வெள்ளி, 3 செப்டம்பர், 2010

மீண்டும் மண்வாசம் மாறாத பாரதிராஜா என் இனிய தமிழ் மக்களே...!

" இயக்குனர் இமயமாக வலம்வந்த இந்தக் கிராமத்து கிளி, கொஞ்சகாலம் வெள்ளித்திரை இயக்கத்துக்கு ஓய்வு கொடுத்து... நடிகனாகவும், சின்னத்திரை இயக்குனராகவும் சுற்றிப் பறந்தது. இதோ மீண்டும் மண்வாசம் மாறாமல் ‘தென்கிழக்கு சீமையில்’ உங்களை எல்லாம் சந்திக்க வருகிறது... இப்படி ஒரு தொடக்கம் தேவைப் பட்டது, பாரதிராஜா அடுத்து இயக்கவுள்ள “தென்கிழக்குச் சீமையிலே” படத்துக்குதான்.பொம்மலாட்டம்’ படத்திற்குப் பிறகு வெள்ளித்திரைக்கு ஒரு சிறிய இடைவேளை விட்டு சின்னதிரையில் ‘தெற்கத்திப் பொண்ணு’ நெடுந்தொடரை இயக்க போய்விட்டார் பாரதிராஜா. அதனை அடுத்து ரெட்டைச்சுழியில் பாலச்சந்தருடன் இணைந்து நடித்தார்.அதற்குமுன் மணிரத்தினத்தின் ஆயுத எழுத்திலும் நடித்திருந்தார்.

இவரிடம் ஏற்பட்ட இந்த மாற்றங்களால், ஒருவேளை பாலச்சந்தர் மாதிரியே பாரதிராஜாவும் படங்கள் இயக்குவதையே விட்டுவிடுவாரோ என்ற சந்தேகங்கள் திரைவட்டாரத்தில் கேள்விக்குறியாக வளர்ந்து வந்தன. இந்நிலையில், தென்கிழக்கு சீமையிலே படத்தின் தகவல் அனைவரின் சந்தேகங்களையும் தீர்த்து வைத்துள்ளது.இதில் இன்னொரு சுவாரசியமான விஷயம், இந்தப் படத்தில் சீமான், அமீர், ஆகியோர் நடிக்கிறார்களாம். தென் தமிழகக் கிராமங்களின் மண்வாசனையை இப்போதைய காலகட்டத்திற்கு ஏற்றாற் போல் இப்படத்தில் வழங்கப் போகிறாராம். இதில் இவரும் நடிக்கிறார்.சீமானும்,அமீரும் இவரது மகன்களாம்.
கிழக்குச் சீமையிலே படத்தில் அண்ணன்,தங்கை பாசத்தை விளக்கிய பாரதிராஜா இந்தப் படத்தில் தந்தை, மகன்களின் இடையேயான அன்பையும், பாசத்தையும் சொல்லவிருக்கிறாராம்.இப்படத்திற்கு இசையமைக்க ஹாரிஸ் ஜெயராஜுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பாரதிராஜாவின் கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா போன்றப் படங்களில் ஏ.ஆர்.ரகுமான் கிராமத்துவாசம் மாறாமல் அருமையாக இசையமைத்திருந்தார். இதுவரை மேற்கத்திய இசையில் மெட்டுப் போட்டு வரும் ஹாரிஸ் இந்தப் படத்தின் மூலம் கிராமத்து கீதங்களிலும் கலக்குவார் என்ற நம்பிக்கை பாரதிராஜாவிற்கு இருக்கிறதாம்.இமயமே இறங்கி வரும்போது ஹாரிஸ் சிகரம் தொடுவதில் சிரமம்மா என்ன.

கருத்துகள் இல்லை: