செவ்வாய், 9 ஜூலை, 2019

பலாலியில் இருந்து பெங்களூரு, கொச்சின், மும்பை மற்றும் ஹைதராபாத் ... விமான சேவையில் தமிழகம் புறக்கணிப்பு

பலாலியில் இருந்து விமான சேவை – புறக்கணிக்கப்படும் தமிழக விமான நிலையங்கள் வீரகேசரி : சிறிலங்காவின் மூன்றாவது அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்படும் பலாலி விமான நிலையத்தில் இருந்து, முதற்கட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ள விமான சேவைகளில், தமிழ்நாட்டில் உள்ள எந்த விமான நிலையமும் இடம்பெறவில்லை எனத் தெரியவருகிறது. பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்து, முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள திருச்சி, மதுரை, சென்னை போன்ற விமான நிலையங்களுக்கு விமான சேவைகள் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.
 இதற்கமைய, கடந்த 05ஆம் நாள் பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. சிறிலங்காவின் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க விமான நிலைய அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

2.25 பில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த அபிவிருத்தித் திட்டத்துக்கு இந்தியா 300 மில்லியன் ரூபாவை கொடையாக வழங்கவுள்ளது.
முதற்கட்டமாக, 950 மீற்றராக உள்ள பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதை மீளமைப்புச் செய்யப்படவுள்ளது. இரண்டாவது கட்டமாக பெரிய விமானங்களை தரையிறக்கக் கூடிய வகையில் ஓடுபாதையின் நீளம் 2.3 கி.மீற்றராக விரிவாக்கப்படவுள்ளது.
இதையடுத்து, பலாலி விமான நிலையத்துக்கு மத்தல மற்றும் கொழும்பு விமான நிலையங்களில் இருந்து உள்நாட்டு மற்றும் வாடகை விமானங்கள் இயக்கப்படும்.
அத்துடன், முதற்கட்டமாக பெங்களூரு, கொச்சின், மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு நேரடி விமான சேவைகள் இயக்கப்படும் என்றும், 75 ஆசனங்களுக்குக் குறைவான ஆசனங்களைக் கொண்ட விமானங்களே சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
வடபகுதியில் இருந்து தமிழ்நாட்டுக்கே அதிகளவானோர் பயணம் மேற்கொள்ளப்படும் வாய்ப்புகள் உள்ளன.
ஆனாலும், தமிழ்நாட்டின், சென்னை, திருச்சி, மதுரை போன்ற விமான நிலையங்களைத் தவிர்த்து, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களுக்கே முதலில் பலாலியில் இருந்து விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: