

காங்கிரஸ் எம்.பியான ஹுசைன் தல்வாய் மாநிலங்களவையில், “வாகனப் பதிவு, ஓட்டுநர் உரிமத் தகவல்களை மொத்தமாக மத்திய அரசு விற்பனை செய்ய முயல்கிறதா? அப்படி முயன்றால், தகவல் விற்பனையால் எவ்வளவு வருவாய் கிட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது?” என்று கேள்வியெழுப்பியிருந்தார்.
இக்கேள்விக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், வாகனப் பதிவு விவரங்களையும், ஓட்டுநர் உரிம விவரங்களையும் விற்பனை செய்து மத்திய அரசு வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவித்தார். இத்தகவல்களை பயன்படுத்த 87 தனியார் நிறுவனங்களுக்கும், 32 அரசு நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் தகவல்களை விற்பனை செய்ததில் ரூ.65 கோடியை மத்திய அரசு ஈட்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பதிவேட்டில் சுமார் 25 கோடி வாகனப் பதிவுகளும், 15 கோடி ஓட்டுநர் உரிம பதிவுகளும் இருக்கின்றன. “வாகனப் பதிவு விவரங்களை ஒட்டுமொத்தமாக பகிர்ந்துகொள்வதற்காக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் கொள்கைகளையும் வகுத்துள்ளது. 2019-20ஆம் நிதியாண்டில் இத்தகவல்களை பெற விரும்பும் நிறுவனங்கள் ரூ.3 கோடி செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.
திருடப்பட்ட வாகனங்கள் தொடர்பான விவரங்களையும் தேசிய குற்றப்பதிவாணையத்திலிருந்து மத்திய அரசு தனது பதிவுகளில் ஏற்றியுள்ளது. ஏற்கெனவே இந்தியாவில் தகவல் தனியுரிமை சிக்கல்கள் மிகுதியாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில் மக்களின் தகவல்களை அரசே விற்பனை செய்வதாக தெரியவந்துள்ளது. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 21இன் கீழ் தனியுரிமை மக்களின் அடிப்படை உரிமை என்று உச்ச நீதிமன்றமே தெரிவித்துள்ளது.
மத்திய அரசு பகிர்ந்துகொண்ட தகவல்கள் என்ன? வாகனப் பதிவு எண், எஞ்சின் எண், வாகனத்தின் மாடல், வாகனத்தின் நிறம், டீலரின் பெயர், வாகனத்தின் குதிரைத் திறன், காப்பீட்டு நிறுவனத்தின் பெயர், காப்பீட்டின் காலாவதி நாள், செலுத்தப்பட்ட வரியின் காலாவதி நாள் உள்ளிட்ட விவரங்களை மத்திய அரசு விற்பனை செய்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக