செவ்வாய், 3 மே, 2022

பிரசாந்த் கிஷோர் தனிக்கட்சி தொடங்குகிறார்? - மக்களை சந்திக்கப் போவதாக ட்வீட்

 News18 Tamil  :  மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது, நல்லாட்சி என்ற முழக்கத்துடன் மக்களை சந்திக்கவுள்ளேன் என பிரசாந்த் கிஷோர் ட்வீட் செய்துள்ளார்.
இந்தியாவின் பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் தனிக்கட்சி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் முன்னணி தேர்தல் வியூக நிபுணராக ஐபேக் நிறுவனத்தின் பிரசாந்த் கிஷோர் திகழ்ந்து வருகிறார். பாஜக தொடங்கி, காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், ஓய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிரிய சமதி வரை பல கட்சிகளுக்கு இவர் தேர்தல் வியூகங்கள் அமைத்து தந்து அதில் பல வெற்றியையும் கண்டுள்ளார்.


அத்துடன் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தில் 2018ஆம் ஆண்டு இணைந்த பிரசாந்த் கிஷோர், 2020ஆம் ஆண்டு நிதிஷ் குமாரால் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டார். சமீப காலமாக இவர், தேர்தல் வியூக பணிகளை குறைத்துக் கொண்டு நேரடி மக்கள் பணியில் களமிறங்க விரும்புவதாக தெரிவித்து வந்தார். இந்நிலையில், இவரை காங்கிரஸ் கட்சியில் சேர்ப்பதற்கு முயற்சிகள் நடந்தன. கட்சி மேலிடத்திடத்திடம் இவர் தொடர் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், 2024ஆம் ஆண்டு கட்சியின் தேர்தல் குழுவில் முக்கிய பொறுப்பு வழங்க காங்கிரஸ் முன்வந்தது. இருப்பினும் பிரசாந்த் கிஷோர் அதனை ஏற்கவில்லை.

இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் நேரடியாக அரசியல் களத்தில் குதிக்கும் விதமாக அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட ட்விட்டரில் பதிவில், "மக்கள் நலனுக்காக நான் மேற்கொண்ட கடந்த 10 ஆண்டுகால பயணம் மேடு பள்ளங்கள் நிறைந்த அனுபவமாக இருந்தது.

தற்போது மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது, நல்லாட்சி என்ற முழக்கத்துடன் மக்களை சந்திக்கவுள்ளேன். பீகாரில் இருந்து தொடக்கம்" என பதிவிட்டுள்ளார். இதனால் அவர் தனிக்கட்சி தொடங்கலாம் என கருதப்படுகிறது. கடந்த வாரம் தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவை ஹைதராபாத்தில் சந்தித்த பிரசாந்த் கிஷோர், அடுத்து வரும் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிக்கு பணியாற்ற ஒப்புக்கொண்டார்

கருத்துகள் இல்லை: