புதன், 10 ஜூலை, 2019

தினமும் உதயநிதியை கூட்டம் கூட்டமாக வந்து வாழ்த்து தெரிவிக்க வேண்டும் ... வாய் மொழி உத்தரவு!

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக இடப்பட்ட உத்தரவு!மின்னம்பலம் : அலுவலக வைஃபை ஆன் செய்ததும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.
“திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்டு ஒரு ஒரு வாரம் ஆகிறது. அதற்குள் இரு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்களை மாற்றியிருக்கிறார். மாநில நிர்வாகிகளையும் மாற்றுவது பற்றி ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார். அதேநேரம் திமுக இளைஞரணி அலுவலகமான அன்பகத்தில் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தினந்தோறும் பல்வேறு மாவட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் வந்தபடியே இருக்கிறார்கள்.
இதுகுறித்து தலைமையிடம் இருந்து அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் வாய்மொழி உத்தரவு ஒன்று பறந்திருக்கிறது. அதாவது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருக்கும் திமுக மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் தினந்தோறும் கூட்டம் கூட்டமாக வந்து உதயநிதியை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு. இதனால் அன்பகத்தில் தினந்தோறும் நிர்வாகிகள் கூட்டம் வந்துகொண்டே இருக்கிறது.

ஏற்கனவே உதயநிதி நியமனம் குறித்து சில மாவட்டச் செயலாளர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்து, தான் மேற்கொள்ள இருக்கும் சுற்றுப் பயணத்தின் போது உதயநிதியே நேரில் சென்று சந்தித்து சமாதானப்படுத்த திட்டமிட்டிருக்கிறார். இதற்கிடையில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் எல்லாம் உதயநிதியை நேரில் வந்து சந்தித்து வாழ்த்த வேண்டும் என்பது நிர்வாகிகளிடையே பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
’தலைவர் கலைஞரை அவர் பிறந்தநாள்ல நாங்களாதான் பார்க்க வருவோம். தளபதி செயல் தலைவர் ஆனபோது கூட இப்படி எந்த ஒரு கட்டளையும் பிறப்பிக்கப்படவில்லை. ஆனா உதயநிதியைப் பார்க்க இளைஞரணி மட்டுமில்லாமல் எல்லா நிர்வாகிகளும் வரணுமுனு சொல்றது எதுக்காகனு புரியலை. இளைஞரணித் தலைவர் பதவியிலேர்ந்து ஸ்டாலின் விலகி செயல் தலைவரானபோது இளைஞரணி இணைச் செயலாளராக இருந்த வெள்ளக்கோவில் சாமிநாதனை இளைஞரணி செயலாளர் ஆக்கினார் தலைவர். அப்பவே உதயநிதியை துணைச் செயலாளராக்கி, இப்ப செயலாளர் பொறுப்புக்குக் கொண்டு வந்திருந்தா பலருக்கும் உறுத்தல் வந்திருக்காது. ஆனா நேரடியா இளைஞரணிச் செயலாளர்னு நியமிச்சதுதான் சில மாவடடச் செயலாளர்களுக்கு உறுத்தலை ஏற்படுத்தியிருக்கு.
உதயநிதி போட்ட முதல் கூட்டத்திலேயே பல பேர் மாவட்டச் செயலாளர்கள் மேலதான் குறை சொல்லி பேசியிருக்காங்க. அதுக்குக் காரணம் இருக்கு. இன்னிக்கு பல மாவட்டங்கள்ல இளைஞரணி அமைப்பாளர்கள்தான் மாவட்டச் செயலாளர்களுக்கு குடைச்சல் கொடுத்துக்கிட்டிருக்காங்க. இதை மாவட்டச் செயலாளர்கள் ஓரளவுக்கு மேல தலைமைக்கு வெளிப்படுத்த முடியாம திணறிக்கிட்டிருக்காங்க. வெள்ளக்கோவில் சாமிநாதன் இருந்தப்பவே இப்படின்னா, இப்ப நாற்காலியில நேரடியா உதயநிதியே வந்து உட்கார்ந்த பிறகு இளைஞரணி அமைப்பாளர்களோட வீரியம் அதிகமாயிடுச்சு. என்னதான் இருந்தாலும் கட்சியோட அணிகள் ஒண்ணுதான் இளைஞரணி. ஆனா, இப்ப கழக நிர்வாகிகளு(பேரன்ட் பாடி)க்கு இணையா இளைஞரணி நிர்வாகிகளும் ஒவ்வொரு மாவட்டத்துலயும் அரசியல் பண்ணிக்கிட்டிருக்காங்க. இதை உதயநிதி எப்படி கையாளப் போறார்னு தெரியலை’ என்கிறார்கள்.
இதுகுறித்து திமுக இளைஞரணி நிர்வாகிகள் மத்தியில் இதுபற்றி விசாரித்தபோது அவர்கள் வேறொரு விளக்கத்தைச் சொல்கிறார்கள். ‘உதயநிதி இளைஞரணி செயலாளராகதான் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் அந்தப் பணியை மட்டும்தான் பார்ப்பார். அதேநேரம் கடந்த தேர்தலில் அவர் தமிழ்நாடு முழுதும் சுற்றுப் பயணம் செய்து பிரசாரம் செய்தபோது ஒவ்வொரு ஒன்றிய செயலாளரிடம் கூட தனிப்பட்ட முறையில் பேசியிருக்கிறார். தலைவரின் மகன் என்ற இடைவெளியெல்லாம் காட்டாமல் சக தொண்டர் போலத்தான் அவர்களிடம் பேசினார், பழகினார். அதனால் இப்போது உதயநிதி இளைஞரணிச் செயலாளர் ஆன நிலையில், அவரோடு தேர்தல் காலத்தில் பழகியவர்கள் இப்போது அவர் ஒரு பதவிக்கு வந்துவிட்டதால் தானாகவே பார்க்க வருகிறார்கள். ஒரே நாளில் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வந்துவிட்டால் உதயநிதியை சந்திக்க இயலாமல் போய்விடுமே என்பதால்தான் சந்திப்பு குறித்த தகவல்கள் முன்கூட்டியே பெறப்பட்டு சில ஒழுங்குகள் செய்யப்படுகின்றன. அவ்வளவுதான்’ என்கிறார்கள். அறிவாலயத்தை விட அன்பகம்தான் இப்போது பரபரப்பாகியிருக்கிறது” என்ற செய்திக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: