தினமலர் : வாஷிங்டன்: ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்குமாறு ஈரானுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக, கார்க் தீவை ஆக்கிரமிப்பது அல்லது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிபர் டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.
அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக உலகின் முக்கிய எண்ணெய் வர்த்தக கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளது. இதனால், உலக அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு, பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்த ஹார்முஸ் ஜலசந்தியை கைப்பற்ற வேண்டும் என்று கூறிய அதிபர் டிரம்ப், இதற்காக ஆசியா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் எந்த நாடும் ஆதரவு தெரிவிக்க மறுத்துவிட்டன.
இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்குமாறு ஈரானுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக, கார்க் தீவை ஆக்கிரமிப்பது அல்லது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு இந்தத் தீவு மிகவும் முக்கியமானது.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்தின் மீதான ஈரானின் கட்டுப்பாடுகளை தகர்த்து எறிய அமெரிக்கா முயன்று வருவதால், இந்த நடவடிக்கை பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
கடற்கரையிலிருந்து 15 மைல் தொலைவில் அமைந்துள்ள கார்க் தீவு, ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இது உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஒரு முக்கிய மையமாக விளங்குகிறது.
இருப்பினும், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியைச் சுற்றியுள்ள ஈரானின் ராணுவ இருப்பை பலவீனப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா தாக்குதல்களைத் தொடர்ந்துள்ளன. தீவைக் கைப்பற்றுவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் நிகழக்கூடும் என்று அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர். இந்தத் திட்டத்திற்கு கூடுதல் படையினரை அனுப்ப வேண்டியிருக்கலாம். பல கடற்படைப் பிரிவுகள் ஏற்கனவே பணியில் இறங்கி உள்ளன.
தாக்குதல்கள் மூலம் ஈரானியர்களை மேலும் பலவீனப்படுத்தவும், அந்தத் தீவைக் கைப்பற்றவும், பின்னர் அவர்களை வலுக்கட்டாயமாக பேச்சுவார்த்தை மூலம் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஒப்புக்கொள்ள வைப்பதற்கும் ஒரு மாத காலம் ஆகும் என வெள்ளை மாளிகையின் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக