ஞாயிறு, 13 மார்ச், 2022

மீண்டும் ராகுல்: காங்கிரசுக்குள் குரல்கள்!

 மின்னம்பலம்   :   5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில் இன்று மார்ச் 13ஆம் தேதி அக்கட்சியின் உயரிய அமைப்பான காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாலை கூடியது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பு ராஜஸ்தான் மாநில முதல்வரான அசோக் கெலாட், "காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியை தவிர வேறு யாரும் வரமுடியாது. பிரதமர் மோடி என்றைக்கு ராகுல்காந்தியை குறிவைத்து தாக்க தொடங்கினாரோ அன்றைக்கே காங்கிரசின் தலைவர் ராகுல் காந்தி தான் என்பது அனைவருக்கும் புரிந்து விட்டது.


பாஜகவை எதிர்த்து கட்சியை வலிமையாக நிலைநிறுத்த ராகுல் காந்தியால் மட்டுமே முடியும்" என்று கூட்டத்திற்கு முன் தெரிவித்த அசோக் கெலாட் கூட்டத்திலும் இதையேதான் வலியுறுத்தி இருக்கிறார்.

ஏற்கனவே இருபத்தி மூன்று அதிருப்தி தலைவர்கள் அடங்கிய குழு முகுல் வாஸ்னிக் தலைவராக வேண்டும் என்று எடுத்த முயற்சி வெற்றி பெறவில்லை என்றும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் மீண்டும் ராகுல் காந்தியை கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று பலர் வலியுறுத்தியதாகவும் தெரிகிறது.

இதை உணர்ந்து காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு அருகே ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களும் மீண்டும் ராகுல்காந்தி கட்சியின் தலைவராக வேண்டும் என்று பதாகைகளை ஏந்தி நின்றனர்.
வேந்தன்

கருத்துகள் இல்லை: