செவ்வாய், 15 மார்ச், 2022

பங்காரு- நேரு சந்திப்பு: நடந்தது என்ன?

 மின்னம்பலம் : திமுகவின் முதன்மை செயலாளரும் தமிழக நகர்ப்புற நிர்வாகத் துறை அமைச்சருமான கே. என். நேரு, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளாரை சந்தித்த புகைப்படங்கள் தான் அவை. பங்காரு அடிகளார் எதிரில் நேரு தரையில் அமர்ந்திருக்கும் படம் வெளியாகி சமூக வலைதளங்களில் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
"கடந்த மார்ச் 3ஆம் தேதி மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாருக்கு 81வது பிறந்த நாள். பங்காரு அடிகளாருடன் கே.என். நேருவுக்கு நல்ல பழக்க வழக்கம் உண்டு.
அடிகளாரின் பையன் அன்பழகன் சென்னை வரும்போதெல்லாம் நேருவை சந்திக்கும் வழக்கமுடையவர். இந்த வகையில் பிறந்தநாளுக்கு பங்காரு அடிகளார் இடம் ஆசி வாங்க திட்டமிட்ட நேருவால் அப்போது செல்ல முடியவில்லை.
கூடவே நேருவின் மறைந்த சகோதரர் ராமஜெயத்தின் மகன் வினித் நந்தனுக்கு வரும் மார்ச் 16ஆம் தேதி சென்னையில் திருமணம் நடைபெற உள்ளது. பெரியப்பா ஆகிய நேரு தான் இந்த திருமணத்தை முன்னின்று நடத்தி வைக்கிறார். அதனால் பல்வேறு விஐபிகளுக்கும் சென்று அவரே பத்திரிக்கை வைத்து வருகிறார்.

அடிகளாரை பிறந்தநாளன்று சந்திக்க முடியாததால் தன் தம்பி மகன் திருமண பத்திரிக்கையும் வைத்துவிட்டு சந்தித்து ஆசி பெற்று வரலாம் என்று மார்ச் 12ஆம் தேதி மேல்மருவத்தூர் சென்றார் நேரு.

பெரியாரின் சமூக சீர்திருத்தக் கொள்கைகளை நேரு ஏற்றுக்கொண்டாலும் கடவுள் நம்பிக்கையில் அதிதீவிரமானவர் நேரு.

2020 மார்ச் 1ஆம் தேதி அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளை திமுகவின் திருச்சி அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் கொடி ஏற்றி கொண்டாடினர் நேரு. கருப்பு சிவப்பு கொடியை ஏற்றி முடித்ததும் கொடிக்கம்பத்திற்கு மேலே கருடன் வட்டமிட, 'அண்ணே அங்க பாருங்க'என்று சக நிர்வாகிகள் கருடனை நேருவுக்கு காட்ட... கருடனை பார்த்து கும்பிட்டு கன்னத்தில் போட்டுக் கொண்டார் நேரு. இப்படி ஆன்மீக நடவடிக்கைகளில் வெளிப்படையானவர் தான்.

அந்த வகையில் மார்ச் 12ஆம் தேதி மேல்மருவத்தூர் சென்று பங்காரு அடிகளாரை சந்தித்தார் அமைச்சர் நேரு.

வயதாகிவிட்டதால் சமீபகாலங்களாக பங்காரு அடிகளார் ரொம்ப நேரம் நிற்க முடியவில்லை. அதனால் உட்கார்ந்து கொண்டு தான் பலரையும் சந்திப்பார்.

12ஆம் தேதி நேரு சந்தித்தபோதும் பங்காரு அடிகள் முதலில் அமர்ந்து தான் இருந்தார். எதிரே இருந்த சோபாவில் நேருவும் அமர்ந்திருந்தார். 'எங்களையெல்லாம் பார்த்துக்கங்க' என்று பங்காரு அடிகளார் நேருவை பார்த்துட்டு கூற, 'அப்படிலாம் சொல்லக் கூடாது நீங்க தான் எங்களை எல்லாம் பார்த்துக்கணும்' என்று நேரு பதிலளித்துள்ளார்.

சில நிமிடங்கள் இப்படிப் பேசிக் கொண்டிருந்து விட்டு தனது தம்பி மகன் திருமண பத்திரிக்கையை பங்காரு அடிகளாரிடம் வழங்கினார் நேரு. அதன் பிறகு தனது 81வது பிறந்த நாளை முன்னிட்டு அவதார திருநாள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட நூலை நேருவிடம் கொடுத்தார் பங்காரு அடிகளார்.

அந்தப் புத்தகத்தை பங்காரு அடிகளாரிடமிருந்து பெற்றுக் கொண்டதும் அப்படியே தரையில் உட்கார்ந்துவிட்டார் நேரு.

பொதுவாகவே பங்காரு அடிகளாரை சந்திக்க செல்பவர்கள் யாரும் அவர் அறைக்குள் போட்டோ எடுக்கக் கூடாது. ஆதிபராசக்தி பீடத்தின் சார்பில் அவர்கள்தான் போட்டோ எடுப்பார்கள்.

சந்திப்பு முடிந்து பீடத்தின் சார்பில் தான் நேரு தரையில் அமர்ந்திருக்கும் போட்டோவை ரிலீஸ் செய்திருக்கிறார்கள். அதுதான் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது. அதோடு கூடவே நேரு பங்காரு அடிகளாரின் எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்து இருப்பது போலவும் ஒரு போட்டோவை சித்தரித்து திமுகவினர் சிலர் பரப்பி விட, போட்டோவில் கால்களே இல்லையே என்று கேட்டு அதை மேலும் வைரல் ஆக்கினார்கள் திமுக எதிர்ப்பாளர்கள்.

இது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம், தர்மபுரி திமுக மக்களவை உறுப்பினர் தனது ட்விட்டரில் வெளியிட்ட கருத்தும் நேருவை குறி வைத்து எழுதப்பட்டது என்கிறார்கள்.

செந்தில் தனது பதிவில்,' கடவுளை வணங்குவதும் மறுப்பதும் தனிமனித உரிமை. So called (ஆ) சாமியார்கள் சந்திப்பதும் தனிமனித விருப்பம். ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் சுயமரியாதையை இழக்க வேண்டாம். பெரியார் அண்ணா கலைஞர் அவர்களுக்கு நாம் செலுத்தும் குறைந்தபட்ச மரியாதை நம் சுயமரியாதையை காப்பதே' என்று குறிப்பிட்டிருக்கிறார் தர்மபுரி எம்பி டாக்டர் செந்தில்.

'நேருவுக்கு எதிரான இந்தக் கருத்தை வெளியிடுமாறு டாக்டர் செந்திலுக்கு அழுத்தம் கொடுத்து விட வைத்தது அமைச்சர் பொன்முடி தான்' என்றும் ஒரு பேச்சு திமுக மேல்மட்ட வட்டாரங்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆக பங்காரு அடிகளாரை சந்திக்கச் சென்ற அமைச்சர் நேரு, அவருக்கு எதிரில் சோபாவில் அமர்ந்ததும் உண்மை, தரையில் அமர்ந்ததும் உண்மை" என்ற மெசேஜ் க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் சென்றது மெசேஞ்சர்.

கருத்துகள் இல்லை: