சனி, 7 மே, 2022

அரசு பேருந்தில் பயணித்த முதல்வர் ... ஓராண்டு நிறைவு!

 மின்னம்பலம் : முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் (மே 07) ஓராண்டு நிறைவு பெறுகிறது. கடந்த ஆண்டு இதே நாளில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் எனக் கூறி முதல்வராக உறுதிமொழி ஏற்றார்.
ஓராண்டு நிறைவை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின், இன்று கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கலைஞரின் இல்லத்திற்குச் சென்று அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தன்னுடைய தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார்.
சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


தொடர்ந்து, ராதாகிருஷ்ணன் சாலையில் காரில் சென்ற போது, காரை நிறுத்த சொன்ன முதல்வர் ஸ்டாலின், அந்த வழியாக வந்த 29சி பேருந்தில் ஏறி ஆய்வு செய்தார். இதைப்பார்த்து பேருந்திலிருந்த பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். பேருந்திலேயே சிறிது நேரம் மக்களோடு மக்களாகப் பயணம் செய்தார். அப்போது பெண்களிடம் இலவச பேருந்து பயண சலுகையின் பயன்கள் குறித்துக் கேட்டறிந்தார்.

அதுபோன்று காலை சட்டப்பேரவைக்குச் சென்ற முதல்வர் அவை கூடியதும் சிறப்புரையாற்றினார்.

அவர் பேசுகையில், “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெறுகிறது. கடந்த ஓராண்டில் தமிழக மக்களுக்காக உண்மையாக உழைத்துள்ளேன் என்ற மன நிறைவுடன் இந்த மாமன்றத்தில் நின்றுகொண்டிருக்கிறேன். ஒரு தனி மனிதரின் வரலாற்றில் வேண்டுமானால், ஓராண்டு என்பது மிக நீளமாக இருக்கலாம், ஆனால் ஒரு மாநிலத்தின் வரலாற்றில் ஓராண்டு என்பது ஒரு துளிதான். துளி போன்ற காலத்தில் கடல் போன்ற விரிந்த சாதனையைச் செய்துள்ளோம்.

‘இந்த தமிழ் சமுதாயத்துக்காக நானும், பேராசிரியரும் உழைத்துக் கொண்டிருக்கிறோம். எங்களுக்குப் பின்னால் இந்த பணியை யார் செய்வார்கள் என்று கேட்டால், இந்த மேடையில் அமர்ந்திருக்கக் கூடிய ஸ்டாலின் செய்ய வேண்டும். சிறப்பாகச் செய்வார் என்று நானும் பேராசிரியரும் நம்புகிறோம்’ என்று கலைஞர் பல்லாயிரக்கணக்கானோர் கூடியிருந்த கூட்டத்தில் அறிவித்தார். அந்தவகையில், கலைஞரும், பேராசிரியரும் என் மீது வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றியிருக்கிறேன்” என்று கூறினார்.

தொடர்ந்து, இன்று காலை அரசு பேருந்தில் பயணித்தது குறித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “இன்று காலை நான் ராதாகிருஷ்ணன் சாலையில் (29 சி) அரசுப் பேருந்தில் ஏறிப் பயணித்தேன். 29 சி பேருந்தில் தான் சிறுவயதில் பள்ளிக்குச் சென்று வந்தேன். அதனால் அந்தப் பயணம் எனக்கு மகிழ்ச்சியளித்தது. பேருந்திலிருந்த மகளிரிடம் ஓராண்டுக் கால திமுக ஆட்சியைப் பற்றிக் கேட்டேன். ஆட்சி நடக்கும் முறை திருப்தியளிக்கிறது என்று மகளிர் தெரிவித்தனர். என்னைப் பார்த்ததில் இன்னும் மகிழ்ச்சியென்றனர். இலவசப் பயணத்தால் தாங்கள் லாபமடைவதாகக் கூறினார்கள். இதற்குச் சான்றும் உள்ளது. இந்தத் திட்டம் குறித்து சென்னையில் மூன்று வழித்தடங்களில் பயணிக்கும் மக்கள் சிலரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி இத்திட்டத்தால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினப் பெண்கள் பயன்பெற்றுள்ளனர். அதுவும் குறிப்பாக பட்டியலினப் பெண்கள் அதிகமாகப் பயன்பெற்றுள்ளனர். இந்தச் சலுகை மூலமாக மாதந்தோறும் குறைந்தது ரூ.900 வரை மிச்சமாவதாக பெண்கள் பலர் கூறியுள்ளனர். இதுதான் இந்த அரசின் சாதனை. அன்றாடச் செலவுக்கு பணம் இல்லாது இருந்த பெண்கள் சேமிக்கக் கூடியவர்களாக மாறியுள்ளனர். ஒரே கையெழுத்து மூலம் கோடிக்கணக்கான மகளிர் வாழ்வில் ஒளியேற்றியது தான் திராவிட மாடல் ஆட்சி. இது மட்டுமல்ல இன்னும் பல சாதனைகளை நமது ஆட்சி செய்துள்ளது. ஓராண்டு காலத்தில் கோடிக்கணக்கான மக்கள் பலன் பெற்றுள்ளனர்" என்றார்.

-பிரியா

கருத்துகள் இல்லை: