வெள்ளி, 6 மே, 2022

சேகர் ரெட்டி வீட்டில் இருந்தது பழைய 12 லட்சம் ரூபாய்தான்: அமலாக்கத்துறை வழக்கு ரத்து- உச்ச நீதிமன்றம்

மின்னம்பலம் : நாட்டையே உலுக்கிய 500 ரூபாய், 1000 ரூபாய் செல்லாது என்ற பணமதிப்பழிப்பு நடவடிக்கை கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது.
அப்போது இந்தியாவில் பலரும் பணம் இன்றி தவித்துக் கொண்டிருந்த நிலையில், தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கு சொந்தமான அலுவலகங்கள் வர்த்தக வளாகங்களில் 2016 டிசம்பரில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
அப்போது சுமார் 33 கோடி ரூபாய் மதிப்பில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. இதனடிப்படையில் சேகர் ரெட்டி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ மேற்கொண்ட விசாரணையில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று சென்னை விசாரணை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது சிபிஐ. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் சேகர் ரெட்டி மீதான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.  சிபிஐ வழக்கு முடித்து வைக்கப்பட்ட போதும் சேகர் ரெட்டிக்கு எதிராக அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்திருந்தது.

இந்த வழக்கையும் ரத்து செய்யுமாறு சேகர் ரெட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் சேகர் ரெட்டியின் இந்த கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு சென்றார் சேகர் ரெட்டி.

இந்த வழக்கு விசாரணை கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி நடந்த போது சேகர் ரெட்டி தரப்பினரும் அமலாக்கத்துறை தரப்பினரும் தங்கள் இறுதி வாதங்களை முன்வைத்தனர். அதன்பின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்ட இந்த வழக்கில் மே 5 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

  இதில் சேகர் ரெட்டி மீதான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், "இரு தரப்பு வாதங்களையும் பார்க்கும்போது அமலாக்கத்துறை கடந்த ஐந்தரை வருடங்களாக இவ்வழக்கில் எந்த ஒரு ஆதாரத்தையும் சேகரிக்க முடியவில்லை என்பது தெரிகிறது. சேகர் ரெட்டி மீது அமலாக்கத் துறை தொடுத்த சட்டவிரோத பணப் பரிவர்த்தனை என்ற குற்றச்சாட்டை சந்தேகத்திற்கிடமின்றி நிறுவுவதற்கான எந்த முகாந்திரமும் அமலாக்கத்துறையிடம் இல்லை" என்று தெரிவித்திருக்கும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் வருமானவரித்துறை சேகர் ரெட்டிக்கு அனுப்பிய ஒரு கடிதத்தை சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.

இந்த கடிதம் சேகர் ரெட்டி தரப்பினரால் முக்கிய ஆவணமாக உச்சநீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

அதாவது 2016 டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட சோதனைகள் குறித்து 2019 மே 1ஆம் தேதி‌ சேகர் ரெட்டி சில விவரங்களைக் கேட்டு வருமான வரித் துறைக்கு கடிதம் எழுதுகிறார். அதனடிப்படையில் 2019 மே 16 ஆம் தேதி வருமான வரித்துறையின் சென்னை இணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து சேகர் ரெட்டி பங்குதாரராக உள்ள நிறுவனமான எஸ் ஆர் எஸ் மைனிங்ஸ் நிறுவனத்துக்கு ஒரு கடிதம் அனுப்பப்படுகிறது.

அதில், 'எஸ்ஆர்எஸ் மைனிங்ஸ் நிறுவனங்களுக்கு தொடர்புடைய இடங்களில் 2016 டிசம்பர் 8-ஆம் தேதி வருமான வரித்துறை சோதனை தொடங்கியது. இந்த சோதனை குறித்து வருமான வரித்துறை சார்பில் சிபிஐக்கு தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட பெரும் மதிப்பிலான புதிய 2000 ரூபாய் நோட்டுகள் பற்றிய செய்திகள் வந்ததையடுத்து சிபிஐ தானாகவே முன்வந்து வழக்கை பதிவு செய்தது.

இந்த சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் தங்கம் ஆகியவை எஸ்ஆர்எஸ் மைனிங் நிறுவனத்திற்கு சொந்தமானவை. இந்த நிறுவனத்தில் எஸ் ராமச்சந்திரன், கே ரத்தினம், ஜெ.சேகர் ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கிறார்கள்.

இந்த சோதனையின்போது சேகர் ரெட்டியின் வீட்டிலிருந்து பழைய கரன்சி நோட்டுகளான அதாவது பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்கு முன்பாக புழக்கத்தில் இருந்த கரன்சி 12 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது" என்று குறிப்பிட்ட வருமான வரித்துறையினர் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் நகைகள் எஸ்ஆர்எஸ் மைனிங் சார்ந்த எந்தெந்த அலுவலகங்களில் எவ்வளவு கைப்பற்றப்பட்டது என்ற விவரங்களையும் விரிவாக தெரிவித்திருந்தனர்.

மேலும் எஸ்ஆர்எஸ் மைனிங்ஸ் சார்பில் 2016- 17 நிதியாண்டுக்கு 12 கோடி ரூபாய் அட்வான்ஸ் வரியாகவும் 2017- 18 ஆம் நிதியாண்டுக்கான 18 கோடி ரூபாய் அட்வான்ஸ் வரியாகவும் இந்த வருமான வரி சோதனைக்கு முன்பே செலுத்தப்பட்டிருக்கிறது என்றும் வருமான வரித்துறை இணை இயக்குனர் கே. ஜி. அருண்ராஜ் எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

வருமானவரித் துறையின் இந்த கடிதத்தை தங்களது தீர்ப்பில் முக்கியமான அம்சமாக சுட்டிக்காட்டி இருக்கும் நீதிபதிகள் இதன் காரணமாக சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் சேகர் ரெட்டியைக் குற்றஞ்சாட்ட இயலாது என்று தெரிவித்திருக்கிறார்கள்.

எனவே சென்னை உயர்நீதிமன்றம் சேகர் ரெட்டி மீது அமலாக்கப்பிரிவு தொடுத்த வழக்கை ரத்து செய்ய மறுத்த உத்தரவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து... சேகர் ரெட்டி மீதான அமலாக்கப்பிரிவு வழக்கை ரத்து செய்தது.

ஆரா

கருத்துகள் இல்லை: