வெள்ளி, 18 மார்ச், 2022

உயர்க்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000!

 மின்னம்பலம் :  6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2022 -23 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டில், பள்ளிக் கல்வித் துறைக்கான அறிவிப்பை வெளியிட்ட நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “இல்லம் தேடி கல்வித் திட்டம் 38 மாவட்டங்களில் 1.8 லட்சம் தன்னார்வலர்களைக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக 30 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டம் வரும் நிதியாண்டில் ரூ 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு செயல்படுத்தப்படும்.
அரசுப் பள்ளி மாணவர்கள் புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில், அதாவது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை மற்றும் மருத்துவம் போன்ற பிரிவுகளில் கல்வி பெற உதவும் நோக்கோடு கல்வியில் பின்தங்கியுள்ள 10 மாவட்டங்களில் முன்மாதிரி பள்ளிகளை இந்த அரசு தொடங்கியுள்ளது.



வரும் நிதியாண்டில் மேலும் 15 மாவட்டங்களில் இத்தகைய முன்மாதிரி பள்ளிகள் தொடங்கப்படும். இத்திட்டத்திற்காக 125 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்

தமிழகத்தில் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் உயர்தர வசதிகளுடன் மாவட்ட மத்திய நூலகங்கள் ஏற்படுத்தப்படும். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சிகள் நடத்தப்படும்.

தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில் ஆண்டுக்கு நான்கு இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்படும். புத்தககாட்சிகள் மற்றும் இலக்கிய திருவிழாக்கள் வரும் ஆண்டில் 5.6 கோடி ரூபாயில் நடத்தப்படும்.

இம்மதிப்பீடுகளில் பள்ளிக் கல்வித் துறைக்கு 36,895.89 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

-பிரியா


கருத்துகள் இல்லை: