திங்கள், 16 மார்ச், 2026

இந்தி சினிமா - பவன் கல்யாணுக்குத் தெரியாத சம்பவம்!

 R Muthukumar  "' இந்தி சினிமா: மனமொடிந்த சிரஞ்சீவி
பவன் கல்யாணுக்குத் தெரியாத சம்பவம்!
லாப நோக்கத்துக்கு தமிழ்ப்படங்களை இந்தியில் டப்பிங் செய்வதை அனுமதிக்கும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இந்தியை எதிர்ப்பது ஏன்.. இது என்ன லாஜிக்... என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் பவன் கல்யாண். 
இந்தக் கேள்விக்கு நாம் பதில் சொல்வதைவிட பவன் கல்யாணின் மூத்த சகோதரர் சிரஞ்சீவிக்கு நிகழ்ந்த ஒரு சம்பவத்தைச் சொன்னால் சரியாக இருக்கும். இனி சிரஞ்சீவியே பேசுவார்.
1988ல் ருத்ரவீணா படத்துக்கு தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் விருது கிடைத்திருந்தது. அந்த விருதை வாங்குவதற்காக டெல்லி சென்றேன். மாலையில் விருது வழங்கும் விழா. அதற்கு முன்னதாக ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த விருந்து அரங்கின் சுவர்களை திரைப்பட சுவரொட்டிகளால் வண்ணமயமாக அலங்கரித்திருந்தார்கள்.


இந்திய சினிமா திருவிழா என்ற தலைப்பில் அந்தச் சுவரொட்டிகள் அடையாளப்படுத்தப்பட்டிருந்தன. அதில் பிரித்விராஜ் கபூர், ராஜ்கபூர், திலீப் குமார், தேவ் ஆனந்த், அமிதாப் பச்சன், ராஜேஷ் கன்னா, தர்மேந்திரா உள்ளிட்டோரின் படங்கள் வைக்கப்பட்டிருந்தன. அவர்களைப் பற்றி நேர்த்தியாக குறிப்புகளை எழுதியிருந்தார்கள். அவர்களைப் பற்றிப் பலரும் புகழ்ந்து பேசினார்கள். அதனால் தென்னிந்திய சினிமா பற்றியும் தென்னிந்திய கலைஞர்கள் பற்றியும் புகழ்ந்து பேசுவார்கள் என்று எதிர்பார்த்தேன்.
ஆனால் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சியை மட்டும் புகைப்படமாகப் பெயரளவுக்கு வைத்திருந்தார்கள். பிரேம் நசீருக்கு ஒரு புகைப்படம் வைத்திருந்தார்கள். அவ்வளவுதான். கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் பற்றி ஒரு வார்த்தைகூட யாரும் பேசவில்லை. விஷ்ணுவர்த்தன் பற்றிப் பேசவில்லை. ஆந்திர நட்சத்திரங்களான ராமராவ், நாகேஸ்வரராவின் ஒற்றைப் புகைப்படம் கூட இடம்பெறவில்லை. நடிகர் திலகம் சிவாஜியின் படத்தைக் காணவில்லை.
அதையெல்லாம் கண்டு நான் மனமொடிந்து போனேன். அவமானத்தில் தவித்தேன். இந்திய சினிமா என்றால் இந்தி சினிமா மட்டுமே என்ற தோற்றத்தை உருவாக்கியிருந்தார்கள். மற்ற மொழிப் படங்களை எல்லாம் பிராந்திய மொழிப் படங்கள் என்று சொல்லி 
ஒதுக்கியிருந்தார்கள். மற்ற மொழிப் படங்களின் பங்களிப்பு பற்றிப் பேசாமல் இருப்பதைப் பற்றி அவர்கள் கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை. அதை நினைத்து மிகவும் வருந்தினேன். 
விழாவை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய கையோடு பத்திரிகையாளர்களைச் சந்தித்து டெல்லியில் நடந்ததை எல்லாம் விவரித்தேன். அதை ஒரு கட்டுரையாக இந்து நாளிதழில் வெளியிட்டிருந்தார்கள். ஆனால் அதற்கு எந்த எதிர்வினையும் 
டெல்லியிலிருந்து வரவில்லை. 
அந்தச் சம்பவம் நிகழ்ந்து ஆண்டுகள் பல கடந்துவிட்டன. இன்று நான் மிகவும் பெருமிதம் கொள்கிறேன். கம்பீரமாக நெஞ்சை நிமிர்த்திக்கொள்கிறேன். நமது சினிமா பிராந்திய சினிமாவாக இனி ஒருபோதும் இருக்கப் போவதில்லை. ஒதுக்குதலை எல்லாம் முறியடித்து, தடைகளை எல்லாம் தகர்த்தெறிந்து தெலுங்கு சினிமா இன்று இந்திய சினிமாவாகப் பரிணமித்துவிட்டது. பாகுபலி, பாகுபலி 2, ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்கள் தெலுங்கு சினிமாவை இந்திய சினிமாவின் தவிர்க்கமுடியாத அங்கமாக உருவெடுக்கச் செய்துவிட்டன.
0
இந்தச் சம்பவத்துக்குப் பின்னால் இருக்கும் வலியோ, வேதனையோ, உட்பொருளோ இன்றைக்கு பவன் கல்யாண் இருக்கும் மனநிலையில் அவருக்குப் புரியும் என்று தோன்றவில்லை. ஆனால் 
ஒருநாள் புரியும்! அந்த நாள் வரும், விரைவில்!
R Muthukumar

கருத்துகள் இல்லை: