செவ்வாய், 3 மே, 2022

சமஸ்கிருத உறுதிமொழி: மாணவர்கள் விளக்கம்!

 மின்னம்பலம் : மதுரை மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றது தொடர்பாக அக்கல்லூரி மாணவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
மதுரை மருத்துவக் கல்லூரியில் புதிதாகச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் போது மருத்துவ மாணவர்கள் வழக்கமாக ஏற்கும் ஹிப்போகிரெடிக் உறுதிமொழிக்குப் பதிலாகச் சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்ட ‘மகரிஷி சரக சப்த’ என்ற உறுதிமொழி வாசிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.


இந்த விவகாரத்தைத் தொடர்ந்து மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் இன்று மருத்துவ கல்லூரியின் மாணவர் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தனர்.

மாணவர் பேரவைத் தலைவர் ஜோதி செய்தியாளர்களிடம் கூறுகையில், "நாங்கள் உறுதி மொழியைச் சமஸ்கிருதத்தில் ஏற்றதாக கூறுகிறார்கள். ஆனால் சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டதைத்தான் வாசித்தோம்.

தேசிய மருத்துவ கழகத்தின் வழிமுறைகளை தான் நாங்கள் பின்பற்றி வருகிறோம். இந்த சூழலில் சரக சப்த உறுதிமொழியைப் பரிந்துரைப்பதாகத் தேசிய மருத்துவ கழகம் தெரிவித்திருந்தது. ஆனால் கட்டாயம் என்று சொல்லவில்லை.

நேற்றுவரை ஹிப்போகிரெடிக் உறுதி மொழிதான் கட்டாயம் என்றும் சொல்லவில்லை. சரக சப்த உறுதிமொழியை வாசிக்கக் கூடாது என்றும் சொல்லவில்லை.

நேற்று தான், தமிழகம் முழுவதுமுள்ள மருத்துவக் கல்லூரிகள் ஹிப்போகிரெடிக் உறுதிமொழியைத் தான் எடுக்க வேண்டும் என்று எங்களுக்கு சர்க்குலர் வந்தது.

வரவேற்பு விழா நடத்துவதற்கு போதிய கால அவகாசம் கிடைக்கவில்லை. அவசரத்தில் செய்ததால் தவறு செய்துவிட்டோம். மீடியாவில் வந்த பிறகுதான் எங்களுக்கு இப்படி சர்ச்சையானது தெரியவந்தது” என்று கூறினார்.

-பிரியா

கருத்துகள் இல்லை: