வெள்ளி, 3 செப்டம்பர், 2010

கருணா, பிள்ளையான், கே.பி போன்றோருக்கு ஓரு நீதி எங்களுக்கு ஒரு நீதியா? : நீதிபதியிடம் ஒரு தமிழ் கைதி

விடுதலைப் புலிகளுடன் முக்கிய பங்காளிகளாக இருந்த கருணா பிள்ளையான் கே.பி போன்றவர்களுக்கு அரசாங்கம் சுகபோக வாழ்க்கை அமைத்துக் கொடுத்துள்ளது ஆனால் எதுவித குற்றமும் செய்யாத அப்பாவி தமிழ் மக்களாகிய எங்களை பயங்கரவாத சந்தேகத்தின் பேரில் பல வருடங்களாக இந்த அரசாங்கம் தடுப்பு காவலில் வைத்திருக்கின்றது இது நியாயமான நடவடிக்கையா? என நீதிபதியைப் பார்த்து கேள்வி எழுப்பினார் ஒரு தமிழ் அரசியல் கைதி. நேற்றைய தினம் (01.09.2010) கொழும்பு வெலிக்கடையில் உள்ள விசேட நீதிமன்றத்திலேயே நீதிபதியிடம் மேற்கண்டவாறு ஒரு கைதி கேள்வி எழுப்பினார்.
மேலும் இதுவிடயமாக தெரிய வருவதாவது,
வெலிக்கடையில் உள்ள விசேட நீதி மன்றத்திற்கு குறித்த கைதியை (50 வயதிற்கு மேற்பட்ட பெயர் குறிப்பிட விரும்பாத வெலிக்கடை சிறையில் உள்ள ஒரு கைதி) தடுப்பு காவல் நீடிப்புக்காக அதிகாரிகள் அழைத்துச் சென்றிருந்தனர். அதன்போது நீதிமன்றத்தில் பிரசன்னமாயிருந்த அந்த கைதி திடீரென்று நீதிபதியைப் பார்த்து மேற்கண்டவாறு கேட்டுக்கொண்ட போது சற்று நேரம் நீதி மன்றம் அமைதி இழந்து காணப்பட்டதாகவும் ஆனால் அதனை செவிமடுத்த நீதிபதி அவர்கள் என்ன காரணத்திற்காக இந்த நபரை தொடர்ந்து தடுப்பு காவலில் வைத்துள்ளீர்கள் என குற்றப் புலனாய்வு பிரிவினரைப் பார்த்து கேட்டபோது சட்டமா அதிபரின் அறிக்கைக்காகவேதான் இவர் காத்திருப்பதாக அவர்கள் பதில் சொன்னார்களாம்.

கருத்துகள் இல்லை: