வெள்ளி, 6 மே, 2022

கொரோனா மரணங்கள் இந்தியாவில் மறைக்கப்பட்டது? 47 லட்சம் பேர் கூடுதலாக உயிரிழப்பு என WHO அறிக்கை

  Noorul Ahamed Jahaber Ali  -  Oneindia Tamil  :  டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் 47 லட்சம் பேர் கூடுதலாக உயிரிழந்து இருக்கலாம் என்ற அதிர்ச்சிகர தகவலை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.
மாதம் ரூ. 4999 செலுத்தி சென்னையில் வீடு வாங்கி செம சான்ஸ்
உலகளவில் கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்து அதுகுறித்த முன்னெச்சரிக்கைகளையும், நோய் பரவல் குறித்த விபரங்களையும் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
47 லட்சம் பேர் கூடுதலாக பலி


இந்த நிலையில், இன்று உலக சுகாதார நிறுவனம் கொரோனா பரவல் தொடர்பான புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதன்படி, 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் 2021 டிசம்பர் 31 ஆம் தேதி வரை இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழந்ததாக அரசு அறிவித்த எண்ணிக்கையை விட 47 லட்சம் பேர் கூடுதலாக உயிரிழந்து இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

முதல் அலை  ..  இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து 2020 ஆகஸ்ட் மாதம் வரை 62,000 க்கும் குறைவான உயிரிழப்புகளே ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 2020 செப்டம்பர் மாதம் முதல் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதாகவும், இது பல மாநிலங்களின் முதல் அலையோடு ஒத்துப்போவதாகவும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

2 வது அலையில் பலர் பலி  ..  கூடுதல் பலி எண்ணிக்கையில் சரிபாதி, அதாவது 27 லட்சம் பேர் கடந்த ஆண்டு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் ஏற்பட்ட கொரோனா 2 வது அலையின்போது உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரோஸ் தெரிவிக்கையில், "WHO அனைத்து நாடுகளோடும் இணைந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும், கொரோனா கணக்கிடப்ப பாதிப்பு குறித்த துல்லிய தகவல்களையும் திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது." என்றார்.


கூடுதல் பலி எண்ணிக்கை கணக்கிடப்பட்ட விதம் குறித்து உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கையில், "கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட ஆண்டுகளில் நிகழ்ந்த உயிரிழப்பு எண்ணிக்கை கொரோனாவுக்கு முந்தைய ஆண்டுகளில் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கையுடன் கழித்து அதில் வந்த வித்தியாசத்தை வைத்து பார்த்ததில் இந்த எண்ணிக்கை வந்துள்ளது." எனக் கூறியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவை சேர்ந்த சென்டர் ஃபார் குளோபல் டெவலப்மெண்ட் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இந்திய அரசு அறிவித்ததைவிட 41 லட்சம் பேர் கூடுதலாக உயிரிழந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இந்த முடிவை வெளியிட்டதாக அந்த அமைப்பு தெரிவித்தது.
கங்கையில் மிதந்த சடலங்கள்

இந்தியாவில் கொரோனாவால் 5.23 லட்சம் பேர் உயிரிழந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால், கொரோனா 2வது அலையின்போது உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கங்கை போன்ற நதிகளில் கொரோனாவால் பலியானவர்களின் சடலங்கள் வீசப்பட்டதாக புகைப்படங்களுடன் செய்திகள் வெளியாகின. கொரோனா பலி எண்ணிக்கை குறைத்து காட்டப்படுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டின.

கருத்துகள் இல்லை: