மின்னம்பலம் : தருமபுரம் ஆதீனத்தில் நடக்க இருந்த பட்டின பிரவேசம் என்ற நிகழ்ச்சியை, மனிதரை பல்லக்கில் வைத்து மனிதர் தூக்கக் கூடாது என்ற புகார்களின் விளைவாக கோட்டாட்சியர் நடத்தத் தடை விதித்தார்.இது தமிழ்நாடு அளவில் விவாதம் ஆனது.
தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடக்கும் இந்த பட்டினப் பிரவேசம் என்ற நிகழ்வை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்தார். இதுபற்றிப் பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று மே 4ஆம் தேதி சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
இதற்கிடையே மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் இந்த விவகாரத்தில் அரசுக்கு எதிரான தனது கருத்துக்களை கடுமையாக தெரிவித்துள்ளார்.
"பட்டின பிரவேசத்துக்கு தடை விதிக்க இவர்கள் யார்? இந்து தர்மத்தை தடை போடுவதற்கும் இந்து தர்மத்தைப் பற்றி சொல்வதற்கும் இவர்கள் யார்?
உங்கள் வீட்டில் சமைப்பதற்கு பக்கத்து வீட்டுக்காரரிடம் கேட்டுக் கொண்டா நீங்கள் சமைக்க வேண்டும்? இந்து தர்மத்தில் சந்நியாசிகள், மடாதிபதிகளுக்கு இருக்கக் கூடிய ஒரு விஷயம். அதில் வெளி மனுஷா
தலையிடுவதற்கு சம்பந்தமே இல்லை.
ஸ்ரீரங்கத்தில் கூட ஒரு ஆச்சாரியனுக்கு எதிராக இல்லாததை எல்லாம் செய்து வருகிறார்கள். சில பேருக்கு தர்மத்தின் மேல் கடவுள் மேல் நம்பிக்கை இல்லாவிட்டால் அவர்களுடைய நம்பிக்கையோடு அவர்கள் இருக்கட்டும். இன்னொருத்தரோட நம்பிக்கையை கெடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இதே மாதிரி இந்து தர்மத்துக்கு எதிராகவும் இந்து தர்மத்துக்கு விரோதமாகவும் தொடர்ந்தால் அவர் அமைச்சராக இருந்தாலும் நாட்டில் நடமாட விட மாட்டோம் என்ற எச்சரிக்கையையும் கொடுக்கலாம். அரசாங்கம் எல்லா தர்மத்துக்கும் ஒரே மாதிரி இருந்தால் நாங்கள் அரசாங்கத்தை பாராட்டுவோம். ஆனால் இந்து தர்மத்தை மட்டும் அரசாங்கம் எதிர்த்தால் நாங்கள் அதை விட மாட்டோம்" என்று கூறியிருக்கிறார் செண்டலங்கார ஜீயர்.
வேந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக