சனி, 4 செப்டம்பர், 2010

மனோ கணேசன்: தமிழ் பேசும் மக்களுக்கு பாதிப்பில்லை என்று கூறி 18ம் திருத்தத்திற்கு ஆதரவளிப்பது அரசியல் மோசடியாகும்!


-மனோ கணேசன்
ஜனாதிபதி பதவியில் ஒருவரே தொடர்ந்து இருப்பதற்கு வழி ஏற்படுத்திவிட்டு, அவரது கைகளில் அனைத்து அதிகாரங்களையும் வழங்கிவிட்டு, தேர்தல் ஆணையாளரை வெறும் பொம்மையாக ஆக்கிவிட்டு, ஏகாதிபத்திய ஆட்சிக்கு வழிசமைப்பதே உத்தேச 18ம் திருத்தமாகும். இந்த அரசியலமைப்பு திருத்தத்திற்குத்தான் இந்நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு பாதிப்பில்லை என்ற வாதத்தை முன்வைத்து சில தமிழ், முஸ்லிம் கட்சிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவளிக்க முனைகிறார்கள்.

இத்தகைய முனைப்பு ஒரு அரசியல் மோசடியாகும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு தொடர்பிலே கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
உத்தேச 18ம் திருத்த சட்டமூலம் பல திருத்தங்களை அரசியலமைப்பிற்கு கொண்டுவருகின்றது. ஒன்றாவது, ஜனாதிபதி பதவியை வகிக்கும் ஒருவர் இரண்டு முறைக்கு மேல் அப்பதவியை வகிக்கக்கூடாது என்ற விதி அகற்றப்படுகின்றது. இரண்டாவது, 17வது திருத்தத்தின் மூலமாக உருவாக்கப்பட்ட 10 பேர் கொண்ட அரசியலமைப்பு பேரவை 5பேர் கொண்ட வெறும் ஆலோசனைக்குழுவாக மாற்றி அமைக்கப்படுகின்றது. மூன்றாவது, அரச சேவை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பிலான சுயாதீன ஆணைக்குழுக்களின் அங்கத்தவர்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மாத்திரம் வழங்கப்படுகின்றது.
நான்காவது, அரசாங்க திணைக்கள தலைவர்களை நியமிக்கும், இடமாற்றும், நீக்கும் அதிகாரங்கள் அமைச்சரவைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படுகின்றன. ஐந்தாவது, பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரங்கள் பொலிஸ் மா அதிபருக்கு மாற்றப்படுகின்றன. ஆறாவது, தேர்தல் காலங்களில் அரச ஊடகங்கங்களை கண்காணிப்பது, அரசாங்க வளங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுத்துவதை தடுப்பது, பொலிஸார் பாராபட்சத்துடன் நடந்துகொள்வதை நிறுத்துவது, அரச ஊழியர்கள் இடமாற்றம் செய்வதை தடைசெய்வது ஆகியவை தொடர்பிலான தேர்தல் ஆணையாளரின் அதிகாரங்கள் இரத்து செய்யப்படுகின்றன. ஏழாவது, தேர்தல் ஆணைக்குழு அமைக்கப்படும் வரை பதில் ஆணையாளரை நியமிக்கும் அதிகாரம்; ஜனாதிபதிக்கு வழங்கப்படுகின்றது.
இந்நாட்டிலே தமிழரோ, முஸ்லிம்மோ ஜனாதிபதியாக முடியாது எனக்கூறி அதனால் இத்திருத்தங்கள் மூலமாக வரும் பாதிப்புகளை நாம் கணக்கில் எடுக்கத்தேவையில்லை என்று கூறி சில தமிழ் பேசும் கட்சிகள் அரசியல் நடத்துகின்றன. தமிழ், முஸ்லிம் என்ற கோணத்தில் இருந்து பார்ப்பதைவிட, இலங்கையர் என்ற கோணத்தில் இருந்து இந்த உத்தேச திருத்தத்தை நாங்கள் பார்க்கவேண்டும். இன்று நாட்டிலே ஜனநாயக அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும், சமூக அமைப்புகளும் இந்த அரசாங்கத்தின் ஏகாதிபத்திய ஆட்சியை முன்னிறுத்தும் இந்நடவடிக்கையை எதிர்ப்பதற்கு தயாராகி வருகின்றன. இச்சத்திகளுடன் தமிழ் பேசும் மக்களும் கைக்கோர்த்துக்கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை: