செவ்வாய், 15 மார்ச், 2022

இயக்குநர் கவுதமன் திடீர் கைது!

 நக்கீரன் - பி சிவன் - ப.ராம்குமார்  : தென் காசி மாவட்டத்தின் சங்கரன்கோவிலின் உட்கோட்டத்திலிருக்கிறது குறிஞ்சாங்குளம் கிராமம். கடந்த 1992 மார்ச் 14 அன்று இங்கு இரு பிரிவினருக்குள் ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகொலையானார்கள்.
ஊர் பொது மைதானத்தில் காந்தாரி அம்மன் சிலை வைப்பது தொடர்பாக மூண்ட விவகாரத்தில் பிரச்சனை கிளம்பியதால் இந்தச் சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படுகிறது.
அன்றிலிருந்தே விவகாரம் அவ்வப்போது தொடர்ந்திருக்கிறது. 2016ன் போது மண்சிலையான காந்தாரி அம்மனை எடுத்துவிட்டு கற்சிலை அமைக்க முற்பட்டபோது அரசின் வருவாய்த்துறையினர் தலையிட்டு சிலையைக் கையகப்படுத்தி அரசு பாதுகாப்பில் வைத்தனர்.


இந்தநிலையில் அண்மையில் பொங்கல் விழாவின் பொருட்டு மைதானத்தில் விளையாட்டு போட்டி நடப்பதற்கான முயற்சிகளை ஒருதரப்பினர் மேற்கொண்டபோது இருபிரிவினருக்குமிடையே மீண்டும் விவகாரம் மூண்டு பதற்ற சூழலானது. மாவட்ட எஸ்.பி.யான கிருஷ்ணராஜ், ஏ.டி.எஸ்.பி.ராஜேந்திரன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தினார்கள். மார்ச் 14 அன்று படுகொலையானவர்களின் நினைவு தினம் வருவதால் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

இதனிடையே குறிஞ்சாங்குளம் கிராமத்திற்கு உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு இன்று மார்ச் 14ல் அங்கு செல்வதற்காக தமிழ் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளரான கவுதமன் காலை 7.10 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையம் வந்திறங்கினார். 144 தடையை மீறி அஞ்சலி செலுத்துவதற்காக வந்த கவுதமனை புதுக்கோட்டை போலீசார் கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை: