வியாழன், 17 மார்ச், 2022

50% இட ஒதுக்கீடு: தலைவர்கள் வரவேற்பு!

 மின்னம்பலம் : அரசு மருத்துவர்களுக்கு உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் தமிழ்நாடு அரசின் 50 விழுக்காடு ஒதுக்கீட்டின் அடிப்படையில் இந்த ஆண்டு மருத்துவக் கலந்தாய்வு நடத்த அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. இந்தத் தீர்ப்புக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு தமிழக அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்தத் தீர்ப்பு சமூக நீதியைப் பாதுகாக்க வழங்கப்பட்டுள்ள மகத்தான தீர்ப்பு. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு சமூக நீதி வரலாற்றில் கிடைத்துள்ள இரண்டாவது மிகப் பெரிய வெற்றி என்றும் இதேபோல் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவைப் பறிக்கும் நீட் தேர்வு போராட்டத்திலும் சமூக நீதி நிச்சயம் வெல்லும். அதற்காக, திராவிட முன்னேற்றக் கழக அரசு தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.



பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, “தமிழ்நாட்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க இடைக்கால அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இது சமூக நீதிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். அகில இந்திய ஒதுக்கீடு என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள அனைத்து நிலை மருத்துவப் படிப்பு இடங்களை பிற மாநிலத்தவருக்கு ஒன்றிய அரசு தாரை வார்ப்பதால், அடுத்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பல துறைகளில் வல்லுநர்களே இல்லாத நிலை உருவாகி விடும். இது தவிர்க்கப்பட வேண்டும். இந்தக் குழப்பங்கள் அனைத்துக்கும் காரணம் அகில இந்திய ஒதுக்கீடுதான். அதனால், மருத்துவக் கல்வியில் அகில இந்திய ஒதுக்கீடு என்ற முறையை ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், “பொது சமூகத்தின் உடல் ஆரோக்கியத்தைக் காப்பாற்ற அயர்ச்சி இல்லாமலும், அக்கறையோடும், சுயநலம் கருதாமலும் பாடுபட்டு வருபவர்கள் அரசு மருத்துவர்கள். மருத்துவத்தின் உயர்கல்வியில் தங்களுக்கு இருந்த ஒதுக்கீட்டு உரிமையை இழந்த அவர்கள், நீண்ட போராட்டத்துக்குப் பிறகு இப்போது மீட்டிருக்கிறார்கள். மருத்துவ உயர்கல்வியில் அரசு மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீடு உண்டு என்ற தீர்ப்பை வரவேற்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஈபிஎஸ்ஸுக்கு மா.சுப்பிரமணியன் பதில்

இந்தத் தீர்ப்புக்கு அனைவரும் வரவேற்பு அளித்து வரும் நிலையில், இந்த 50% இட ஒதுக்கீடு எந்த அரசால் சாத்தியமானது என்பது குறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கும் இடையே விவாதம் நடைபெற்றுள்ளது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டரில், “சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு செய்து எனது தலைமையிலான அம்மா அரசு கொண்டு வந்த அரசாணை செல்லும் என்றும் அதற்கான கலந்தாய்வு நடத்த அனுமதியும் அளித்துள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை உளமார வரவேற்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் 100% இடங்களையும் ஒன்றிய அரசிடம் 2017ஆண்டில் தாரை வார்த்து, சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைத்தது அதிமுக அரசு. அரசு மருத்துவர் போராட்டத்தால், 2020 ஆண்டில் பெயரளவில் அரசாணையை வெளியிட்டு, அதையும் செயல்படுத்தாமல் டாக்டர்களுக்கு அதிமுக அரசு துரோகம் இழைத்தது.

உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அரசாணைக்கு உயிர்கொடுத்து, சமூகநீதியை நிலைநாட்டி உள்ளது திமுக அரசு. பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி சாதனை படைத்திருக்கிறது” என்று பதில் தெரிவித்திருந்தார்.

-வினிதா

கருத்துகள் இல்லை: