புதன், 10 ஜூலை, 2019

ஹாங்காங் மசோதாவின் கதை முடிந்தது நிர்வாக தலைவர் அறிவிப்பு

சர்ச்சைக்குரிய ஹாங்காங் மசோதாவின் கதை முடிந்தது நிர்வாக தலைவர் அறிவிப்புdailythanthi.com : சர்ச்சைக்குரிய அந்த மசோதாவின் கதை முடிந்து விட்டது என நிர்வாக தலைவர் கேரி லாம் நேற்று அறிவித்தார். ஹாங்காங், சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் ஹாங்காங் இருந்து வருகிறது. அங்கு குற்ற வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைப்பதற்காக கைதிகள் பரிமாற்ற சட்டத்தை திருத்த ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் இதை மக்கள் ஏற்காமல், இதுவரை இல்லாத அளவில் பெரும் போராட்டங்களை நடத்தி வந்தனர். இதனால் ஹாங்காங் நிர்வாகம் பணிந்தது.
மசோதாவை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. ஆனாலும் மசோதாவை திரும்பப்பெறும் வரையில் போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் உறுதிபட கூறினர். இது ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரி லாமுக்கு பெருத்த தலைவலியை கொடுத்து வந்தது.

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய அந்த மசோதாவின் கதை முடிந்து விட்டது என நிர்வாக தலைவர் கேரி லாம் நேற்று அறிவித்தார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் பேசுகையில், “அந்த மசோதா விஷயத்தில் அரசாங்கத்தின் நேர்மை குறித்து இன்னும் சந்தேகப்படுகிறார்கள். சட்டசபையில் மீண்டும் அந்த மசோதா தொடர்பான பணியில் ஈடுபடுவார்களா என்று சந்தேகிக்கிறார்கள். நான் வலியுறுத்தி சொல்கிறேன். அப்படி எந்த ஒரு திட்டமும் இல்லை. அந்த மசோதாவின் கதை முடிந்துவிட்டது” என கூறினார்.
இதையடுத்து ஹாங்காங் போராட்டங்கள் முடிவுக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் “இன்னும் எங்களது 5 கோரிக்கைகளுக்கு நிர்வாக தலைவர் கேரி லாம் மற்றும் அவருடைய அரசு செவி சாய்க்கவில்லை. எனவே எங்களது போராட்டம் தொடரும்” என்று போராட்ட அமைப்பான சிவில் மனித உரிமை பேரவை அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: