மின்னம்பலம் : பொருளாதார நெருக்கடியால் இலங்கை நாட்டில் மக்கள் அன்றாட பயன்பாட்டுக்கு உரிய பொருள்களுக்கும் அடிப்படை உணவு பொருட்களுக்கும் அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் தமிழக அரசு சார்பில் இலங்கை தமிழ் மக்களுக்கும் தமிழரல்லாத சிங்கள மக்களுக்கும் சேர்த்து நிவாரணப் பொருட்கள் ஒன்றிய அரசு மூலம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை மக்களுக்காக உதவி செய்வதற்கு நிதி உதவி செய்யும்படியும் தமிழக முதல்வர் கோரிக்கை வைத்திருக்கிறார். அதன் அடிப்படையில் திமுக ஒரு கோடி ரூபாயை இலங்கை மக்களுக்காக அளித்துள்ளது. இதுபோல அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தனது குடும்பத்தின் சார்பில் 50 லட்சம் ரூபாயை இலங்கை மக்களின் நிவாரண உதவிக்காக அளித்துள்ளார்.
தேமுதிக சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் அளிப்பதாக அதன் பொதுச் செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ள நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி இலங்கை மக்களுக்காக தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் 10 லட்சம் ரூபாயை அளித்திருக்கிறார்.
இதுகுறித்து அழகிரி வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி
இலங்கை மக்களுக்கு நிவாரண உதவிகள் அளித்த வரலாற்றை நினைவு படுத்தி உள்ளார்.
"இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி 123 ரூபாய் கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு அனுப்ப தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசிடம் அனுமதி கோரினார். அதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதையொட்டி, இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதற்காக 80 கோடி ரூபாய் மதிப்புள்ள 40 ஆயிரம் டன் அரிசி, 28 கோடி ரூபாய் மதிப்புள்ள 13 உயிர் காக்கும் மருந்துகள், 15 கோடி ரூபாய் மதிப்புள்ள சிறுவர்களுக்கான 500 டன் பால் பவுடர் ஆகியவற்றை அனுப்புவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது.
இலங்கை மக்களுக்கு உதவ நிதி வழங்குமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்ததோடு, தி.மு.க. சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்திருப்பதை வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
கடந்த காலங்களிலும் இலங்கைத் தமிழர்கள் இத்தகைய இன்னல்களைப் பெருமளவில் அனுபவித்திருக்கிறார்கள். கடந்த பிப்ரவரி மாதம் 1987 ஆம் ஆண்டு அன்றைய இலங்கை அரசு யாழ்ப்பாணம் பகுதி முழுவதற்கும் பொருளாதாரத் தடையை விதித்தது. ராணுவத்தின் மூலமாக தாக்குதலை நடத்தியது. இதனால் இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் வாழ்கிற தமிழர்கள் அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறை காரணமாக கடும் அவதிக்குள்ளானார்கள்.
இலங்கைத் தமிழர்களின் துயரைத் துடைப்பதற்காக பிரதமர் ராஜிவ் காந்தி ஆணையிட்டதன் பேரில் தமிழகத்தில் இருந்து உணவுப் பொருட்கள், எரிபொருள் ஏற்றிய 19 படகுகள் ஜூன் 1987 அன்று இலங்கையின் வடக்கு பகுதிக்கு அனுப்பப்பட்டன.
ஆனால், நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த படகுகளை இலங்கை அரசின் கடற்படை அனுமதிக்காமல் தடுத்து விட்டது. இதனால், நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற இந்திய அரசின் படகுகள் ராமேஸ்வரம் நோக்கித் திரும்பி வர வேண்டிய நிலை ஏற்பட்டது.
பொருளாதாரத் தடையினால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு எந்த வகையிலாவது மனிதாபிமான அடிப்படையில் உதவிகளைச் செய்ய வேண்டுமென்று அன்றைய பிரதமர் ராஜிவ் காந்தி முடிவெடுத்தார். அதன்படி, பெங்களூர் விமான தளத்திலிருந்து பாதுகாப்புடன் அனுப்பப்பட்ட 5 இந்திய விமானங்கள், இலங்கையின் ஆகாய பகுதிக்குள் பாராசூட் மூலம் அத்துமீறிப் பிரவேசித்து வடக்கு மாகாணத்தில் வாழ்கிற இலங்கைத் தமிழர்களுக்கு 24 டன் நிவாரணப் பொருட்கள் பூமியை நோக்கி மக்கள் பெறுகிற வகையில் கீழே போட்டன. உண்ண உணவின்றி அல்லலுற்ற அப்பாவித் தமிழர்கள், இந்திய அரசு வழங்கிய உணவுப் பொருட்களைப் பெற்று மகிழ்ச்சிக் கடலில் திளைத்ததோடு, உணவின்றி வாடிய நிலையில் உணவளித்த இந்திய அரசுக்கு இலங்கைத் தமிழர்கள் நன்றி தெரிவித்தனர். இந்த நடவடிக்கை 'ஆபரேஷன் பூமாலை' என்று அழைக்கப்பட்டது" என்று ராஜீவ் காந்தியின் இலங்கை தமிழ் மக்களுக்கான உதவியை நினைவுபடுத்தியுள்ள கே எஸ் அழகிரி,
"இலங்கைத் தமிழர்கள் எதிர்கொள்கிற இன்னல்களைப் போக்கிடும் வகையில் நிவாரணப் பொருட்களை தமிழக அரசு சார்பில் வழங்குவதோடு, தி.மு.க.வின் சார்பில் நிதி வழங்குகிற முயற்சிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் துணை நிற்க விரும்புகிறது. அதன்படி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக முதலமைச்சரின் அறிவிப்புக்கு ஈடுகொடுக்கிற வகையில், தமிழக மக்கள் அனைவரும் நிதியுதவி வழங்க வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
வேந்தன்3
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக