வியாழன், 2 செப்டம்பர், 2010

மாவோயிஸ்டுகளை விரட்டியடித்த கிராம மக்கள்

மத்தியப் படைகள் தாக்குதலால் கடுமையான சேதத்தை சந்தித்ததாலும் உள்ளூர் மக் களின் கடுமையான எதிர்ப்பை சந்திப்பதாலும் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் இயக்கம், மேற்குவங்கத்தின் பஸ்சிம் மேதினிப்பூர், புருலியா மற்றும் பன்குரா மாவட்டங்களை சேர்ந்த ஜங்கல்மஹால் பகுதியில் தங்களின் செல்வாக்கை இழந்து வருவதாக தோன்றுகிறது. 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்தப்பகுதியில் மாவோயிஸ்டுகள் செலுத்தி வந்த மிரட்டல் ராஜ்யம் தற்போது வலுவாக எதிர்கொள்ளப்படுகிறது. இந்தமுறை தாங்கள் யாருக்காக போராடிக் கொண்டிருப்பதாக மாவோயிஸ்டுகள் கூறுகிறார்களோ அந்த உள்ளூர் மக்களிடமிருந்து அவர்கள் சவாலை சந்திக்கிறார்கள்.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக மாவோயிஸ்டுகளும் அவர்கள் தலைமை தாங்குகிற “போலீஸ் அடக்குமுறைக்கு எதிரான மக்கள் குழுவும் ஒவ்வொரு நாளும் கொலை, வழிப்பறி, பயமுறுத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டு வந்தனர். மக்கள் இவற்றையெல்லாம் அமைதியாக தாங்கிக்கொண்டார்கள். இல்லையேல் மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவாளர் என்று சொல்லியும் போலீஸ் உளவாளி என்று சொல்லியும் மாவோயிஸ்டுகள் இவர்களை சுட்டுக்கொன்று விடுவார்கள். அவர்களுடைய ஒவ்வொரு கொலையையும் நியாயப்படுத்துவதற்கு இதைத்தான் அவர்கள் சொல்லி வந்திருக்கிறார்கள்.
மறக்க முடியாத ஜூலை 22
ஆனால், ஜூலை 22-ம் தேதியை அவர்கள் மறக்கமுடியாத அளவிற்கு மக்கள் செய்து விட்டார்கள். பஸ்சிம் மேதினிப்பூர் மாவட்டத்திலுள்ள ஜார்க்ரம் என்கிற நகரத்தின் அருகிலுள்ள ராதாநகர் கிராமத்தில் உள்ள மக்கள் அன்றையதினம்தான் தைரியமாக அவர்களை எதிர்த்து நின்றதோடு அவர்களுடைய கட்டளைகளையும் ஏற்க மறுத்துவிட்டனர். சுமார் 20 பேர் கொண்ட ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்டுகளும் அவர்கள் தலைமை தாங்கும் “போலீஸ் அடக்குமுறைக்கு எதிரான மக்கள்குழுவும்” அந்த கிராமத்தில் பள்ளிக்கூடத்தின் விளையாட்டு மைதானத்தில் கூடினார்கள். தாங்கள் நடத்துகிற பேரணியில் கிராம மக்கள் கலந்துகொள்ள வேண்டுமென்று வற்புறுத்தினர். அவர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அது அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மக்கள் பேரணியில் பங்கு கொள்ள மறுத்தபோது அவர்கள் தங்கள் கையிலிருந்த துப்பாக்கிகள் மற்றும் குண்டுகளை காட்டி பயமுறுத்த ஆரம்பித்தனர். ஆனால், மக்கள் பேரணியில் பங்கேற்க உறுதியாக மறுத்ததோடு அவர்களை விரட்டியும் அடித்து விட்டார்கள்.
ஜார்க்ரம் மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் பிரவின் திருபாதி ஃப்ரண்ட்லைன் நிருபரோடு பேசுகிறபோது “இப்போது மக்கள் மாவோயிஸ்டுகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்க கட்டாயப்படுத்தப்படுவதால் வெறுத்துப்போய் இருக்கிறார்கள். சமீபகாலத்தில் காவல்துறையும், மத்தியபடையும் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் மக்களின் தன்னம்பிக்கையை அதிகப்படுத்தியிருக்கிறது. அவர்கள் மாவோயிஸ்டுகளை எதிர்த்து போராட துணிந்திருக்கிறார்கள். மேலும் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு கேட்டிருக்கிறார்கள்” என்று கூறுகிறார்.
எதிர்ப்புப் பேரணி
ராதாநகர் சம்பவம் அந்தப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்களை உத்வேகப்படுத்தியிருப்பதாக தெரிகிறது. இந்தச் சம்பவத்திற்கு அடுத்த நாள் ஜூலை 23-ம் தேதி ராதாநகரில் ஒரு பெரும் பேரணி நடைபெற்றது. மாவோயிஸ்டுகளின் இந்த பயமுறுத்தல் நடவடிக்கைக்கு எதிராகவும் அதைக்கண்டித்தும் நடத்தப்பட்ட பேரணி இது. இந்தப்பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இவர்கள் ராதாநகரைச்சார்ந்தவர்கள் மட்டுமல்ல. அதன் அருகிலுள்ள கைஹட்டா மற்றும் பச்சூர்தோபா ஆகிய கிராமங்களைச் சார்ந்தவர்களும் அந்தப்பேரணியில் கலந்துகொண்டார்கள். ஜார்க்ரம் நகரம் மற்றும் அதன் காவல்நிலைய எல்லைக்கு மிக தூரத்திலுள்ள மக்களும் கூட மாவோயிஸ்டுகளுக்கு எதிராக தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

ராதாநகரிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்கு பிறகு “போலீஸ் அடக்கு முறைக்கு எதிரான மக்கள் குழு” ஜார்க்ரமிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ள நிஸ்சிந்தா கிராமத்திலும் இதேபோன்ற எதிர்ப்பை அவர்கள் சந்திக்க வேண்டியிருந்தது. ஜூலை 24-ந்தேதி இரவு இவர்கள் அந்த கிராமத்திற்கு வந்து பேரணியில் பங்கெடுக்க வேண்டுமென்று மக்களை வழக்கம் போல் கட்டாயப்படுத்தி பயமுறுத்தியிருக்கிறார்கள். மக்கள் இதற்கு செவிமடுக்க மறுத்ததோடு அவர்களில் ஒருவரை பிடித்து வைத்துக் கொண்டனர். அடுத்த நாள் அந்த நபரை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். ஜங்கல் மஹால் பகுதியில் உள்ள மக்கள், கிராமத்தை காப்பாற்றும் கமிட்டிகள் அமைத்து ஒன்றுபட்டு மாவோயிஸ்டுகளை எதிர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். ராதாநகரில் ஜூலை 22-ம் தேதி நடந்த நிகழ்ச்சிக்குப்பிறகு அடுத்த 10 நாட்களில் அந்தப்பகுதியிலுள்ள 52 கிராமங்களில் இத்தகைய கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சாண்டிகரண் என்பவர் ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியர். அவர் லால்கர் ஒன்றியத்திலுள்ள லட்சிப்பூர் கிராமத்திலுள்ள பள்ளியில் வேலை செய்கிறார். மாவோயிஸ்டுகளுக்கு எதிராக உள்ளூர் மக்களை திரட்டியதில் இவருக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. அவர் ஃப்ரண்ட்லைன் நிருபரிடம் கீழ்க்கண்டவாறு கூறுகிறார். “இந்த பகுதியிலுள்ள மக்கள் ஒன்றிணைந்து இருக்கிறார்கள். அரசியல் வேறுபாடுகள் இந்த ஒற்றுமைக்கு தடையாக இல்லை. அவர்கள் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கத்தை இனிமேலும் ஏற்பதில்லை என்று கூட்டாக முடிவு செய்திருக்கிறார்கள். அதேபோன்று மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தலுக்கு பயப்படப்போவதில்லை என்றும் அறிவித்திருக்கிறார்கள். ஏதாவது ஒரு கிராமம் மாவோயிஸ்டுகளால் தாக்கப்பட்டால் பக்கத்திலுள்ள கிராமங்கள் அந்த மக்களின் உதவிக்கு வந்துவிடுகிறது. சமீபத்தில் போலீஸ் அடக்குமுறைக்கு எதிரான மக்கள்குழு உறுப்பினர்கள் எங்கள் ஊருக்குள் நுழைந்து போஸ்டர்களை ஒட்டுவதற்கும் துண்டுப்பிரசுரங்களை தூவி விட்டு செல்வதற்கும் முயற்சித்தார்கள். ஆனால் மக்கள் அவர்களை விரட்டியடித்து விட்டார்கள்”

மாவோயிஸ்டுகள் மற்றும் “போலீஸ் அடக்குமுறைக்கு எதிரான மக்கள்குழு” தாங்கள் இழந்துவிட்ட செல்வாக்கை மீட்டெடுப்பதற்காக சில பகுதிகளில் வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் மற்றும் கொலை மிரட்டல் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கிராம மக்களை போஸ்டர்கள் மூலமாகவும் துண்டுப்பிரசுரங்கள் மூலமாகவும் தங்களுடன் சேரவில்லையென்றால் கொலை செய்து விடுவோமென்று மிரட்டியுள்ளனர். ஆனால், மக்கள் உறுதியாக நின்று முறியடித்துவிட்டனர். பல கிராமங்களில் உள்ளூர் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஒன்று அந்த கிராமத்தைவிட்டு வெளியேற வேண்டும் அல்லது காவல் துறையினரிடம் சரணடைந்துவிட வேண்டுமென்று எச்சரித்துள்ளனர். ஆகஸ்ட் 1ந்தேதியன்று நாராயண்பூர் கிராமத்தைச்சார்ந்த மக்கள் அந்த கிராமத்தில் ஒட்டப்பட்டிருந்த மாவோயிஸ்டுகளின் போஸ்டர்களை கிழித்து மொத்தமாக தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.
மாவோயிஸ்டு தலைவர் கொல்லப்பட்டார்
மாவோயிஸ்டுகள் போலீசுடனான சண்டையில் கடுமையான சேதத்தை சந்தித்து வருகிறார்கள். ஜூலை 26-ந்தேதியன்று இந்த பகுதியைச்சார்ந்த மாவோயிஸ்டுகளின் தலைவர்களில் முக்கியமானவரான சிதுசோரன் மற்றும் 5 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினரால் மேட்டானா காடுகளில் கொல்லப்பட்டனர். இது லால்கரிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. “சிதுசோர னுடைய மரணத்திற்குப்பிறகு உள்ளூர் மக்களிடமிருந்து ஏராளமான விவரங்களை எங்களால் பெறமுடிகிறது. முன்னர் அவர்கள் எங்களோடு பேசுவதற்கு கூட பயப்படுவார்கள். தற்போது அவர்கள் தானாகவே முன்வந்து எங்களுடன் பேசுகிறார்கள்”
தளங்களை இழக்கிறார்கள்
பஸ்சிம் மேதினிப்பூர் மாவட்டத்தில் லால்கர் பகுதியின் காடுகளில் தங்கள் வலுவான தளங்களை இழந்திருப்பதோடு, ஒப்பீட்டளவில் புதிய பகுதிகளிலும் கூட மாவோயிஸ்டுகள் இழப்பை சந்தித்து வருவதாக தெரிகிறது. “முன்னர் மாவோயிஸ்டுகள் வலுவான தளத்திலிருந்து அதைச்சுற்றியுள்ள பகுதிகளுக்கு தங்களுடைய தளத்தை விரிவுபடுத்துவார்கள். தற்போது இவையனைத்தும் எதிர் திசையில் நடைபெறுகிறது. அவர்கள் அப்படி விரிவுபடுத்தப்பட்ட பகுதியிலிருந்து தங்கள் தளங்களை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்கள்” என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனோஜ் வர்மா தெரிவிக் கிறார். மாவோயிஸ்டுகளின் ஒரு பகுதி ஒரிசா எல்லையிலுள்ள நயாக்ராம் மற்றும் கோபிபல் லபூர் பகுதிகளுக்குள் ஓடி ஒளிந்து கொண்டனர்.
“இவையெல்லாம் அவர்கள் செயல்பாட்டிற்கு ஒப்பீட்டளவில் புதிய பகுதிகள். இந்தப் பகுதிகளில் அவர்கள் செயல்பாடுகள் குறித்து மக்கள் எங்களுக்கு தகவல் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப்பகுதியிலும் மக்கள் மாவோயிஸ்டுகளின் மீதான பயத்தை போக்கிவிட்டு மாவோயிஸ்டுகளுக்கு எதிராக போராட வந்திருக்கிறார்கள்” என்று காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இப்போதெல்லாம் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போராட்டத்தில் பாதுகாப்பு படையினரும், காவல்துறையும் தங்களுக்கு கூடுதலாக உதவிசெய்ய வேண்டுமென்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

பாதுகாப்பு படையினர் மாவோயிஸ்டுகளின் ஊழியர்களை நெருங்கி வருவதும் மக்களிடம் மாவோயிஸ்டு எதிர்ப்பு தீவிரப்பட்டு வருவதும் இந்தப்பகுதியில் தற்போதைக்கு மாவோயிஸ்டு இயக்கம் மறைந்து வருவதையே குறிக்கிறது. மாவோயிஸ்டுகளில் பலர் குறிப்பாக புதிதாக சேர்ந்தவர்கள் அந்த இயக்கத்தை விட்டு விலகவே விரும்புகிறார்கள்.

நன்றி : ஃப்ரண்ட்லைன் ஆகஸ்ட் 14 - 27

தமிழில்: க. கனகராஜ்

கருத்துகள் இல்லை: