செவ்வாய், 15 மார்ச், 2022

ரஷ்யாவிற்கு இந்தியா அதிரடி ஆதரவு .. என்ன காரணம் ?

  Shyamsundar - e Oneindia Tamil  : டெல்லி: மேற்கு உலக நாடுகள், அமெரிக்கா என்று பல்வேறு நாடுகள் ரஷ்யாவை எதிர்த்ததாலும், ரஷ்யாவிற்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளை விதித்தாலும் இந்தியா மட்டும் ரஷ்யாவை இதுவரை எதிர்க்கவில்லை. இதற்கு பின் பல்வேறு காரணங்கள் உள்ளன.
உக்ரைன் போரை தொடர்ந்து ரஷ்யாவிற்கு எதிராக ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்ட பல்வேறு மேடைகளில் 6 தீர்மானங்கள் இதுவரை கொண்டு வரப்பட்டன. ஆனால் இதுவரை எந்த தீர்மானத்திலும் ரஷ்யாவிற்கு எதிராக இந்தியா வாக்களிக்க மறுத்துவிட்டது.
ரஷ்யாவிற்கு எதிராக வாக்களிக்க மறுத்ததோடு தற்போது ரஷ்யாவிடம் இருந்து கூடுதல் எண்ணெய்களை வாங்க இந்தியா ஆலோசனை செய்து வருகிறது. ரஷ்ய எண்ணையை அமெரிக்கா தடை செய்துள்ள நிலையில் ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் இந்தியா எண்ணெய் வாங்க உள்ளது.


அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகள் ரஷ்யாவுடன் நெருக்கமாக இருக்கும் நாடுகள் மீது பொருளாதார தடை என்ற பூச்சாண்டியை காட்டி வரும் நிலையில்தான் இந்தியா தைரியமாக எண்ணெய் வாங்க முடிவு செய்துள்ளது. இந்திய ரஷ்யா இடையிலான பொருளாதார ரீதியான உறவு, ராணுவ உபகரணங்கள் ஏற்றுமதி இறக்குமதி. பிரமோஸ் தயாரிப்பு என்று பல காரணங்கள் இதற்கு இருக்கின்றன. அதையும் தாண்டி சில நெகிழ்ச்சியான காரணங்களும்.. இந்த முடிவுக்கு பின் உள்ளது.

சுதந்திர இந்தியாவின் தொடக்கத்தில் இருந்தே சோவியத் யூனியன் இந்தியாவிற்கு நெருக்கமாக இருந்து வந்துள்ளது. முக்கியமாக 1961ல் கோவாவில் போர்ச்சுகீசியர்கள் ஆட்சியை எதிர்த்து இந்திய ராணுவம் உள்ளே புகுந்தது. இதை அமெரிக்கா, ஐரோப்பா, யு.கே, பிரான்ஸ். துருக்கி உள்ளிட்ட நாடுகள் எதிர்த்தன. ஆனால் அப்போது இந்தியாவிற்கு ஆதரவாக இருந்த ஒரே வல்லரசு தேசம் சோவியத் யூனியன்தான். உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி சோவியத் இந்தியாவை ஆதரித்தது.

அதன்பின் காஷ்மீர் விவகாரத்திலும் கூட இந்தியாவை ரஷ்யாதான் ஆதரித்தது. 1955ல் இருந்து 1971 வரை நான்கு முறை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஜம்மு காஷ்மீர் பற்றி தீர்மானம் கொண்டு வர பாகிஸ்தான் முயன்றது. அதாவது காஷ்மீர் பற்றி சர்வதேச அளவில் விசாரிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் முயன்றது. அப்போதெல்லாம் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அதை நொறுக்கியது ரஷ்யாதான். ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கே எப்போதும் எங்கள் ஆதரவு.. நாங்கள் உங்களுக்கு மிக அருகில் இருக்கிறோம்.. மலை மீது ஏறி நீங்கள் கூப்பிட்டால் போதும் நாங்கள் ஓடோடி வந்து உங்களுக்கு உதவுவோம் என்று அப்போதே சோவியத் தலைவர் நிகிதா குர்ஷ்சேவ் வெளிப்படையாக இந்தியாவை ஆதரித்து இருந்தார்.

இது நேரு காலம் .. காங்கிரஸ் காலம் என்று இல்லை. வாஜ்பாய் இந்தியா பிரதமராக இருந்த போது கூட இந்த நட்பு நீடித்தது. கொள்கை ரீதியாக என்னதான் கம்யூனிசம் - இந்துத்துவா எதிர் எதிராக இருந்தாலும் பாஜக அப்போதும் கூட ரஷ்யாவை ஆதரித்தது. நாங்கள் நம்ப கூடிய ஒரே நட்பு நாடு ரஷ்யாதான் என்று வாஜ்பாய் கூறி இருந்ததும். 2000ல் "Declaration of Strategic Partnership" என்ற இரண்டு நாட்டு ஒப்பந்தத்தில் புடின் உடன் சேர்ந்து கையெழுத்து போட்டதும் குறிப்பிடத்தக்கது. அதோடு இந்திய அணு ஆயுத சோதனைக்கு பின் தடை செய்யப்பட்டு இருந்த கிரோயோஜெனிக் எஞ்சின், ராக்கெட் சாதனங்கள் ஆகியவற்றை கூட ரஷ்யாதான் இந்தியாவிற்கு வழங்கியது.

பொருளாதார தடைக்கு இடையிலும் இந்தியாவிற்கு ரஷ்யா இப்படி உதவியது. வேறு எந்த நாடும் அப்போது இந்தியாவிற்கு ராணுவ ரீதியாக உதவி செய்யவில்லை. அதெல்லாம் போக 2019ல் இந்தியாவில் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை உலக நாடுகள் கண்டித்த போது அதை உள்நாட்டு விவகாரம் என்று ரஷ்யாதான் தெரிவித்தது. அதோடு சீனா - இந்தியா மோதலை இரண்டு நாடுகள் பேசி தீர்க்க வேண்டும். மாறாக வெளிநாடுகள் இதில் தலையிடுவதை அனுமதிக்க கூடாது என்று ரஷ்யா கூறியது. இதில் புடின்தான் தலையிட்டு கடைசியில் சமரசம் செய்து வைத்தார்.

இப்படி ஐநா சபையிலும், சபைக்கு வெளியிலும் இரண்டு நாடுகளுக்கு இடையில் நெகிழ்ச்சியான உறவு இருந்து வந்துள்ளது. ரஷ்யாவின் கிரிமியா போர், செசன்யா தாக்குதல் ஆகியவற்றிலும் கூட ரஷ்யாவை இந்தியா ஒரு போதும் கண்டித்தது கிடையாது. ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார தடைகளை இந்தியா மதித்தது கிடையாது. இப்போதும் மோடியும் அதே பாரம்பரியத்தை பின்பற்றி ரஷ்யாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை நடுநிலை நிலைப்பாட்டை எடுத்து இருக்கிறார். அஅரசியல் கொள்கைகள் வேறு மாதிரி இருந்தாலும் மோடி ரஷ்ய பக்கம் நெருக்கம் காட்டி வருகிறார்

கருத்துகள் இல்லை: