வியாழன், 17 மார்ச், 2022

காங்கிரசை வலுப்படுத்த கூட்டுத் தலைமை தேவை - காங். அதிருப்தி தலைவர்கள் வலியுறுத்தல்

மின்னம்பலம் : காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த அனைத்து நிலைகளிலும் முடிவெடுக்கக் கூடிய தலைமையை உருவாக்க வேண்டும் என்று ஜி-23 தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து, கட்சித் தலைவர் சோனியா காந்தியின் உத்தரவின் பேரில், அந்த 5 மாநில காங்கிரஸ் தலைவர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இதனிடையே காங்கிரஸ் கட்சிக்கு வலுவான தலைவர் தேவை என்று ஜி-23 என்ற காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் இல்லத்தில் ஜி-23 தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆனந்த் சர்மா, கபில்சிபல், பூபிந்தர் சிங், பிரித்திவிராஜ் சவான், மனிஷ் திவாரி, சசிதரூர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக இவர்கள் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து ஜி-23 தலைவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்து நிலைகளிலும் முடிவுகளை எடுக்கக்கூடிய அனைவரையும் உள்ளடக்கிய கூட்டு தலைமையை உருவாக்குவது மட்டுமே காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவதற்கான ஒரே வழி என்று நாங்கள் நம்புகிறோம்.

பாஜகவை எதிர்க்க காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவது அவசியமாகும். 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக நம்பிக்கைக்குரிய மாற்றுக் கட்சியை உருவாக்க வேண்டுமெனில் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்

-பிரியா

 

கருத்துகள் இல்லை: