சனி, 19 மார்ச், 2022

சுவிஸ் வங்கியில் பதுக்கப்பட்ட 214 பில்லியன் டாலர் கருப்புப் பணம்.. ரஷ்ய பணக்காரர்களுக்கு செக்..

 Prasanna Venkatesh - tamil.goodreturns.in  :  ரஷ்யா – உக்ரைன் மத்தியிலான பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தாலும் ரஷ்யா மீது உலக நாடுகள் விதித்துள்ள தடைகள் ஒருபோதும் நீங்காது.
இதனால் ரஷ்யா தொடர்ந்து சர்வதேச சந்தையில் இருந்து ஒதுக்கப்பட்டு இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் உலக நாடுகள் ரஷ்ய அரசு சொத்துக்களையும், ரஷ்ய பணக்காரர்களின் சொத்துக்களை வேக வேகமாகக் கைப்பற்றி வரும் நிலையில், தற்போது சுவிஸ் வங்கியில் ரஷ்ய பணக்காரர்கள் மற்றும் சக்திவாய்ந்தவர்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ள பணம் குறித்துச் சுவிஸ் வங்கி தகவல்களை வெளியிட்டுள்ளது.
சுவிஸ் வங்கி
சுவிஸ் வங்கிகள் எப்போதும் வாடிக்கையாளர்களின் விபரம் மற்றும் பணத்தின் அளவை வெளியிடாமல் ரகசியமாக வைத்திருக்கும்.
ஆனால் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள காரணத்தால் சுவிஸ் நியூட்டரல் நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இதன் மூலம் சுவிஸ் வங்கி அமைப்பு ரஷ்யர்களின் பணத்தின் இருப்பு அளவை வெளியிட்டுள்ளது.



214 பில்லியன் டாலர்
சுவிஸ் பேங்கர்ஸ் அசோசியேஷன் அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகள் அடிப்படையில் ரஷ்யாவின் ஆலிகர்சஸ் (Oligarchs) மற்றும் பணக்காரர்கள் சுவிஸ் நாட்டு வங்கிகளில் 150 முதல் 200 பில்லியன் சுவிஸ் பிராங்க்ஸ் வைத்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளனர். இது அமெரிக்க டாலர் மதிப்பில் 160 முதல் 214 பில்லியன் டாலராகும்.

தடை விதிக்க வேண்டும்

சுவிட்சர்லாந்தில் டெபாசிட் செய்யப்பட்ட ரஷ்ய பணக்காரர்களின் பணத்தின் மீது தடை விதிக்குமாறு சுவிட்சர்லாந்தின் ஜனநாயகக் கட்சியின் இணைத் தலைவரான மட்டீயா மேயர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சுவிஸ் வங்கியில் இருக்கும் பெரும் பகுதி பணம் ரஷ்ய அரசுக்கு நெருக்கமானவர்களின் பணம் எனவும் மட்டீயா மேயர் தெரிவித்துள்ளார்.

UBS, Credit Suisse

சுவிட்சர்லாந்த் நாட்டின் மிகப்பெரிய வங்கியான UBS, சுமார் 634 மில்லியன் டாலர் அளவிலான வர்த்தகத்தை ரஷ்யாவில் வைத்துள்ளது.

இது யூபிஎஸ் வங்கியின் மொத்த வர்த்தகத்தில் வெறும் 3 சதவீதம் மட்டுமே. இதேபோல் 2வது பெரிய வங்கியான கிரெடிட் சூசி ரஷ்யாவில் சுமார் 1.68 பில்லியன் டாலர் அளவிலான கடனை வைத்துள்ளது.

ரஷ்ய பணக்காரர்களுக்கு செக்

இந்தப் பணத்தைத் தற்போது சுவிஸ் வங்கிகள் வெளியேற்ற அனுமதிக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கும் நிலையில், உலக நாடுகள் ஏற்கனவே ரஷ்யா உடனான வெளிநாட்டுப் பணப் பரிமாற்றம் செய்யும் SWIFT முறைக்குத் தடை வித்துள்ளது.

இதனால் சுவிஸ் வங்கியில் இருக்கும் பணத்தைக் கட்டாயம் ரஷ்யாவுக்குக் கொண்டு செல்ல முடியாது. இது ரஷ்ய பணக்காரர்களுக்கும் பெரும் தடையாக மாறியுள்ளது.

 

கருத்துகள் இல்லை: