வியாழன், 2 செப்டம்பர், 2010

உத்தேச திருத்த சட்டமூலத்தை எதிர்த்து ஐ.தே.க. வாக்களிக்கும்

உத்தேச திருத்த சட்டமூலத்தை எதிர்த்து ஐ.தே.க. வாக்களிக்கும்
செயற்குழுவின் முடிவை அறிவித்தார் ரணில்
 உத்தேச அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பு இடம்பெறும் போது அதற்கு எதிராக வாக்களிப்பதென பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க.தீர்மானித்துள்ளது.ஐ.தே.க.வின் செயற்குழு இத்தீர்மானத்தை எடுத்திருப்பதாக கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று அறிவித்தார்.
கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் செயற்குழு கூடி ஆராய்ந்தபின் நேற்று பிற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே ரணில் இதனை அறிவித்தார்.அரசின் உத்தேச அரசியலமைப்புத் திருத்த யோசனைகளைஅமைச்சரவை அங்கீகரித்து உயர்நீதிமன்றின் பரீசிலனைக்கு இப்போது சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் நிலைமையில் ஐ.தே.க.தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.செய்தியாளர் மாநாட்டில் ரணில் விக்கிரமசிங்க கூறியதாவது மக்களின் ஆணையைப் பெறாத காரணத்தினால் உத்தேச அரசியலமைப்புத் திருத்த யோசனைகளை நிறைவேற்றுவதற்கு அரசுக்கு எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது. ஆகவே திருத்த சட்டமூலத்துக்கு முழுமையான எதிர்ப்பை தெரிவிப்பதுடன் எதிர்த்து வாக்களிப்பதற்கும் கட்சியின் செயற்குழுவில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியுடனான பேச்சின் போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் பதிலளிக்கும் நிறைவேற்று அதிகார பிரதமர் முறைமை குறித்தே பேச்சு நடத்தினோம்.இந்நிலையில் அரசாங்கம் எதனையும் கருத்திலெடுக்காது உதாசீனம் செய்து தன்னிச்சையாகச் செயற்படுகின்றது. கடந்த தேர்தலில் மக்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீடிப்பதற்கு அல்லாமல் மாறாக ஒழிப்பதற்கே ஆணை வழங்கினர். எனவே இதனை மாற்றுவதற்கு அரசுக்கு தார்மீக உரிமை கிடையாது. எனவே மக்கள் ஆணையில்லாமல் இதனைச் செய்யமுடியாது.
எனவே உத்தேச அரசியலமைப்புத் திருத்தம் குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்தி சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். 17 ஆவது அரசியல் திருத்தத்திலும் மாற்றம் மேற்கொள்ளப்படுகின்றது. பாராளுமன்றத்திடம் உள்ள அதிகாரத்தை அரசு தனது கையிலெடுப்பதற்கே இதனை மேற்கொள்கின்றது. இதனால் பாராளுமன்றத்தின் அதிகாரம் பாதிக்கப்படும். மக்களின் ஆணையைக் கொண்டு அந்த ஆணையை வேறுவிதமாக அரசு பாவிக்கின்றது. இதனை ஏற்கப்போவதில்லை. ஐக்கிய தேசியக் கட்சி இதனை எதிர்க்கும். எனினும் ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள ஏனைய கட்சிகள் எவ்வாறு வாக்களிக்கப் போகின்றது என எமக்குத் தெரியாது.

நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளாததை அரசாங்கம் செய்யமுடியாது. இது தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்தி சர்வஜன வாக்கெடுப்பின் மூலமே மாற்றத்தை செய்ய வேண்டும். மக்கள் தந்த ஆணையைப் பயன்படுத்தி அதிகாரத்தை உதாசீனப்படுத்தக் கூடாது.17 ஆவது திருத்தத்தில் அரசியலமைப்பு சபைக்குப் பதிலாக பாராளுமன்றக் குழுவை அமைக்க திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது. இது ஜனாதிபதியின் அதிகாரத்தைப் பலப்படுத்தவே வழிகோலும். அதாவது ஜனாதிபதி ஒரு கட்சியைச் சேர்ந்தவராகவும் அரசாங்கம் வேறு ஒரு கட்சியைச் சேர்ந்தவராகவும் இருக்கும் நிலையில் பாராளுமன்றக் குழுவை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே இருக்கும். இது ஜனநாயகத்தை எவ்விதத்திலும் பலப்படுத்தாது

கருத்துகள் இல்லை: