அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை வியாழக்கிழமையுடன் நிறைவடைகின்றது. ஆனால், அரசிடமிருந்து இதுவரையில் எந்த விதமான பதிலும் இல்லை. எனவே, தீர்வுத்திட்டம் தொடர்பிலான மூன்று அம்சக் கோரிக்கைகளுக்கு இணங்காவிடின் பேச்சு வார்த்தைகளை முன்னெடுப்பதில் அர்த்தமில்லை என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
வாய் மூலமாகவோ எழுத்து மூலமாகவோ அரசிடமிருந்து பதிலை கூட்டமைப்பு எதிர்பார்க்கின்ற போதிலும் அவர்கள் வெறுமனே சம்பந்தம் இல்லாமல் ஊடகங்களில் அறிக்கைகளை வெளியிடுகின்றனர். இந்த நிலை நியாயமான அரசியல் தீர்வுக்கோ பேச்சுவார்த்தையின் எதிர்காலத்திற்கோ சாதகமாக அமையாது என்றும் அவர் தெரிவித்தார்.இது தொடர்பாக சுரேஷ் பிரேமசந்திரன் எம்.பி தொடர்ந்தும் கூறுகையில்,
கடந்த 4ஆம் திகதி அரசாங்கம் அரசியல் தீர்வு தொடர்பான 10ஆவது சுற்றுப் பேச்சை முன்னெடுத்தது. இதன் போது ஆட்சி அதிகார முறைமை மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான விடயதானம் மற்றும் செயற்பாடுகள் வரி நிதி தொடர்பிலான அதிகாரங்கள் என்ற மூன்று அம்சக் கோரிக்கைகளுக்கு அரசிடம் வாய் மூலமாகவோ எழுத்து மூலமாகவோ நிலைப்பாட்டை நாம் கோரினோம்.
இதற்காக இரண்டு வார கால அவகாசத்தையும் வழங்கினோம். நாளை வியாழக்கிழமையுடன் மேற்படி கால அவகாசம் நிறைவடைகின்றது. ஆனால் இதுவரையில் எந்த விதமான உத்தியோகபூர்வ பதிலும் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கவில்லை. எவ்வாறாயினும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளை எதிர்காலத்திற்காகவும் விரைவான அரசியல் தீர்வுக்காகவும் விட்டுக் கொடுப்புடன் செயற்பட்டு வருகின்றது.
இதனை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்களின் அரசியல் தீர்வுக்கான வாய் மூலமாக கூட கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்காத போது பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வை எட்டுவது என்பது எந்தளவிற்கு சாத்தியப்படும். பல அமைச்சர்கள் எமது நிபந்தனைகளுக்கு எதிராக கருத்துக்களை வெளியிடுகின்றனர். ஆனால் அரசாங்கமோ நேரடியாக எம்மிடம் பதில் கூற மறுக்கின்றது.
எனவே பேச்சுவார்த்தைகளின் எதிர்காலம் அரசாங்கம் வழங்க உள்ள மூன்று அம்சக் கோரிக்கையின் பதிலிலேயே தங்கியுள்ளது என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக