது. அது நட்பு அல்லது பகை என்று உணர்ந்து அறிவதில்லை. அரசாங்கங்களுக்கு இடையே உள்ள உறவுகள் நீதி நெறியற்ற ஒன்று, சிறப்பான வேளையானாலும் மற்றது மோசமான தருணமானாலும் பெரும்பாலும் அது ஒழுக்கக் கேடானதாகவே உள்ளது. எங்கள் தேசிய செய்தித்தாள்களின் பல பங்களிப்பாளர்களில் ஒருவர் குற்றம் சுமத்தியிருப்பதைப் போல இரண்டு இல்லையெனில் மூன்று வகை தரங்கள் இந்தக் கட்டத்தில் பிரயோகிக்கப் படுகின்றன.
அதில் குறிப்பிடத்தக்க ஒருவகையான தரம் பொருளாதார ரீதியில் பலம் பொருந்தியதாகவும் இராணுவ ரீதியில் உறுதியாகவும் உள்ளது. மற்றையது பொருளாதார, இராணுவ, மற்றும் அரசியல் தன்மைகளில் பலவீனமானதும் செல்வாக்கு குறைந்ததுமான ஒரு தரம்.
7 ஆகஸ்ட் 2011 சண்டே ரைம்ஸ் ஆசிரியரும் மற்றும் இராஜதந்திர செயற்பாடுகளுக்கான ஆசிரியரும் முறையே தங்களின் மிகவும் உணர்திறன் மிக்க பங்களிப்புகளில் வரப்போகும் மாதங்களில் அநேகமாக என்ன நடக்கலாம் என மிகச் சரியாக குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்கள்.
விடயங்கள் இருக்கும் நிலமையில் ஸ்ரீலங்காவின் தற்போதைய தேசிய மூலோபாயத்தை அவதானிக்கும் ஒருவரது எண்ணம் (ஒருவரது அவதானத்தின் எல்லையில்) ஸ்ரீலங்காவை கூண்டில் நிறுத்தியிருக்கும் கருத்தொருமித்த சர்வதேச நடவடிக்கைகளில் இருந்து எங்களுக்கு பிணை பெற்றுத் தாருங்கள் என்று சீனாவிடமும் ரஷ்யாவிடமும் விழும் நிலையில் அது இருக்கிறது என்பதாகத்தான் இருக்கும். சண்டே ரைம்ஸ் மிகவும் இன்றிமையாத கேள்வியொன்றைக் கேட்கிறது: உண்மையில் சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் மிகவும் பயனுள்ள நாடுகளான சூடான், ஈரான் மற்றும் லிபியா போன்றவை இதே போன்ற ஒரு எதிர்பார்ப்புடன் தவித்தபோது அவர்களுக்கு உதவிகள் கிட்டாதபோது, ஸ்ரீலங்கா அத்தகைய உதவிகளின் பயனாளியாக முடியும் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?
எங்கள் நம்பிக்கைகள் யாவற்றையும் ஒரே கூடைக்குள் போடுவது விவேகமானதல்ல, ஏனெனில் நமக்கு முன்னே மற்றைய நாடுகள் அப்படிச் செய்து பெற்ற அனுபவங்கள் ஒரு அளவுகோலாக உள்ளது. ஸ்ரீலங்கா அதன் சொந்தக் கால்களில் நிற்க வேண்டுமாயின் வெளிச் சக்திகளிடம் கெஞ்சும் மனப்பாங்கில் அதன் தேசியம் செல்வதற்கு பரிந்துரைக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறோம். மாறாக ஸ்ரீலங்கா அதன் சர்வதேச உறவுகளில் விவேகமாகவும் நடைமுறைக்கேற்றவாறும் முன்னெச்சரிக்கையுடன் அவதானமாக இருக்க வேண்டும்.
அத்தகைய நடைமுறைகள் சர்வதேச விவகாரங்களில் கடந்த காலங்களில் நாம் நின்றிருந்த சிறப்பான இடமாகிய கூட்டுச் சேராமை எனும் அறிவுள்ள பின்தொடர்கையை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும். எமது தேசிய நலத்தினைக் கருத்தில் கொண்டு அத்தகைய கடந்த காலத்துக்கு திரும்புவதைப்பற்றி தீவிர பரிசீலனை செய்யவேண்டும். மாபெரும் சுறாமீனும் அறுக்குளா மீனும் சண்டையிடும்போது சிறிய மீனுக்குத் தீங்கான பாதையை காட்ட முனைகின்றன. எனும் இரத்தினச் சுருக்கமான ஒரு சிங்கள சொல்வழக்கு உள்ளது. இதிலிருந்து நாம் ஒரு நீதிநெறியை வரைய முடியும் அல்லவா?
சுறாக்கள் பரவி மாசுபடிந்துள்ள நீர்நிலையைப்போலுள்ள எமது சூழ்ச்சியான இந்த நிலையை கடந்து செல்ல லக்ஷ்மன் கதிர்காமர் இருந்திருந்தால் உதவி செய்திருப்பார் என்பதே எனது கருத்து. ஏனெனில் அவரது நாட்களில் சர்வதேச உறவுகளில் அவர் மறுக்கமுடியாத திறமையான ஒரு கப்பலோட்டியாக இருந்துள்ளார். அவர் போருக்கு பிந்தியகால வெளித் தலையீடுகளை முன்கூட்டியே உணர்ந்து கொண்டிருப்பார். அத்துடன் எங்கள் மிதவாத நடுத்தர வர்க்கத்தினருடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் எமது நெருக்கடிக்கு ஏற்றுக் கொள்ளத்தக்க உள்நாட்டுத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி ஸ்ரீலங்காவை வழி நடத்தியிருப்பார்.
அவர் சந்தேகமின்றி தீவிர புலம்பெயர் தமிழர்களிடமிருந்து எழும் ஆபத்தான வெளிச்சவால்களையும் மற்றும் தீவிர - ஸ்ரீலங்கா தேசியவாதிகளால் எழும் உள்நாட்டு சவால்களையும் சமாளிக்கும் தந்திரநுட்பம் கொண்டிருந்திருப்பார். எமது நாடு எதிர்கொள்ளும் வெளிப்புற அச்சுறுத்தல்களை நடுநிலையாக்க சிறந்ததும் தார்மீக ரீதியில் செய்யக்கூடியதுமான சரியான ஒரே வழியாக எங்களால் செய்யவேண்டிய அவசியமான ஒன்றாக இருப்பது, இப்போது இரக்கத்துடன் எமக்குப் பின்னால் காட்சிதரும் கொடிய உள்நாட்டு யுத்தத்தினால் எழுந்திருக்கும் சாம்பல்களிலிருந்து நல்லிணக்கமும் ஐக்கியமும் கொண்ட ஸ்ரீலங்காவை கட்டியெழுப்ப வேண்டியதுதான் என்று லக்ஷ்மன் கதிர்காமர் உணர்ந்து கொண்டிருப்பார்.
தமிழில்:எஸ்.குமார்
தமிழில்:எஸ்.குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக