திங்கள், 16 மார்ச், 2026

விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு!

tamil.oneindia.com - Vishnupriya R  :  சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் தேதி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டுவிட்டதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த உத்தேசப் பட்டியல் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) இந்த கூட்டணியில் இணைந்தால் அதிமுக போட்டியிடும் இடங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் என்பதே தற்போது ஹாட் டாபிக்.
அதிமுக கூட்டணியில் தவெக இணைந்தால் கூட்டணி கட்சிகளுக்கு 100 தொகுதிகளை அதிமுக ஒதுக்க நேரிடும். அப்படிபார்த்தால் அதிமுக 134 தொகுதிகளில் மட்டும் போட்டியிடும் சூழல் ஏற்படலாம்.
கூட்டணிக் கட்சிகளுக்கான உத்தேசப் பட்டியல் இதோ:


    அதிமுக: 134
    தவெக : 50
    பாஜக: 25
    பாமக: 15
    அமமுக: 2
    தமாகா: 2
    இந்திய ஜனநாயக கட்சி: 2
    புதிய நீதிக்கட்சி: 1
    தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்: 1
    பெருந்தலைவர் மக்கள் கட்சி: 1
    புரட்சி பாரதம்: 1

எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதம் ஏன்?

கடந்த காலங்களில் 170 முதல் 200 தொகுதிகள் வரை போட்டியிட்ட அதிமுக, தற்போது தவெக போன்ற புதிய கட்சிகளின் வருகையால் தனது பலத்தைக் குறைத்துக் கொள்ள விரும்பவில்லை. தவெகவிற்கு 50 இடங்கள் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டால், அது அதிமுகவின் வெற்றி வாய்ப்பையும், தனித்து ஆட்சி அமைக்கும் அதிகாரத்தையும் நேரடியாகப் பாதிக்கும் என எடப்பாடி பழனிசாமி கருதுகிறார்.

குறைவான இடங்களில் போட்டியிட்டு, அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போனால், தவெக அல்லது பாஜகவின் தயவில் 'கூட்டணி ஆட்சி' நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதிமுகவை மைனாரிட்டி அரசு என திமுக அழைக்கக் கூடும். பீகாரில் ஏற்பட்டது போல் தமிழகத்திலும் தமது முதல்வர் பதவி பறிபோகலாம் என்பது எடப்பாடி பழனிசாமியின் கணக்காக இருக்கிறது.
அதிமுகவில் குழப்பம்

பாரம்பரியமாக அதிமுக வெல்லும் தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுப்பது அடிமட்டத் தொண்டர்களிடையே அதிருப்தியை உண்டாக்கும். மேலும் பல மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் அதிருப்தி அடையலாம். இது கட்சிக்குள் குழப்பத்தை உண்டாக்கும்.

தவெக தலைவர் விஜய் தனித்துப் போட்டி என அறிவித்தாலும், திரைமறைவில் நடக்கும் இந்த 'சீட்' பேரம் மற்றும் 134 என்ற மேஜிக் எண் தான் எடப்பாடி பழனிசாமியை தவெக-விற்கு எதிராகக் காட்டமான கருத்துக்களைத் தெரிவிக்க வைக்கிறது என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
வெற்றி விகிதம்

பாஜகவின் அழுத்தத்தின் பேரில் அதிமுக 134 இடங்களில் போட்டியிட்டு 118-ல் வெற்றி பெற வேண்டும் என்றால், அதன் வெற்றி விகிதம் சுமார் 88% ஆக இருக்க வேண்டும்.

2021 தேர்தலில் திமுக 188 இடங்களில் போட்டியிட்டு 133 இடங்களை வென்றது (வெற்றி விகிதம்: 70%).

அதிமுக 134-ல் போட்டியிடும் போது, மிகக் கடுமையான 'ஸ்ட்ரைக் ரேட்' இருந்தால் மட்டுமே தனித்து ஆட்சி அமைக்க முடியும். இது ஒரு சவாலான காரியம்.

தவெக, பாஜக, பாமக போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைக்கும்போது, அதிமுக தனது வலுவான கோட்டைகளாகக் கருதப்படும் பல தொகுதிகளை மற்ற கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும்.

அதிமுகவின் ஒட்டுமொத்த வாக்கு சதவீதம் குறைந்தால், அது 118 என்ற மேஜிக் எண்ணை எட்டுவதை பாதிக்கும். அதிமுக 134 இடங்களுக்குக் கீழே இறங்கி வந்தால், ஒருவேளை கூட்டணி வெற்றி பெற்றாலும், அதிமுகவிற்கு 90 முதல் 100 இடங்கள் வரை மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது.

ஆட்சி அமைக்க தவெக அல்லது பாஜகவின் ஆதரவு கட்டாயம் தேவைப்படும். இது தமிழகத்தில் முதல்முறையாக "கூட்டணி ஆட்சி" அமையவும், மற்ற கட்சிகள் ஆட்சியில் பங்கு கேட்கவும் வழிவகுக்கும்.
கூட்டணி ஆட்சி

அதிமுக 134 இடங்களில் போட்டியிட்டால் தனித்து ஆட்சி அமைப்பது கிட்டத்தட்ட சாத்தியமில்லை. அது ஒரு "தொங்கு சட்டசபை" அல்லது "கூட்டணி ஆட்சி"க்கே அதிக வாய்ப்புகளை உருவாக்கும். இதனால்தான், அதிமுக தனது பிடியை நழுவ விடாமல் இருக்க தவெகவின் வருகையை ஒரு சவாலாகப் பார்க்கிறது என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள். எனவேதான் விஜய் கட்சியை எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை என சொல்லப்படுகிறது. அதிமுக குறைந்தது 170 தொகுதிகளில் போட்டியிட போராடும் என்றே தெரிகிறது.
 

கருத்துகள் இல்லை: