இலங்கை ஒரு தீவு என்ற ரீதியில் அதன் கரையோரப் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதனாலேயே, யுத்தம் முடிவடைந்துள்ள நிலையிலும் போர் விமானங்கள் உள்ளிட்ட ஆயுத உபகரணங்கள் கொள்வனவு செய்யப்படுகின்றன' என்று அரசாங்கத்தின் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு, இன்று வியாழக்கிழமை பிற்பகல் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் ஒருவர், 'யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் ரஷ்யாவிடமிருந்து இராணுவ ஹெலிகொப்டர்களை அரசாங்கம் கொள்வனவு செய்ய வேண்டியதன் அவசியம் என்ன?' என்ற கேள்வியை எழுப்பினார். இந்தக் கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், 'கரையோரப் பாதுகாப்பில் காணப்பட்ட பலவீனம் காரணமாகவே விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் பாரியளவு போர் ஆயுதங்கள் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. இவ்வாறானதொரு நிலைமை மீண்டும் கட்டவிழ்வதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது. அதனால் நாட்டுக்குள்ளேயும், நாட்டுக்கு வெளியேயும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அதற்காக கரையோரப் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையிலேயே வெளிநாடுகளிலிருந்து ஹெலிகளையும், போராயுதங்களையும் கொள்வனவு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகிறது' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக