வெள்ளி, 3 செப்டம்பர், 2010

நிருபமா: இரும்பைப்போன்று உறுதியாக பழைய நிலைமைக்கு வந்துள்ளீர்கள் முல்லைத்தீவு மக்களைப் பாராட்டினார்


யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் வட பகுதி மீள்கட்டுமானப் பணிகளில் உதவியளித்து வரும் இந்தியா அந்த வேலைத்திட்டங்களில் இந்தியப் பிரஜைகளே ஈடுபடுத்தப்படுவதாக வெளியாகும் செய்திகளை நிராகரித்ததுடன் உள்ளூர் பணியாளர்களையே பயன்படுத்துவதாகத் தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக உள்ளூர் ஊடக செய்திகளை வருகைதந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ் நிராகரித்திருக்கிறார்.இந்தச் செய்திகளில் உண்மை இல்லை எனவும் கட்டுமானப் பணிகளில் உள்ளூர் உதவி மட்டுமே பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறியதாக பி.ரி.ஐ.செய்திச் சேவை நேற்று புதன்கிழமை குறிப்பிட்டது.

மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ள நிருபமாராவ், நேற்று முல்லைத்தீவுக்கு சென்று நிலைமைகளை பார்வையிட்டார்.யுத்தத்தின் போதான சவால்களை எதிர்கொண்டிருந்த அப்பகுதி மக்களை அவர் சந்தித்ததுடன் புதிய வாழ்வை ஆரம்பித்திருப்பதையிட்டு பாராட்டியும் உள்ளார்.

"இரும்பைப்போல்(உறுதியாக)நின்று பழைய நிலைமைக்கு நீங்கள் திரும்பி வந்துள்ளீர்கள் என்று முல்லைத்தீவு மக்களைப் பாராட்டியதுடன் அவர்கள் மீளக்குடியமரவும் மீளக்கட்டியெழுப்பவும் வாழ்வாதாரத்தை மீள ஏற்படுத்திக் கொள்வதற்கும் உதவுவதற்கு இந்தியா தாராளமனதுடன் தயாராக இருப்பதாக நம்பிக்கை தெரிவித்தார்.

வீடுகளை மட்டும் நாம் நிர்மாணிப்பதுடன் நின்றுவிட்டாமல் அவர்களுக்குப் புனர்வாழ்வழிப்போம். அவர்கள் மீள் எழுச்சி பெறுவதில் பங்குதாரராக இருப்போம். என்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கான தனது பயணத்தின்போது நிருபமாராவ் கூறியுள்ளார்.

இந்தப் பயணத்தின்போது மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களுடன் அவர் உரையாடினார். குடும்பத்தை நிர்வகிக்கும் தாய்மாரின் துணிச்சலான முயற்சிகளைப் பாராட்டி அவர் பின்னர் திருமலை விஜயத்தின் போது,விதவைகள், முதியவர்கள், விசேட தேவைக்குட்பட்டோரை பயனாளிகளிடத்திலிருந்தும் அடையாளம் கண்டு கொண்டு உதவ வேண்டிய தேவை இருப்பதாகக் கூறியுள்ளார்.

தமிழ் தலைவர்களுட்பட பலரை சந்தித்துவரும் நிருபமா இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ,வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸை சந்திப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.இதேவேளை வடக்கு,கிழக்கு பகுதிக்கான விஜயத்தின்போது இடம் பெயர்ந்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு இலங்கை அரசு சிறப்பான விதத்தில் தீர்வைக்காணும் என்று கருதுவதாக அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: