வியாழன், 5 மே, 2022

நீங்கள் முடிவெடுக்கவில்லையென்றால், நாங்கள் எடுப்போம்"- பேரறிவாளன் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிரடி!

 நக்கீரன் : பேரறிவாளனை விடுதலைச் செய்யக்கோரும் விவகாரத்தை வரும் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலைச் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்டு மனு இன்று (04/05/2022) உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வரர் ராவ் மற்றும் கவாய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டு நடப்பதில் சில சிக்கல்கள் உள்ளன என்று வாதிட்டார்.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆளுநர் மட்டுமே முடிவெடுக்க வேண்டிய நிலையில், தேவையில்லாமல் குடியரசுத்தலைவருக்கு அனுப்புகிறார் என்று வாதிட்டார்.


அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், "மேற்கொண்டு வாதிட ஒன்றுமில்லை என மத்திய அரசு சொன்னால் பேரறிவாளனை உடனே விடுவித்து உத்தரவிடுகிறோம். பேரறிவாளன் விவகாரத்தில் அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டியது தானே. பேரறிவாளன் விவகாரத்தில் பல இடைக்கால உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளோம்.
அதன் நிலை என்ன?, அரசமைப்பு சட்டம், கூட்டாட்சித் தத்துவம் தொடர்புடைய அதிமுக்கிய விஷயமாக இந்த வழக்கைக் கருதுகிறோம். மத்திய அரசு வரும் செவ்வாய்க்கிழமைக்குள் முடிவெடுக்காவிட்டால், அரசமைப்பின்படி உச்சநீதிமன்றம் முடிவு எடுக்கும்" என மத்திய அரசுக்கு தெரிவித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

 

கருத்துகள் இல்லை: